வெள்ளி, 25 நவம்பர், 2011

ஜெயலலிதா ஆட்சியா, இல்லை ஹிட்லர் ஆட்சியா?: பிரேமலதா கேள்வி!

Premalatha Vijayakanth
சென்னை: அதிமுகவுடன் ஏன் கூட்டணி வைத்தோம் என்று ஒவ்வொரு நிமிடமும் வருத்தப்படுகிறோம். தமிழகத்தில், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களுடைய ஆட்சி நடக்கிறதா? அல்லது ஹிட்லர் ஆட்சி நடக்கிறதா என்றே தெரியவில்லை என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா.

சென்னையில் நேற்று நடந்த தேமுதிக உண்ணாவிரதப் போராட்டத்தின்போது பிரேமலதா விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
அதிமுகவுடன் கூட்டணி வைப்பது என்பது மக்களுக்காக கட்சி எடுத்த முடிவு. ஆனால் இன்றைக்கு அந்த கட்சியுடன் ஏன் கூட்டணி வைத்தோம் என்று ஒவ்வொரு நிமிடமும் வருத்தப்பட வேண்டியிருக்கிறது. அதிமுக செயல்கள் அப்படி இருக்கிறது.

யாருடனும் கூட்டணி இல்லை. மக்களுடன் தான் கூட்டணி என்று கேப்டன் உறுதியாக இருந்தார். இந்த உறுதியை முதல் முறையாக மக்களுக்காக விட்டுக்கொடுத்தார். 6 மாத காலம் பொறுத்திருங்கள் என்று கேப்டன் சொன்னார். ஏன் சொன்னார். யாரையும் எடுத்த எடுப்பிலேயே குறை சொல்ல முடியாது. அவர்களுக்கு 6 மாதம் டைம் கொடுக்கலாம். அதற்குள் அவர்கள் ஏதாவது நல்லது செய்வார்கள் என்று கேப்டன் சொன்னார். ஆனால் இங்கு நடப்பது கொண்டிருப்பது என்ன.

6 மாத காலத்தில் தமிழகம் சந்தித்தது என்ன. சமச்சீர் கல்வித் திட்டம் மூலமாக முதல் அடி. அதன் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் ஒட்டுமொத்த மாணவர்கள். பெற்றோர்கள், ஆசிரியர்கள். என்ன படிக்க வேண்டும் என்று தெரியாமல் இன்றைக்கு மாணவர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அச்சடிக்கப்பட்ட புத்தங்கள் மூளையில் முடங்கிக்கிடக்கின்றன. இதனால் தமிழக அரசுக்கு 200 கோடி ரூபாய் விரயம்.

அடுத்தததாக புதிய தலைமைச் செயலகத்தை உலகத் தரத்தில் மருத்துவமனையாக மாற்றுவோம் என்று சொன்னார்கள். சரி நல்லத் திட்டம் என்று நினைச்சோம். ஆனால் ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து கட்டிய அந்தக் கட்டிடம் இன்றைக்கும் அதற்கான வேலை எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை. அந்த ஆயிரம் கோடி ரூபாய் என்பது திமுக அறக்கட்டளையில் இருந்து வந்ததல்ல. அதிமுக அறக்கட்டளையில் இருந்து வந்ததல்ல. மக்களுடைய வரிப்பணத்தில் செலவு செய்து, தமிழ்நாட்டிற்கும் ஒரு சிறந்த அடையாளமாக நல்ல தரமான தலைமைச் செயலகம் வேண்டும் என்பதற்காக கட்டப்பட்டது. அந்த கட்டிடம் முடக்கப்பட்டு யாருக்கும் பயன்படாதபடி முடக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அதிமுக.

அதற்கடுத்ததாக அண்ணா நூலகத்தை, குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்போகிறோம் என்று அறிவித்தார்கள். ஒன்று மட்டும் நாங்கள் கேட்கிறோம். சென்னை நகரில் புறம்போக்கு இடங்களே இல்லையா. குப்பை கூளங்கள் இல்லாத இடங்களே இல்லையா.

இன்றைக்கு செயலாற்றிக் கொண்டிருக்கும் கட்டிடத்தின் மேல் கவனம் செலுத்தும் ஜெயலலிதா அவர்கள், நல்ல திட்டங்களை கொண்டு வாருங்கள். மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துங்கள். ஆனால் ஏன் இந்த பழிவாங்கும் எண்ணத்தோடு, ஏற்கனவே நல்லப்படியாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற அந்த கட்டிடங்கள் மீது உங்களுடைய காழ்ப்புணர்ச்சியை காட்டுகின்றீர்கள் என்பதை உண்ணாவிரத்தின் மூலம் கண்டிக்கிறோம்.

இலவச திட்டங்களை மக்களாகிய யாரும் கேட்கவில்லை. இவர்களாகவே அறிவித்தார்கள். கிரைண்டர், மிக்ஸி கொடுக்கிறோம் என்று. அது யாருக்கு தேவை. அந்த ரூபாய் மூலம் மக்களுக்கு அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்யலாம். மக்களுக்கு தேவையான நல்லது செய்ய வேண்டும்.

இன்றைக்கு மிகப்பெரிய பிரச்சனை பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு. இந்த இரண்டுமே தமிழ்நாட்டு மக்களுக்கு மாபெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. இன்று காலை முதல் பஸ் போய்க்கொண்டிருக்கிறது. இதில் அம்பானி போகவில்லை. விஜய் மல்லையா போகவில்லை. போகிறவர்கள் அனைவருமே ஏழை எளிய மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கிற மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தினக்கூலிக்கு போகிறர்வர்களை இவர்கள் நேரடியாக தாக்கியிருக்கிறார்கள்.

பால் விலை உயர்வால் குழந்தைக்கு மட்டுமல்ல அனைவருக்குமே பெரும் கஷ்டம் உருவாகியிருக்கிறது. அடுத்து மின்சார கட்டணத்தையும் உயர்த்தப்போகிறோம் என்று தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்துகொண்டிருக்கிறது.

அதேபோல் கூடங்குளம் பிரச்சனை ஆரம்பித்து 100வது நாளை எட்டியுள்ளது. 100 நாள் எங்களுடைய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்று பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த அரசாங்கம், 100வது நாட்களாக உண்ணாவிரம் இருந்து போராட்டம் நடத்தி வரும் கூடங்களும் மக்களுக்கு இன்றைக்கு வரைக்கும் ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்தி கொடுத்ததா இந்த அரசு.

மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரம் பேரை ஒரே நாளில் வீட்டிற்கு அனுப்பியிருக்கிறார்கள். ஏன் இதுமாதிரி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கொடுங்கள். ஒரே கையெழுத்து மூலம் 13 ஆயிரம் குடும்பத்தினரை நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறது இந்த அதிமுக. இது மிகவும் வன்மையாக கண்டிக்கக் கூடிய செயல். நீங்கள் திட்டம்போட்டு செய்து கொண்டிருந்தாலும், அதை தடுக்க சட்டம் இருந்துகொண்டுதான் இருக்கு.

சமச்சீர் கல்வியை நீங்கள் திட்டம்போட்டு உங்களுடைய காழ்ப்புணர்ச்சியை காட்டுனீர்கள். ஆனால் சட்டம் அதை தடுத்து சமச்சீர் கல்வியை உடனடியாக மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதேபோல் தான் இன்றைக்கு மக்கள் நலப்பணியாளர்களுக்கு சட்டம் ஒரு நல்ல தீர்ப்பை கொடுத்து,. 13 ஆயிரம் குடும்ங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

ஒரே நாளில் அறிவிக்கிறார்கள். இரவோடு இரவாக அறிவிக்கிறார்கள். எதற்காக இந்த பயம். ஒரு டைம் கொடுத்து அறிவித்தால், மக்கள் போராட்டம் நடத்தி அந்த விலை உயர்வை செயல்படுத்தாமல் போய்விடுமே என்று பயம். இரவு அறிவிக்கிறார்கள் காலையில் பஸ் கட்டண உயர்வு. பஸ் கட்டணம் 20 ரூபாய் என்று எடுத்து வந்தவர்களுக்கு 40 ரூபாய் என்று சொன்னால், போய் எடுத்து வர வேண்டும். இல்லையென்றால் யாரிடம் கடன் வாங்குவார்கள் என்று நினைக்காமல் ஒரு சின்ன மனிதாபிமானம் இல்லாமல் எப்படி இவர்களால் அறிவிக்க முடிகிறது.

புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களுடைய ஆட்சி நடக்கிறதா? ஹிட்லர் ஆட்சி நடக்கிறதா இந்த தமிழ்நாட்டில் என்று தெரியாத வண்ணம் மாபெரும் ஒரு கண்டனத்துக்குரிய ஒரு திட்டத்தை இரவோடு இரவாக அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன?

புரட்சித் தலைவி என்று சொல்லிக்கொள்கிறீர்கள். உண்மையில் அந்த புரட்சிக்கு உரியவராக நீங்கள் இருந்தால், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வை அறிவித்திருக்க வேண்டியதுதானே. உள்ளாட்சித் தேர்தல் முடிந்துவிட்டது. அடுத்த தேர்தல் வர நேரம் இருக்கிறது என்ற ஒரு தைரியத்தில் இந்த விலை உயர்வை அறிவித்துள்ளீர்கள்.

மம்தா பானர்ஜி ஒரு தைரியமான பெண். அவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்திய அரசாங்கத்தின் எந்த உதவியும் எங்களுக்கு தேவையில்லை என்று தைரியமாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்கள்.

உங்களை நீங்களே தைரியமானவர் என்று சொல்லிக்கொள்ளும் ஜெயலலிதா அவர்களே அறிவியுங்கள் நாங்கள் ஒன்றும் மத்திய அரசாங்கத்தை நம்பி இல்லை. ஒரு பைசா கூட நீங்கள் கொடுக்க தேவையில்லை. தமிழ்நாட்டு மக்களை எல்லா வகையிலும் எங்களால் காப்பாற்றிக் கொண்டு வர முடியும் என்று நீங்கள் சொல்லுங்கள். ஏன் இதையெல்லாம் செய்யாமல் மக்கள் மீது உங்கள் பிரச்சனையை சுமத்துகின்றீர்கள்.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறந்து ஒட்டு மொத்த தமிழக இளைஞர்கள் அதள பாதாளத்தில் தள்ளிக்கொண்டிருக்கின்ற இந்த அரசாங்கம் தற்போது உயர்தர மதுபானங்களை விற்கப்போவதாக அறிவித்துள்ளார்கள்.

இதெல்லாம் எதற்காக? மிடாஸ் என்கிற அவர்களுடைய கம்பெனி 100 சதவீதம் லாபகரமாக செயல்பட வேண்டும் என்பதற்காக மட்டுமே தவிர, உண்மையிலுமே அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அக்கறை கிடையாது.

பேருந்து வசதிகளை உருவாக்கிக்கொடுக்க வேண்டியது ஒரு அரசாங்கம். வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது ஒரு அரசாங்கம். கலர்களை மாற்றிவிட்டு, சொகுசுப் பேருந்து, தாழ்தள பேருந்து என்று மாற்றிவிட்டு பஸ் கட்டணத்தை ஏற்றியுள்ளார்கள். கட்டணத்தை உயர்த்திய நீங்கள், அந்த பேருந்தில் வசதியாக பயணம் செய்ய ஏற்பாடு செய்தீர்களா.

முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஹெலிகாப்டரில் சுற்றுவதை விட்டுவிட்டு, ஒரு காரில் இங்கு உள்ள ஒவ்வொரு தெருவுக்கும் வரவேண்டும். அதற்காகத் தான் ஒட்டு மொத்த தமிழக மக்களும் உங்களை மெஜாரிட்டி தந்து உங்களை ஜெயிக்க வைத்துள்ளார்கள். எல்லா சாலைகளிலும் சென்று பாருங்கள். சாலைகள் சரியாக இருக்கிறதா. பேருந்தில் போகிறவர்கள் பாதுகாப்பாக போகிறார்களா என்று பாருங்கள் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

முன்னதாக விஜயகாந்த் பேசுகையில் சினிமா டயலாக்கைக் குறிப்பிட்டு படு ஜாலியாகப் பேசினார்.

அவர் பேசுகையில்,

எங்கப் பார்த்தாலும் கொள்ளை. கொள்ளை. எங்க பார்த்தாலும் ஊழல், ஊழல். முடிந்த அளவுக்கு போராடுவேன். தப்பு என்றால் தப்பு. எங்களால் தான் ஜெயித்தோம் என்று சொன்னீர்கள். ஒரு வருஷத்துக்கு முன்னாடி மின்னணு ஓட்டு வேண்டாம் என்று சொன்னீர்கள். இப்ப ஒரு ஓட்டு முரசில் போட்டால், பத்து ஓட்டு இலைக்கு போகுது. அது சொன்னால் ஒத்துக்குவாங்களா. நாங்கள் வரலை. ஜெயிச்சா ஜெயிச்சுக்கோ. தோல்வின்னா தோல்வி.

ஆவின் பாலை விட தனியார் பால் அதிகமாக விற்பனையாகிறது. ஆவினில் பாலை கொடுத்தால் லேட்டாக காசு வருகிறது. தனியாரில் பாலை கொடுத்தால் உடனே காசு வருகிறது. அதனால் தான் ஆவினில் கொள்முதல் குறையுது. தனியாரில் கொள்முதல் அதிகமாகிறது. தலைமையில் இருந்து, அதிகாரிகள் வரை எல்லாம் கை நீட்டுறாங்க.

பால் விலையை உயர்த்திவிட்டு, அப்படியே அசோக வன சீதை மாதிரி பேசுகிறார். என்னை வாழவைக்கும் தாய்க்குலங்களே என்று சொல்லுகிறீர்களே, அந்த தாய்குலத்துக்குத்தான் பால் விலை ஏற்றமா? இல்லை பஸ் கட்டண ஏற்றமா?

ஓபிஎஸ், செங்கோட்டையனும் அம்மா அம்மா என்று சொல்லுவாங்க. என்னால அப்படி சொல்ல முடியாது. என்னால கையை கட்டி வாயைப் பொத்தி உட்கார முடியாது. சட்டசபையில் ஒருத்தர் எழுந்து நின்று அந்த அம்மாவைப் பார்த்தவுடன் உட்கார்ந்துவிடுவார். தரையில் விழுந்து கும்பிடுகிறார்கள். எல்லாம் ஒரு ஐந்து வருஷம் தான். இதுக்கு முன்னாடி எப்படி இருந்தாங்க. எனக்கு எல்லாம் தெரியும்.

எல்லாம் அரசியல்ல சகஜம். உண்மையில் சொல்லப்போனால் அண்ணன் கவுண்டமனி சொல்வதைப்போல அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா. இவ்வளவு கேவலமாக அரசியல் நடந்துக்கொண்டிருக்கு என்றார் அவர்.

கருத்துகள் இல்லை: