திங்கள், 18 செப்டம்பர், 2023

கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை இந்தியாவுக்கு முதலில் அறிமுகப்படுத்திய பார்ப்பனரும் பணக்காரரும்

May be an image of 1 person

Sundaram  :  கம்யூனிஸ்ட்களின் பார்ப்பன பாசம் எப்படிப்பட்டது என்பதை இந்திய அரசியலை அறிந்தவர்களுக்கு நன்கு புரியும்..
முதன் முதலாக கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை  இந்தியாவுக்கு அறிமுகப்படுத்திய அறிவுஜீவிகள் அன்று வெளிநாடுகளுக்கு சென்று உயர் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த பணக்கார பிராமண, முற்படுத்தப்பட்ட வகுப்பினரே ஆவர்.
பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துவங்கியபோதும் கட்சியின் மேல் மட்டத் தலைவர்களாக பிராமணர்களும் உயர் சாதி புத்திஜீவிகளுமே அமைத்தனர். இன்றுவரை அது தொடர்கிறது..
தமிழ் நாட்டில் எளிமைக்கு உதாரணமாக கொண்டாடப்படும் தலைவர்களில் ஜீவா என்கிற ஜீவானந்தம் முக்கியமானவர்…
சிறிதுகாலம் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் பயணித்தவர்… பின்னர் பொதுவுடைமை கட்சியின் முக்கிய தலைவராக போற்றப் பட்டவர்….
அன்று தந்தை பெரியார் நடத்திய ஜாதி ஒழிப்பு போராட்டங்கள் குறித்த அவரது மேலான கருத்துக்களை இங்கு காணலாம்.
இன்று ரங்கராஜ் பாண்டே போன்ற வலதுசாரிகள் பேசுவது போலவே பேசியிருப்பதை உணரலாம்…
"ஜாதி ஒழிப்பு என்ற பெயரால் ஈவேரா நடத்தும் போராட்டத்தை அழுத்தமாகக் கண்டிக்கிறோம்...


இனி பெரியாரின் ஜாதி ஒழிப்பைப் பற்றி சில செய்திகளை உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறேன்.
காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஈவேரா, 'காங்கிரசில் பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும்' என்றும், அதன் பின்னர் 'சனாதன தர்மம் ஒழிய வேண்டும்' என்றும் பின்பு 'இந்து மதம் ஒழிய வேண்டும்' என்றும், அதற்கு அப்பால் 'மதங்களே ஒழிய வேண்டும்' என்றும் சொல்லிக் கொண்டே போனார்! (கூட்டத்தில் சிரிப்பு)…
விரும்பினால் பி.ராமமூர்த்தியை ஆதரிப்பார்: ராஜாஜியை ஆதரிப்பார்: மாவூர் சர்மாவை ஆதரிப்பார். இது ஒரு சித்தம். (சிரிப்பு).
வேறொரு பித்தம் கிளம்பினால் 'அக்ரகாரத்தை ஒரு கை பார்ப்பேன்'- என்று ஆவேசம் காட்டுவார்.
நேற்று நடந்த பொதுத் தேர்தலில் காஞ்சிபுரம் டாக்டர் சீனிவாசனையும், ஸ்ரீரங்கம் வாசுதேவனையும், மதுரை சங்கரனையும் ஆதரித்தார்: அதற்காகக்காரணம் சொன்னார். (சிரிப்பு).
இன்று ஜாதி ஒழிப்பு என்ற சாக்கில் பிராமணர் மீது பாய்கிறார். . இதற்கு ஒரு காரணம் சொல்கிறார்.
அவர் காட்டிய வழியால் தமிழ்  நாட்டில் ஜாதி வெறியும், ஜாதிப் பூசலும் ஒழியவில்லை என்பது மட்டுமல்ல: மாறாகப் பெருகி வந்திருக்கிறது என்பதே என்னுடைய பணிவான கருத்து.
காவேரி ஆற்றங்கரையில் நாலைந்து பார்ப்பனர்கள் - இந்நாட்டில் ஜாதி பிறந்ததற்கும், அது வளரந்ததற்கும், அதன் பேரால் நடைபெறும் பலப்பல கொடுமைகளுக்கும் நேருக்கு நேர் ஒரு தொடர்பும் இல்லாத நிரபராதிகள்- குளித்துக் கொண்டு இருந்தார்கள்.
தங்கள் வழக்கப்படி குளித்து, பூசை செய்து கொண்டிருந்தார்கள்.
சிலர் அவர்கள் வைத்திருந்த சொம்பைத் தூக்கிக் காவிரி ஆற்றில் எறிந்தார்கள்: அவர்களுடைய பூணூலை அறுத்தார்கள்: அவர்களுடைய உச்சிக்குடுமியைக் கத்தரித்தார்கள். ஓட ஓடத் துரத்தினார்கள். பெரியாரைப் பின்பற்றுகிற தி.க வினர் எடுத்த 'ஜாதி ஒழிப்பு' நடவடிக்கை இது!
சொம்பைத் தூக்கிக் காவிரி ஆற்றில் எறிந்தால் ஜாதி ஒழிந்து விடுமா? (ஒரே சிரிப்பு).
காவிரி வெள்ளம் ஒரு தனி மனிதனுடைய சொம்பை அடித்துக் கொண்டு போகிறபோதே ஆயிரம் காலமாக சமுதாயத்தில் வேரூன்றிக் கிடக்கும் ஜாதி முறையையும் அடித்துக் கொண்டு போகும் என்று நினைக்கிறார்களா? (சிரிப்பு).
நாலைந்து ஆட்களுடைய உச்சிக் குடுமியையும் பூணூலையும் அறுத்தால் எந்த ஜாதியை எப்படி ஒழித்ததாக அர்த்தம்? (சிரிப்பு).
குருட்டு ஆவேசத்தால் பார்ப்பன ஓட்டல்களில் கல்லடி நடத்தினால் ஜாதி முறையைக் கல்லால் அடித்ததாகுமா? ஓட்டல்களில் உள்ள டியூப் லைட்டுகளை அடித்து நொறுக்கினால் சாதி முறையை உடைத்து நொறுக்கி விட்டதாகக் கருதுகிறார்களா? (சிரிப்பு)
பூணூலையும் உச்சிக் குடுமியையும் அறுப்பது என்று வந்தால், நாடு முழுவதும் உள்ள பூணூல்களையும், உச்சிக் குடுமிகளையும் உடையவர்களை எல்லாம் ஒரு சிலர் அறுக்க அனுமதிப்பார்களா?
எனவே இந்தச் செயல்களை கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று எங்கள் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளோம்.
இது மட்டுமல்ல; சிலருடைய உச்சிக் குடுமி, பூணூல் அறுப்பு திருப்பணி தொடர்ந்து அனுமதிக்கப்பட்டால்,  தாடிகளை அறுப்பதும் நடக்கும்… சிலரிலிருந்து பலராக விரியும்.
உச்சிக்குடுமி பிடிக்காமல் அறுத்தால், தாடி பிடிக்காமல் அறுக்கத் தூண்டும்! (சிரிப்பு).
குறிப்பிட்ட ஒரு ஜாதியைத் தனிமைப்படுத்தி அநாகரிகமான முறையில் கண்மூடித் தனமாகத் தாக்குவதால், சமுதாயம் முழுவதும் பரவி நிற்கும் ஜாதி முறையை ஒழித்துவிட முடியாது."
1957 ஆம் வருடம், டிசம்பர் மாதம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாடு திருச்சியில் நடந்தது. அந்த மாநாட்டில் ப ஜீவானந்தம் நிகழ்த்திய சொற்பொழிவின் பகுதிகள்
("மேடையில் ஜீவா" நூல் - ஆதாரம் ஈ வே ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் by ம வெங்கடேசன்)

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

தயாநிதி மாறன் குடும்பமும் கலாநிதி மாறன் குடும்பமும்
என்ன ஜாதி