புதன், 23 நவம்பர், 2011

5 நிறுவன அதிகாரிகளைப் போல எல்லோருக்கும் ஜாமீன் தர வேண்டும்- ராசா வக்கீல்

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் 5 நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதை முன்னாள் அமைச்சர் ராசாவின் வக்கீல் வரவேற்றுள்ளார். இதேபோல இந்த வழக்கில் கைதாகியுள்ள மற்றவர்களுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதான அனைவரும் கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைபட்டுள்ளனர். அவர்கள் யாருக்குமே ஜாமீன் கிடைக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் முதல் முறையாக இந்த வழக்கில், ஐந்து நிறுவன அதிகாரிகளுக்கு இன்று ஜாமீன் கிடைத்தது. இது கைதாகி சிறையில் அடைபட்டுள்ள கனிமொழி உள்ளிட்ட மற்ற அனைவருக்கும் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த ராசாவின் வக்கீல் சுஷில் குமார் கூறுகையில், இது வரவேற்கத்தக்க உத்தரவு. கைதான மற்ற அனைவருக்கும் புதிய கதவை இது திறந்து விட்டுள்ளது.
இந்த ஐந்து பேருக்கும் ஜாமீன் கொடுக்க முடியுமென்றால் மற்ற அனைவருக்கும் கூட கொடுக்க முடியும். அவர்களுக்கும் ஜாமீன் அளிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
டிபி ரியால்டியின் ஷாஹித் பல்வாவின் வக்கீல் விஜய் அகர்வால் கூறுகையில், எனது மனுதாரர் ஏற்கனவே ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை விரைந்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

கருத்துகள் இல்லை: