வெள்ளி, 7 அக்டோபர், 2022

இலவச பேருந்து வேண்டாம் என்பவர்கள் டிக்கெட் வாங்க அனுமதி.. திட்டத்தை முடக்க சதி?

மாலைமலர் : சென்னை:  தமிழகத்தில் கடந்த ஆண்டு மே 8-ந்தேதி முதல் சாதாரண பஸ்களில் பெண் பயணிகள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவையில் அரசு டவுன் பஸ்சில் ஏறிய மூதாட்டி ஒருவர் எனக்கு இலவச டிக்கெட் வேண்டாம். நான் ஓசியில் பஸ்சில் பயணம் செய்ய விரும்பவில்லை. பணத்தை வாங்கிக் கொண்டு டிக்கெட் கொடுக்குமாறு கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் கண்டக்டர் வேறு வழியின்றி அந்த மூதாட்டியிடம் 5 ரூபாய் பெற்றுக்கொண்டு டிக்கெட் கொடுத்தார்.
இந்த சம்பவத்தை அந்த பஸ்சில் இருந்த சகபயணிகள் தங்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ பரபரப்பாக வைரலானது.
இதையடுத்து பஸ்சில் டிக்கெட் கேட்டு கண்டக்டரிடம் பெண்கள் வாக்குவாதம் செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் பஸ் கண்டக்டர்கள் இதுபோன்ற பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்று புரியாமல் தவித்தனர்.இந்த நிலையில் இலவச பஸ் டிக்கெட் விவகாரத்தில் பெண் பயணிகளுக்கும். கண்டக்டர்களுக்கும் பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்க இலவச பயணம் வேண்டாம் என்று டிக்கெட் எடுக்க விரும்பும் பெண் பயணிகளிடம் கட்டணம் பெறலாம் என்று அரசு பஸ் கண்டக்டர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சாதாரண பஸ்களில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் கிடையாது. ஆனால் பெண் பயணிகள் தங்களுக்கு இலவச பயணம் வேண்டாம் என்று டிக்கெட்டுக்கு பணம் கொடுத்தால் எங்களால் மறுக்க முடியவில்லை.

தினமும் 2 அல்லது 3 பயணிகளாவது பணம் கொடுத்து டிக்கெட் கேட்கிறார்கள். நாங்கள் மறுத்தால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதுபற்றி நாங்கள் எங்கள் கிளை அதிகாரிகளிடம் பிரச்சினைகளை எடுத்து சொன்னோம்.

அப்போது 'டிக்கெட் கட்டணத்துக்கு பெண்கள் பணம் கொடுக்க விரும்பினால் பெற்றுக் கொள்ளு மாறு கூறினார்கள்' என்றார்.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தினமும் சராசரியாக 39 லட்சத்து 21 ஆயிரம் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர். சாதாரண பஸ்களில் பயணம் செய்பவர்களில் 63 சதவீதம் பேர் பெண்கள். பெண் பயணிகளுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு டிக்கெட்டிற்கு மாநில அரசு 16 ரூபாயை போக்குவரத்து கழகத்துக்கு செலுத்துகிறது.

இலவச பஸ்களில் பெண் பயணிகளிடம் இருந்து டிக்கெட் கட்டணம் வசூலிப்பது குறித்து நாங்கள் கண்டக்டர்களுக்கு எந்த உத்தரவும் வழங்கவில்லை. ஏனெனில் போக்குவரத்து துறையில் அதுபோன்ற வழிகாட்டுதல்கள் இல்லை. விதிமுறைப்படி இலவச பஸ்களில் பெண் பயணிகளிடம் இருந்து டிக்கெட் கட்டணம் வசூலிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: