புதன், 23 ஜூன், 2010

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு யாழ் மாவட்டத்தில் இருந்து 14 பேராளர்கள்


கோவை: உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவை, பீளமேட்டிலுள்ள, « கொடிசியா’ வளாகத்தில் நாளை துவங்குகிறது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், முதல்வர் கருணாநிதி, துணைமுதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள சிறப்பு அழைப்பாளர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள் உள்ளிட்ட 4,600 பேரும், பல லட்சம் மக்களும் பங்கேற்கின்றனர்.
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு, நாளை காலை 10.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்குகிறது. துணைமுதல்வர் ஸ்டாலின், வரவேற்புரை நிகழ்த்துகிறார். மாநாட்டுச் சிறப்பு மலரை, கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா வெளியிடுகிறார்.    அதன் பின், நிதியமைச்சர் அன்பழகன் பேசுகிறார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு, « கருணாநிதி செம்மொழி தமிழ் விருது’ வழங்குகிறார்.
பேராசிரியர் அஸ்கோ பார்போலா, விருது ஏற்புரை நிகழ்த்தியபின், அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், முனைவர் வ.செ.குழந்தைசாமி, இலங்கை பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். முதல்வர் கருணாநிதி, தலைமையுரையாற்றுகிறார். கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா சிறப்புரை நிகழ்த்திய பின், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பேசுகிறார். மாலை 4.00 மணிக்கு, « இனியவை நாற்பது’ என்ற தலைப்பில் தமிழ் இலக்கியம், கலை, வரலாற்றை நினைவூட்டும் வகையில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் துவங்கி, மாநாடு வளாகம் வரை நடக்கிறது.
இம் மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக யாழ் மாவட்டத்தில் இருந்து 14 பேராளர்கள் கலந்து கொள்கின்றனர்.

பேராசிரியர்களான சண்முகதாஸ், சி.சிவலிங்கராஜா, ப.புஸ்பரத்தினம், கலாநிதி மனமோண்மணி சண்மகதாஸ், பேராயர் எஸ்ஜெபநேசன், வரிவுரையாளர் கலாநிதி ச.லலீசன், செல்வி செல்வாம்பிகை நடராஜா, ஆசிரியர் சு.குகனேஸ்வரன், விரிவுரையாளர்களான செ. சுதர்சன், பா.அகிலன், கவிஞர் சோ. புத்மநாதன், ஆகியோரே செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக யாழ் மாவட்டத்தில் இருந்து செல்லும் பேராளர்கள் ஆவர்.

கருத்துகள் இல்லை: