ஞாயிறு, 11 ஜனவரி, 2015

இலங்கை : ஜோதிடர்களின் அளப்பரிய சேவையால்தான் இவ்வளவும் நடந்தது?

கை: எதற்கெடுத்தாலும் நாள் நட்சத்திரம் பார்க்கும் பழக்கம் கொண்ட ராஜபக்சேவுக்கு எதை எப்படிச் செய்ய வேண்டும், என்று செய்ய வேண்டும்  என்பது முதல் கொண்டு அனைத்திலும் ஆலோசனை கூறி வந்த ஜோசியர் பேச்சைக் கேட்டுத்தான் 2 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தலை நடத்தி புதைகுழியில் விழுந்து புதைந்து போய் விட்டார் ராஜபக்சே. நம்ம ஊர் அரசியல் தலைவர்கள் பலர் ஜோசியக்காரர்களை நம்பித்தான் நாட்களைக் கடத்தி வருகிறார்கள். அதேபோலத்தான் ராஜபக்சேவும். அவரும் ஜோசியம், நாள் நட்சத்திரம், அதிர்ஷ்டம், நல்ல நேரம் என அனைத்திலும் நம்பிக்கை கொண்டவர். அவரது ஆஸ்தான அதிர்ஷ்டக் கணிப்பாளராக பல காலமாக திகழ்ந்து வருபவர் சுமனதாச அபயகுணவர்த்தனா என்பவர் பார்க்க தெலுங்குப் பட காமெடியன் போல இருக்கும் இவர்தான் ராஜபக்சேவுக்கு நல்ல நேரம், கெட்ட நேரம் எது என்பதைக் கணித்துக் கூறி வந்தவர். நல்ல சொகுசான, வசதியான ஜோசியரான இவர்தான் 2 ஆண்டுகளுக்கு முன்பே முன்கூட்டியே தேர்தலை நடத்துமாறு ராஜபக்சேவுக்கு ஆலோசனை கூறியதாக சொல்கிறார்கள்.
இவரை நம்பித்தான் ராஜபக்சேவும் முன்கூட்டியே தேர்தலை வைத்தாராம். ஆனால் இப்போது உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா நிலைக்கு ஆளாகி விட்டார் ராஜபக்சே. ராஜ ஜோதிடர் என்ற செல்லப் பெயர் கொண்டவர் இந்த அபயகுணவர்த்தனா.
பல வருடங்களாக இவர் ராஜபக்சேவின் ஜோதிட ஆலோசகராக இருந்து வந்தார். இவர் சொல்லும் வார்த்தையை ராஜபக்சே அப்படியே ஏற்பாராம். ஜோதிடம் மட்டுமல்லாமல் எதிர் அரசியல்வாதிகளின் கெட்ட நேரத்தையும் கணித்து அதற்கேற்ப ராஜபக்சேவுக்கு ஆலோசனை சொல்வதில் இவர் கில்லாடியாம். இந்த பாயிண்ட்தான் ராஜபக்சேவுக்கு ரொம்பப் பிடித்துப் போய் விட்டதாம்.
ராஜபக்சே வேட்பு மனு தாக்கல் செய்யும் நேரத்தைக் கூட இவர்தான் கணித்துக் கொடுத்தார். மேலும் வேட்பு மனுவைக் கொடுக்கும்போது தேர்தல் ஆணையரின் வலது பக்கமாக மனுவை கொடுக்க வேண்டுமா, இல்லை இடது பக்கமாக இருந்து கொடுக்க வேண்டுமா என்பதைக் கூட ராஜபக்சேவுக்கு இவர் அறிவுறுத்தியதாகவும் ஒரு தகவல் உள்ளது.
ஆனால் நட்ட நடுவில் ராஜபக்சேவை நோக்கி சனியன் படு வேகமாக வந்து பீடித்துக் கொண்டதைப் பற்றி அபயா எதையும் கணிக்காமல் போய் விட்டதுதான் கொடுமையானது! தேர்தலுக்கு முன்பு அபயகுணவர்த்தனா அளித்த ஒரு பேட்டியல் இதுவரை நான் அதிபரிடமிருந்து எந்தத் திட்டும் வாங்கியதில்லை.
காரணம், தவறாக எதையும் நான் கணித்துக் கூறியதில்லை என்று கூறியிருந்தார்.
ஆனால் தற்போது மொத்தமாக ராஜபக்சேவின் அரசியல் வாழ்க்கையை இவரது வாக்கு கவிழ்த்து மூடி விட்டதுதான் சோகமே. இப்படித்தான் 2009ம் ஆண்டு சந்திரஸ்ரீ பண்டாரா என்ற ஒரு சிங்கள ஜோதிடர், ராஜபக்சே விரைவில் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று ஜோசியம் கூறி விட்டார்.
அவ்வளவுதான் உடனடியாக வெள்ளை வேனில் ஏற்றி அவரைத் தூக்கிக் கொண்டு போய் விட்டது போலீஸ். அங்கு வைத்து சரியான விசாரணை நடந்தது. பின்னர்தான் அவரை வெளியே விட்டனர்.
அதன் பின்னர் அவர் ராஜபக்சே குறித்து எதுவுமே பேசுவதில்லை. தற்போது அபயகுணவர்த்தனாவுக்கு ராஜபக்சே என்ன மாதிரியான பரிசு கொடுப்பார் என்பதுதான் புரியவில்லை.. இருப்பினும் ராஜபக்சேவை விட்டு ஆட்சி, அதிகாரம் போய் விட்டதால் உயிர் அபாயம் ஏதும் அபயாவுக்கு ஏற்படாது என்று மட்டும் அவர் உறுதியாக நம்பலாம்! nakkheeran.in

கருத்துகள் இல்லை: