திங்கள், 18 செப்டம்பர், 2023

உதயநிதியை மேடையிலேயே எச்சரித்த டிஆர் பாலு.. அதுவும் ஸ்டாலின் முன்பே! வேலூரில் என்ன நடந்தது? பின்னணி

tamil.oneindia.com - Nantha Kumar R :  சென்னை: வேலூரில் இன்று திமுகவின் முப்பெரும் விழா நடந்த நிலையில் மேடையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு டிஆர் பாலு எச்சரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக தோன்றியதன் 75வது ஆண்டு கொண்டாட்டம் உள்பட தந்தை பெரியார், அண்ணா பிறந்தநாள் மற்றும் திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் என முப்பெரும் விழா இன்று வேலூரில் நடந்தது. வேலூரை அடுத்த கந்தனேரியில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே இதற்காகப் பிரம்மாண்ட மேடை பந்தல் அமைக்கப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான திமுக தொண்டர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக எம்பியும் நாடாளுமன்ற மக்களவை திமுக குழு தலைவருமான டிஆர் பாலு உள்பட ஏராளாமனவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேடையில் வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை டிஆர் பாலு எச்சரித்தார். அதாவது மேடையில் டிஆர் பாலு பேசியபோது உதயநிதிக்கு எச்சரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக டிஆர் பாலு பேசியதாவது: முக ஸ்டாலின் என்பது பெயரில்லை.

குறிப்பாக சொல்லப்போனால் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த பெண்களின் பாசம் மற்றும் அன்புக்கு அடையாளமாக திகழ்ந்து கொண்டிருக்கும் சக்தி என கூறலாம். குறிப்பாக கூற வேண்டும் என்றால் தேர்தல் காலத்தில் வாகனத்தில் செல்லும் போது 2, 3 இடங்களில் மறித்து மகளிர் சுயஉதவி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறினார்கள்.

அடுத்த கட்டமாக தேர்தல் அறிக்கையை நாங்கள் தயாரித்து ஒப்புதல் பெற்ற நிலையில் மகளிர் சுயஉதவி குழுவில் 16 லட்சம் பேருக்கு ரூ.2876 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு மீண்டும் சுழல்நிதி கொடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. உயர்கல்வி பயிலும் 12 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற்று கல்லூரிகளில் படிக்கின்றனர். நகைக்கடன் 4856 கோடி நகைகடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அதன்பிறகு கலைஞர் உரிமைத்தொகை மூலம் மாதம் ரூ.1000 தொகையை 1.6 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு திட்டங்களை செயல்படுத்திய பிறகு அடுத்த தேர்தலில் மக்கள் மாத்தி போடுவார்கள் என நினைக்கிறீர்களா?. கிடையாது. இருப்பினும் நம் நண்பர்கள் முறைப்படி ஆற்ற வேண்டும். அதற்கான பணிகளை செய்ய தயாராகி வருகிறார்கள்.

ஒரு பக்கம் இளைஞரணி கொடிக்கட்டி பறந்து கொண்டிருக்கிறது. திமுகவின் இளைஞரணியை பார்த்தால் இந்தியாவே பயந்து கொண்டிருக்கிறது. அடுத்த என்ன செய்யபோகிறார்கள் என இந்தியாவில் அத்தனை மாநிலங்களில் உள்ளவர்களும் இளைஞரணி தலைவரை பார்த்து பயந்து கொண்டிருக்கிறார்கள். உதயநிதி தனது தந்தையை பார்த்தால் மட்டும் தான் பயப்படுகிறார். வேறு யாரை பார்த்தாலும் பயப்படுவது இல்லை.

மேலும் அவர் என்ன வேண்டுமானாலும் பேசுகிறார். அவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம் . பேசிவிட்டு அதனை சமாளிக்கலாம் என்ற நினைப்பில் பேசுகிறார். ஆனால் தனது கையில் வைத்து கொண்டிருக்கிற பொருள் கீழே விழுந்து உடைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தையும் மனதில் வைத்து கொண்டு மிகச்சிறப்பாக பணியாற்றுவது அவரது கடமை என்று நான் எச்சரிக்க விரும்புகிறேன்.

அதோடு நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும் என்று அன்பு தம்பி மீது இருக்கும் பாசத்தின் காரணமாக, சிறுகுழந்தையில் இருந்து நான் தூக்கி வளர்த்த பிள்ளை என்பதன் காரணமாக இதை சொல்லி கொள்கிறேன்'' என்றார்.

இந்நிலையில் தான் டிஆர் பாலு எச்சரித்தன் பின்னணி குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை பாஜக கையில் எடுத்து கொண்டு விடாமல் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. மேலும் உதயநிதியின் பேச்சை வைத்து கொண்டே ‛இந்தியா' கூட்டணி என்பது இந்துக்களுக்கும், சனாதன தர்மத்துக்கு எதிரானது என்ற பிம்பத்தை கட்டமைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில் தான் திமுக அங்கம் வகிக்கும் பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா(உத்தவ் அணி) உள்ளிட்ட கட்சிகள் உதயநிதியின் கருத்தை ஆதரிக்கவில்லை. இதனால் வரும் நாட்களில் ஒவ்வொரு விஷயத்தையும் கவனமுடன் பேச வேண்டும் என்பதை கூறும் வகையில் டிஆர் பாலு இப்படி பேசியிருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

கருத்துகள் இல்லை: