செவ்வாய், 4 அக்டோபர், 2022

மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவராகிறார்! மீண்டும் தென்னிந்தியர் கைவசமாகும் காங்கிரஸ்

tamil.oneindia.com  -   Noorul Ahamed Jahaber Ali  :  சென்னை: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் சூழலில் இந்த தேர்தல் மூலமாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி மீண்டும் தென்னிந்தியர்கள் வசமாகும் வாய்ப்பு பிரகாசமாகி இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்த ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து பதவி விலகினார்.
அதன் பின்னர் புதிய தலைவராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை.
காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சோனியா காந்தியே இடைக்கால தலைவராக பதவியேற்று கட்சியை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார். ஆனால், அடுத்தடுத்த தேர்தல்களில் படுதோல்வியடைந்ததால் அக்கட்சிக்குள் பூசல்கள் வெடித்தன.
தலைவர் தேர்தல்
இந்த நிலையில் அக்டோபர் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அக்டோபர் 19 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 தேதி தொடங்கி நேற்று (செப். 30 ஆம் தேதி) வரை நிறைவடைந்தது.

விலகிய கெலாட்
இதில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டை புதிய தலைவராக்க காந்தி குடும்பம் முடிவு செய்தது. அதேபோல் சசி தரூர், மல்லிகார்ஜுன் கார்கே, திக் விஜய் சிங் ஆகியோரும் போட்டியிட திட்டமிட்டனர். இந்த நிலையில் அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சச்சின் பைலட் முதலமைச்சராவதற்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனால் காங்கிரஸ் தலைமை அசோக் கெலாட் மீது அதிருப்தியடைந்த நிலையில் அவர் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

கார்கேவுக்கு ஆதரவு
மல்லிகார்ஜுன கார்கே தேர்தலில் போட்டியிடுவதால் திக் விஜய் சிங்கும் இதிலிருந்து விலகினார். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளார் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தலைமை வெளியிட்டது. இதில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் நேருக்கு நேர் மோதுகின்றனர். சசி தரூருக்கு கேரள காங்கிரஸ் மற்றும் அகில இந்திய காங்கிரஸில் எதிர்ப்பலை இருப்பதால் கார்கேவுக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

தென்னிந்தியர் கையில்
இந்த தேர்தல் மூலமாக காங்கிரஸ் கட்சியின் தலைமை காமராஜர் காலத்துக்கு பிறகு மீண்டும் தென்னியர் கைக்கு வர இருக்கிறது. இதற்கு காரணம் வேட்பாளர்களான சசி தரூர், மல்லிகார்ஜுன கார்கே ஆகிய இருவரும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள். மல்லிகார்ஜுன கார்கே கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். அம்மாநில அமைச்சராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்தவர். மற்றொரு வேட்பாளரான சசிதரூர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்.

30 ஆண்டுக்கு பின்
நீலம் சஞ்சீவன ரெட்டி, காமராஜர், எஸ்.நிஜலிங்கப்பா, பி.வி.நரசிம்மராவ் ஆகியோர் இதுவரை தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர்கள். 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வரிசையில் தற்போது யார் இணைவார்கள் என்ற கேள்விக்கு அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் முடிவுகள் பதிலாக கிடைக்கும்.

கருத்துகள் இல்லை: