வியாழன், 6 அக்டோபர், 2022

விவேகானந்தா ஆசிரமத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு! 2

nakkheeran.in  :  திருப்பூர் மாவட்டம் அவினாசி ரோடு அருகே உள்ள விவேகானந்தா ஆசிரமத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் 11 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் சில குழந்தைகள் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருப்பூர் அவினாசி ரோடு திருமுருகன்பூண்டி அருகில் உள்ளது விவேகானந்தா ஆசிரமம். இந்த ஆசிரமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று காலையில் உணவு சாப்பிட்ட சிறுவர்கள் திடீரென உடல் உபாதைகள் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். இதில் 11 வயது கொண்ட 2 சிறுவர்களும், 14  வயதுகொண்ட ஒரு சிறுவனும் என மூன்று சிறுவர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. 10 க்கும் மேற்பட்ட  சிறுவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் சில மாணவர்கள் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்த தகவல்கள் வெளியான நிலையில், சம்பவ இடத்திலும், அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள சிறார்களிடமும் திருமுருகன்பூண்டி காவல் நிலைய போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கெட்டுப் போன உணவை சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: