வியாழன், 24 ஜூன், 2010

அழைப்பு விடுக்கப்படாததன் மர்மம் என்னவோ?தமிழ்் எம்.பி.க்களுக்கு அழைப்பு இல்லை

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு இலங்கையின் தமிழ்பேசும் எம்.பி.க்களுக்கு அழைப்பு இல்லை
 "செம்மொழி எம்மொழி,அதனை வளர்ப்பது எம் பணி என்று கூறினார் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர்.
நேத்திரா தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தென்னிந்தியா கோயம்புத்தூரில் ஆரம்பமாகும் செம்மொழி மாநாடு சம்பந்தமாக கேட்கப்பட்ட பல கேள்விகளுக்குப் பதிலளித்த அஸ்வர் மேலும் கூறியதாவது;

தமிழர் இனிமைக்கும் மேன்மைக்கும் மேலும் மெருகூட்டும் வண்ணம் இவ்விழா நடைபெறுவதையிட்டு இலங்கை வாழ் தமிழ் பேசும் முஸ்லிம்களும் மகிழ்ச்சியடைகின்றனர்.

தமிழ் மொழியின் செழுமையை சர்வதேசம் அங்கீகரித்துப் பெருமைப்படுத்தும் வண்ணம் இந்த 21 ஆம் நூற்றாண்டில் தமிழ் அன்னைக்கு ஆரம் சூட்டி தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் இம்மாநாடு நடைபெறுவது வரவேற்கத்தக்கதாகும்.

இப்பணியில் பகீரத முயற்சியெடுத்த தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியை தமிழ் நெஞ்சங்கள் என்றும் பாராட்டி மகிழும்.

எனினும் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மறந்துவிட்ட ஒரு விடயத்தை அவரது கவனத்துக்குக் கொண்டு வருவது எம் கடமையாகும். செந்தமிழின் ஓசையை தமிழ் கூறும் நல்லுலகில் மட்டுமன்றி, இப்பரந்த உலகமே அறிந்து போற்றிப் புகழக்கூடிய வண்ணம் 20 ஆம் நூற்றாண்டு இறுதிப் பகுதியில் அகில உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்காக வித்திட்டவர் நம் தாய்நாட்டைச் சேர்ந்த பிதா பேராசிரியர் சேவியர் எஸ்.தனிநாயகம் அடிகளாவார்.

ஆங்கிலம்,பிரெஞ்ச்,ரஷ்ய,ஸ்பானிய மற்றும் ஆபிரிக்க மொழி அறிஞர்களும் தமிழ் மகரந்தத்தின் மணம் நுகரும் வண்ணம் செய்த இப்பெரும் சமயகுரவரின் பணி உலகத் தமிழ் உலக ஏட்டில் மிக அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை எவரும் மறைக்க முடியாது.

இவரது எண்ணக் கருவில் உருவான அகில உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு என்ற விருட்சத்தின் கிளையாக உதித்ததுதான் அனைத்துலக இஸ்லாமிய தமிழ் ஆராய்ச்சி மாநாடு. இம்மாநாட்டின் சிற்பி பேராசிரியர் அல்லாமா ம.மு.உவைஸ் அவர்களாவார்.

இவரது தமிழ்ப்பணி மகத்தானது. தமிழ் உலகம் இவரது திறமையை மதித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியத் துறைத் தலைவராக நியமித்துக் கௌரவித்தது. இந்நியமனத்துக்கு அடிகோலியவரும் அன்றும் முதலமைச்சராகவிருந்த கலைஞர் மு.கருணாநிதி என்பதை நாம் சற்றும் மறப்பதற்கில்லை.

தமிழின் செழுமைக்கு மகோன்னதமான பணி செய்து அணி சேர்த்துப் பெருமை கொண்ட தனிநாயகம் அடிகளாரையும் பேராசிரியர் உவைஸையும் செம்மொழி மாநாடு மறந்துவிட்டது என்பதுதான் இலங்கைத் தமிழ்,முஸ்லிம் மக்களின் பெரும் மனக்குறையாகும்.

உலகளாவிய ரீதியில் தேன் தமிழுக்குச் சுவையூட்டும் ஆரம்பப் பணிகளை மேற்கொண்ட இப்பெரியார்களின் சேவையை மதிக்கும் முகமாக இவர்கள் இருவரின் பெயர்களிலும் இரு அரங்குகளையாவது செம்மொழி மாநாட்டில் அமைத்திருக்கலாம். அல்லது வேறு வழியில் அவர்களைக் கௌரவித்திருக்கலாம். அது ஒரு புறமிருக்கட்டும்.

அதுமட்டுமல்ல, தமிழின் மேன்மைக்கும் தமிழினத்தின் மேம்பாட்டுக்குமாக உழைத்து வருகின்ற இலங்கைப் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்பேசும் உறுப்பினர்களுக்கு இம்மாநாட்டில் பங்குபற்றுவதற்கான அழைப்பு விடுக்கப்படாததும் இம்மாநாட்டின் பெருமையை மழுங்கடிக்கச் செய்யும் என்பது எம் ஊகம்.

உலகின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தலைவர்களும் இம்மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளபோதிலும் இலங்கை தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவோருக்கு அழைப்பு விடுக்கப்படாததன் மர்மம் என்னவோ? என தமிழ் உலகம் இன்று கேள்வியெழுப்புகிறது.

இலங்கைத் தமிழர் பிரச்சினைகளைத் தொட்டுப் பேசும்போது தொப்புள் கொடி உறவு குறித்து மேலோட்டமாகப் பேசி வருகின்ற தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற செம்மொழி மாநாடு. அந்தத் தொப்புள்கொடியை செம்மையாகச் சிதறடித்துள்ள பாங்கினைக் கண்டு இங்கு தமிழ்பேசும் மக்கள் வியப்போடும் நகைப்போடும் நோக்குவதைத் தவிர்க்க முடியாது.

அது மட்டுமா? ஆறரைக்கோடி தமிழர்கள் வாழ்கின்ற இவ்வுலகில் உலக தாய்ச்சபையாகிய ஐக்கிய நாடுகள் சபையில் தமிழில் உரை நிகழ்த்தி தமிழுக்கு ஆரம்சூட்டிப் பெருமைப்பட்டவர் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒருவரேயாவார்.

சிங்களமொழி பேசும் பெரும்பான்மை மக்கள் வாழ்கின்ற இலங்கைத் தீவினில் தமிழ் தழைத்தோங்கி நிற்கின்ற பாங்கினை நோக்கின் இன்று இலங்கை பூராவுமுள்ள கோவில்கள் திருவிழாக் கோலம் பூண்டு நிற்கின்றன. கொழும்பிலே தமிழ்ச்சங்கம் தமிழை வளர்ப்பதில் முன்னணியில் திகழ்கின்றது. வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷனில் பாரதி விழாக்கள் தொடர்ந்தும் நடத்தப்படுகின்றன. கொட்டாஞ்சேனை விவேகானந்த மண்டபத்தில் தமிழ் விழாக்கள் என்றும் இதழ் விரிக்கின்றன. இம்முறை கொழும்பில் ஆடிவேல் விழாவை சரித்திரம் காணாத முறையில் அவ்வளவு சிறப்பாக இந்து பக்தர்கள் கொண்டாடும் வண்ணம் அரசும் அரச தலைவர் ஜனாதிபதியும் சகல ஒத்துழைப்புகளையும் தர முன்வந்துள்ளனர் என்பதை உலகறியச் செய்வது எம் கடன்.

தமிழ்மொழி மெல்ல இனிச் சாகும் என்று தமிழகத்தில் கூறினாலும் எமது தாயகத்தில் சிங்களமொழியுடன் இன்பத் தமிழும் சாகாவரம் பெற்றுத் திகழும் என்பதை அழுத்தமாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். செம்மொழி செழுமை பெற வாழ்த்துக்கள்!

கருத்துகள் இல்லை: