ஞாயிறு, 20 ஜூன், 2010

ரேங்க் இருந்தும் தர வரிசை பட்டியலில் இடமில்லை : இலங்கை தமிழர் முகாம் மாணவன் அதிருப்தி

சீமான், வை.கோ நெடுமாறன் ஆகியோரின் கவனத்திற்கு

இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த மாணவனுக்கு மருத்துவ "ரேங்க்' இருந்தும் தர வரிசை பட்டியலில் இடம் கிடைக்கவில்லை.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணை பகுதியில் 1991ம் ஆண்டு இலங்கையில் இருந்து வந்த 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு முகாம் அமைக்கப்பட்டு, அதில் தங்க வைக்கப்பட்டனர். இந்த முகாமில் கருப்பையா என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி அன்னக்கிளி. இவர்களுக்கு நாகராஜ் (16) என்ற மகனும், ஈஸ்வரி (15), பாலசுலோஜினி (13), சுஜேந்தினி (9) என்ற மகள்களும் உள்ளனர். கருப்பையா பாம்பாறு அணையில் 20 ஆண்டாக கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ரேஷன் கார்டு, கலைஞர் காப்பீடு திட்டம் அடையாள அட்டை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளது.இவரது மகன் நாகராஜ், மிட்டப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி.,யில் 500க்கு 481 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். தற்போது, ப்ளஸ் 2 தேர்வில் 1,152 மதிப்பெண் பெற்று மருத்துவத்துக்கும், இன்ஜினியரிங் படிக்க விண்ப்பித்திருந்தார்.மருத்துவத்தில் கட் ஆஃப் 197.75 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கடந்த 12ம் தேதி மருத்துவ படிப்புக்கான தர வரிசை பட்டியல் வெளியானது. இதில், நாகராஜின் பெயர் விடுப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து மாணவன் நாகராஜ் "நமது' நிருபரிடம் கூறியதாவது:நான் ப்ளஸ் 2 தேர்வில் 1,152 மதிப்பெண்கள் பெற்று மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிக்க விண்ணப்பித்து இருந்தேன். மருத்துவ தர வரிசைப்பட்டியலில் என்னுடைய பெயர் இடம் பெறவில்லை. இது குறித்து சென்னை மருத்துவ கல்வி இயக்கக இயக்குனர், இலங்கை அகதிகள் மறுவாழ்வு துறை கமிஷனர் ஆகியோரை சந்தித்து விளக்கம் கேட்டேன். இலங்கை தமிழர் முகாமில் உள்ளவர்களுக்கு, "மருத்துவம், இன்ஜினியரிங் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள தகுதியில்லை. கவுன்சலிங்கில் கலந்து கொள்ளாமல் தனியார் கல்லூரிகளில் பணம் கட்டி சேர்ந்து கொள்ள தடையில்லை' என, கூறினர். ஏழை குடும்பத்தில் பிறந்த என்னால் பல லட்ச ரூபாய் பணம் கட்டி தனியார் கல்லூரியில் படிக்க முடியாது.இவ்வாறு கூறினார்.
தமிழகத்தில், இலங்கை தமிழர்கள் முகாமில் தமிழக அரசின் அனைத்து சலுகைகளும் கிடைக்கவும், கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கவும், குடியிருக்கும் வீடுகளை சீர் செய்தும், ரேஷன் கார்டு, ஓட்டுனர் லைசென்ஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்கி வரும் நிலையில் மருத்துவம், இன்ஜினியரிங் உள்ளிட்ட உயர் கல்வி சலுகைகள் இலங்கை தமிழர் முகாமில் உள்ள மாணவர்களுக்கு இல்லை என்பது இலங்கை தமிழர்கள் முகாமில் உள்ளவர்களை பெரும் வருத்தமடைய செய்துள்ளது. "இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும் மாணவர்களின் உயர் கல்விக்கு அரசு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்' என, இலங்கை தமிழ் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவப்படிப்புக்கு பொது பிரிவில் சேர கட்ஆஃப் மார்க் பெற்றுள்ள மாணவன் நாகராஜ் அகதி மாணவன் என்பதால் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாத நிலை இருப்பதால், தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்க கொடையுள்ளம் கொண்டவர்களிடம் இருந்து கல்வி உதவியை எதிர்பார்க்கிறார். கல்வி உதவிகள் செய்ய விரும்புவோர் 89739 - 45945 என்ற மொபைல்ஃபோன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை: