ஞாயிறு, 2 அக்டோபர், 2022

ஈரானில் ஓட்டலில் ஹிஜாப் இன்றி சாப்பிட்ட பெண்.. சித்ரவதை சிறையில் அடைப்பு.... தொடரும் கொடூரம்-பதற்றம்

ஓட்டலில் சாப்பிட்ட 2 பேர் கைது

tamil.oneindia.com  -  Nantha Kumar R  :  தெஹ்ரான்: முஸ்லிம் நாடான ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தான் ஓட்டலில் ஹிஜாப் அணியாமல் உணவு சாப்பிட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இங்கு 7 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் ஹிஜாப்பை கட்டாயமாக அணிய வேண்டும்.
பொது வெளியில் ஹிஜாப் அணிய தவறினால் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். இதற்கு பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இளம்பெண் கொலை


இத்தகைய ஹிஜாப் விதிகளை அரசு திரும்ப பெற வேண்டும் என ஈரானில் பெண்கள் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் ஈரான் அரசு கண்டுக்கொள்ளவில்லை. இந்நிலையில் தான் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி குர்திஸ்தானை சேர்ந்த 22 வயது மாஷா அமினி என்ற இளம்பெண்ணை நீதிநெறியை கடைப்பிடிக்க செய்யும் கலாச்சார போலீசார் சரமாரியாக தாக்கினர். இதில் கோமா நிலைக்கு சென்ற மாஷா அமினி இறந்தார்.

தொடர் போராட்டம் - 75 பேர் பலி
இது ஈரானில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெண்கள் வீதிகளில் இறங்கி ஹிஜாப் விதிகளுக்கு எதிராக போராட்டத்தை நடத்தினர். மேலும் பொதுவெளியில் ஹிஜாப்பை எரித்தும், முடிகளை வெட்டியும் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த போராட்டத்தில் இதுவரை 75 பேர் வரை இறந்துள்ளனர்.

ஓட்டலில் சாப்பிட்ட 2 பேர் கைது
இதற்கு மத்தியில் தான் தற்போது ஒரு சம்பவம் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் நடந்துள்ளது. அதாவது டோன்யா என்பவர் உள்பட 2 பெண்கள் ஹிஜாப் அணியாமல் ஓட்டலில் சாப்பிட்டனர். இதுதொடர்பான போட்டோக்கள் இணையதளங்களில் வேகமாக பரவின. இதுபற்றி போலீசார் விசாரித்தனர். இதையடுத்து சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கும்படி போலீசார் டோன்யா உள்பட 2 பேருக்கு நோட்டீஸ் வழங்கினர்.

கைது - சித்ரவதை சிறையில் அடைப்பு
இதையடுத்து டோன்யா போலீசிடம் விளக்கம் அளிக்க சென்றனர். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. டோன்யாவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் டோன்யாவை போலீசார் எவின் சிறையில் அடைத்தனர். எவின் சிறை என்பது கொடூரமான சிறையாக கருதப்படுகிறது. அதாவது ஈரான் அரசை எதிர்க்கும் போராட்டக்காரர்கள் தான் இந்த சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுவார்கள் என்ற தகவல் உண்டு. மேலும் இந்த சிறை எப்போதும் உளவுத்துறையின் கண்காணிப்பில் இருக்கும். ஈரானில் ஹிஜாப்க்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், இந்த இளம்பெண்களின் கைது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை: