வியாழன், 24 நவம்பர், 2011

கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்க இருந்ததை, நீங்கள்தான் கெடுத்தீர்கள்


“கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்காததன் காரணம் நீங்கள்தான்” என்று பந்தை தி.மு.க. பக்கமாக காங்கிரஸ் தள்ளி விட்டிருப்பதாக தெரியவருகின்றது. “நாம் உங்களுக்காக பாதையை திறந்து விட்டிருக்கிறோம். ஆனால் உங்கள் வக்கீல்களால் அதில் சரியாக போக முடியவில்லை” என்று சமீபத்தில் டில்லியில் இருந்து சொல்லப்பட்டதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் சொல்லி மனம் வருந்தியதாக தி.மு.க. வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
இதில் ஓரளவுக்கு உண்மையும் உள்ளதாகவே கருணாநிதி நினைக்கிறாராம். அத்துடன் இதே மனநிலையில் ராசாத்தி அம்மாளும் உள்ளதாகவும், கனிமொழிக்காக ஆஜராகும் வக்கீல்களை ஒட்டு மொத்தமாக மாற்றி விடுமாறு அவர் கருணாநிதிக்கு பிரஷர் கொடுத்து வருவதாகவும் தெரியவருகின்றது.
கனிமொழி கைது செய்யப்பட்டவுடன் அவருக்கு வாதாட ஏராளமான பணச் செலவில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானியை தி.மு.க. தரப்பு அமர்த்தியிருந்தது. அவர் ஒரு கேஸை எடுத்துக் கொண்டால், ஜெயித்துக் காட்டாமல் விடமாட்டார் என்ற பொதுவான கருத்து ஒன்று உள்ளது.
ஆனால் கனிமொழி வழக்கில் அது பொய்த்துப் போனது. ராம் ஜேத்மலானி வாதாடியும் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
அதே நேரத்தில் அவர் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காக கேஸை ஆபத்தான திசையிலும் திருப்பிவிட்டு போனார். “கனிமொழிக்கு ஏதும் தெரியாது, எல்லாமே ஆ.ராசா செய்ததுதான்” என்று வாதாடி ஆ.ராசாவை மேலும் இறுக வைத்ததுதான் ராம் ஜேத்மலானி செய்த ஒரு கைங்கார்யம்.
இவர் போகும் போக்கு நல்லாயில்லை என்று, மூத்த வழக்கறிஞர் அல்டாப் அஹமதுவை வாதாட அழைத்து வந்தார்கள். இவரும் கை நிறைய பீஸ் வாங்கும் வெற்றிகரமான வக்கீல். அவர் வந்து வாதாடியும் ஜாமீன் கிடைக்கவில்லை.
“கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம்” என்று சி.பி.ஐ. தெரிவித்த பின்னரும், ஜாமீன் பெற முடியவில்லை என்பது, உங்கள் வழக்கறிஞர்களில் குறைபாடுதான் என்று காங்கிரஸ் தரப்பு சொல்வதை தி.மு.க. தலைமை நம்பத் தொடங்குவதாக தெரிகின்றது.
தற்போது இதே வழக்கில் ஜாமீனில் விடப்பட்டுள்ள ஐவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையிலும், அவர்களுக்கு கிடைத்திருப்பது அவர்களுக்காக ஆஜராகிய வக்கீல்களின் திறமைதான் என்ற கருத்தும் தி.மு.க. தலைமையிடம்  வலுப்பெற்று வருகிறதாம்.
இதற்காக சென்னையிலும் டில்லியிலும் கனிமொழி தரப்பினர் கூடிக்கூடி பேசிக் கொள்கின்றனர். நாளை கனிமொழியின் ஜாமீன் கோரிக்கை மனு கோர்ட்டுக்கு வரும்போது, வக்கீல்களை மாற்றப் போகின்றார்களா இல்லையா என்பதுதான் தெரியவில்லை.

கருத்துகள் இல்லை: