ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

நெறிதவறிய ஊடகங்களும் முறைதவறும் அரசியல்கட்சிகளும்

LR Jagadheesan : நெறிதவறிய ஊடகங்களும் முறைதவறும் அரசியல்கட்சிகளும்
என் புரிதலில் சுதந்திர இந்திய அரசியல் வரலாற்றில் ஒட்டுமொத்த இந்திய நிறுவன கட்டமைப்பும்,
 (entire Indian Establishment — Indian legislature ,executive judiciary and the press) ஒன்று சேர்ந்து மூர்க்கமாக ஒரே குரலில் எதிர்த்த இரண்டுபேரில் ஒருவர் கலைஞர் மற்றது ஆ ராசா.
அதாவது நேரடித்தேர்தல் அரசியலில் ஈடுபட்டவர்களில். கலைஞர் ஹிந்திய அரசியல் எதிர்ப்பை தமிழ்நாட்டில் இருந்தபடியே எதிர்கொண்டவர்.
ஆனால் ஆ ராசா தலைநகர் தில்லியில் இருந்தபடி அதை நேர் கொண்டவர்.
2ஜி அகைக்கற்றை விவகாரம் பெரும் பூதாகாரமாய் வெடித்தபோது,
 ஆ ராசா சந்தித்த எதிர்ப்பில் பாதியளவு கூட வேண்டாம் பத்தில் ஒரு பங்கு எதிர்ப்பை வேறொருவர் எதிர்கொண்டிருந்தால் கூட நொறுங்கி தூள் தூளாகியிருப்பார்.
தனிப்பட்ட வாழ்விலும் அரசியலிலும்.
குறிப்பாக ஒட்டுமொத்த ஹிந்திய ஊடகங்களும் அவர் மீது நடத்திய நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல் அதற்கு முன்பு இந்தியாவின் ஊடக சரித்திரத்திலேயே இல்லாத ஒன்று.
ஒருநாளல்ல; ஒரு வாரமல்ல; மாதக்கணக்கில் ஆண்டுக்கணக்கில் நீடித்த தாக்குதல் அது.



அதுவும் அப்பட்டமான அவதூறு தாக்குதல். ஆதாரமற்ற தனிமனித தாக்குதல்.
அவர் மட்டுமல்ல அவர் பெற்றோர்,  குடும்பம், மனைவி, மகள், கனிமொழியென அப்போது ஹிந்திய/ தமிழ்நாட்டு ஊடகங்கள் எழுதிய எழுத்தும் வெளியிட்ட செய்திகளும் காணொளிகளும் இந்திய/தமிழக ஊடகங்கள் கூட்டாக சீரழிந்த ஆகக்கீழ்மையான தருணங்கள்.

இன்றும் ஆவணங்களாக இருக்கவே செய்கின்றன. அதை விவரித்தால் இந்திய ஊடகம் மொத்தமாய் சந்தி சிரிக்கும்.
ஆனால் தன்மீது அப்படிப்பட்ட தாக்குதல் நடத்திய அதே ஹிந்திய ஊடகத்தின் ஒரு அங்கமான ஒரு நெறியாளரின் நிகழ்ச்சியில் தான் ஒரு மணி நேரம் ஆ ராசா தன்னந்தனியாக தன் மீதான அத்தனை அவதூறுகளுக்கும் பொறுமையாக பதில் அளித்தார்.

அவர் நுழைந்தபோது அவருக்கு எதிராய் இருந்த மொத்த அரங்கத்தையும் பேட்டியின் முடிவில் தன் பக்க நியாயத்தை புரிந்துகொள்ளச்செய்தார். ஒவ்வொரு அரசியல்வாதியும் கட்டாயம் பாடமாய் பார்க்கவேண்டிய படிக்கவேண்டிய பேட்டி அது. ஊடகவியலாளர்களுக்கும் அதில் கற்கவேண்டிய பாடங்கள் ஏராளம் உண்டு.

ஹிந்திய ஊடக நெறியாளரை நேருக்கு நேர் எதிர்கொண்ட ஆ ராசாவைப்போன்றவர்களைத்தான் அரசியல் கட்சிகள் உருவாக்க வேண்டும். அது தான் இந்திய ஜனநாயத்தை மேலும் ஜனநாயகப்படுத்துவதற்கான அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான அரசியலில் பலதரப்பாரின்விவாதத்திறன்களையும் வளர்ப்பதற்கான வழி.

ஆ ராசா இருக்கும் அதே திமுகவில் PTR பழனிவேல் ராஜன், காங்கிரஸ் கட்சியில் பா சிதம்பரம், பேராசிரியர் சுபவீ, திகவின் அருள்மொழி, பெரியாரியர் ஓவியா போன்றவர்களை நீங்கள் எந்த விவாதத்திலும் தோற்கடிப்பது கடினம்.
ஏனெனில் தாங்கள் பேசும் பொருளின் ஆழ அகலங்கள் உணர்ந்தவர்கள்.
வாதத்திறன் மிக்கவர்கள். தாம் தேர்ந்தெடுத்துக்கொண்ட கொள்கைகள் குறித்தும் தாம் பேசும் பொருள் குறித்தும் தெளிவான அறிவும் சுயமான தேடலும் சிந்தனைப்போக்கும் கொண்டவர்கள்.
அப்படியானவர்களை எவ்வளவு மோசமான, பக்கசார்பான தொலைக்காட்சி நெறியாளராலும் மடக்கவும் முடியாது. தோற்கடிக்கவும் முடியாது.
 எந்த விவாத நிகழ்ச்சியிலும் இறுதியில் இவர்களே மிளிர்வார்கள். ஆ ராசா ஆப்கி அதாலத் பேட்டி/விசாரணையில் மிளிர்வதைப்போல.

இவர்களைப்போன்றவர்களையெல்லாம் இன்றைய அரசியல்கட்சிகள் உருவாக்குவதில்லை. வெறும் பிறப்பின் அடிப்படையிலான வாரிசுரிமையை மட்டுமே முதன்மையான காரணியாக வைத்துக்கொண்டு கட்சித்தலைமைகளை கைப்பற்றும் இன்றைய அரசியல் கட்சிகளில் இப்படியான பன்முக ஆற்றலும் சுயமும் கொண்ட இரண்டாம் கட்டத்தலைவர்களுக்கு எந்த பெரிய முக்கியத்துவமும் இல்லை.

அவர்களை எப்படி பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்கிற குறைந்தபட்ச புத்திசாலித்தனம் கூட இல்லாத வெற்று விளம்பரப்பிரிய வாரிசுத்தலைமைகளிடம் இந்திய தமிழக அரசியல் கட்சித்தலைமைகள் சிக்கித்தவிப்பதால் தான் தங்களுக்கு பிடிக்காத தொலைக்காட்சி நெறியாளர்களின் பட்டியலை தொகுத்து பொதுவில் பகிர்ந்து அவர்களை தாங்கள் புறக்கணிக்கப்போவதாக போர்பிரகடனம் செய்கிறார்கள்.

இந்த நெறியாளர்களின் ஊடகத்தொழில் நெறி பிறழ்ந்த நடத்தையை அவர்களே முடிவு செய்தார்களா?
அந்த ஊடக முதலாளிகள் முடிவு செய்தார்களா? இந்தியாவில் எந்த ஊடக நிறுவனம் எந்த நெறியாளருக்கு அப்படியான கட்டற்ற சுதந்திரத்தை கொடுத்திருக்கிறது?
Editor என்கிற பதவியையே மொத்தமாய் கொன்றுபோட்ட ஒரு நாட்டின் தொலைக்காட்சி ஊடகத்துறையில் இந்த நெறியாளர்களின் தொழில் முறை இடம் எது?

ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆள்வதற்காக ஒன்று கூடிய கூட்டணி கட்சிகள் இப்படி பகிரங்கமாக தங்களுக்கு பிடிக்காத ஊடகவியலாளர்களை புறக்கணிப்போம் என்று பொதுவில் பட்டியலிட்டு அறிவிப்பது என்பது கிராமங்களில் என்றோ ஒழிந்துபோன கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையின் மேலேற்றி ஊர்வலம் விடும் குரூரமான தண்டனையின் 21 ஆம் நூற்றாண்டு நவீன வடிவமல்லவா?
எந்த விதத்தில் இந்த போக்கு இந்திய ஜனநாயகத்தன்மையை மேம்படுத்தும்? எப்படி இந்த கட்சிகள் இதை நியாயப்படுத்த முடியும்? உங்கள் வாதப்படி பார்த்தால் மோசமான ஊடகவியலாளர்களை வாதத்தில் வெல்லக்கூடிய திறமையான அரசியல்வாதிகள் உங்களிடம் இல்லை என்பதை நீங்களே ஒத்துக்கொள்வதாகத்தானே பொருள்?

அதைவிட முக்கியமாக இதை கொண்டாடும் ஊடகவியலாளர்களை எப்படி புரிந்துகொள்வது?இந்த ஊடகவியலாளர்கள் எல்லோருமே தண்டிக்கப்பட வேண்டிய தவறு செய்யவர்கள் என்பதை ஒரு வாதத்துக்காக ஒப்புக்கொண்டே பேசினாலும் அதை செய்யவேண்டியது யார்? ஊடக அமைப்புகளா? அரசியல் கட்சிகளா?
இந்தியாவில் எந்த அரசியல்கட்சிக்கு அந்த யோக்கியதை இருக்கிறது? அல்லது எந்த தலைவருக்கு அதற்கான நேர்மை இருக்கிறது? இந்த அரசியல் கட்சிகள் தத்தம் கட்சிகளை நடத்தும் விதமென்ன? இவர்களிடமா தவறு செய்யும் ஊடகங்களை ஊடஅர்களை பொதுவில் அவமதித்து தண்டிக்கும் உரிமையை தர வேண்டும் என்கிறீர்கள்?
ஊடகங்களை/ஊடகர்களை நெறிப்படுத்தவும் தட்டிக்கேட்கவும் குட்டிச்சொல்லவும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டிய பல்வேறு ஊடக அமைப்புகளும் இந்தியாவில் ஏன் இல்லாமல் போயின?
ஏன் அதற்காக நீங்கள் குரல் கொடுக்கவில்லை.
மாறாக அரசியல்வாதிகளின் குரூரமான தேர்தல் தேவைக்கான தடாலடி கட்ட பஞ்சாயத்துக்கு வக்காலத்து வாங்குவது தான் ஊடகங்களை மேம்படுத்தும் வழியா? கண்டிப்பாக இல்லை.

உங்களுக்குப்பிடிக்காதவர்கள் மீது பொதுவில் எறிவதற்கான கற்களை நீங்கள் அரசியல் கும்பல்களிடம் எடுத்துக்கொடுக்கிறீர்கள். கவனமாய் இருங்கள். நீங்கள் இன்று ஊக்குவிக்கும் கல்லெறியும் அரசியல் கும்பல் நாளை உங்களை நோக்கியும் அதே கற்களை எறிவார்கள். கல்லெறியப்பழகிய கைகள் சும்மா இருக்காது

கருத்துகள் இல்லை: