வெள்ளி, 7 அக்டோபர், 2022

மகாபலிபுரம் தாஜ்மஹாலை பின்தள்ளியது! உலக மக்களை அதிகம் கவர்ந்த மகாபலிபுரம் – தமிழ்நாட்டிற்கு பெருமை

tamil.nativeplanet.com  - Yogalakshmy Ponnan  :  உலக அதிசயங்களில் ஒன்றான, இந்தியாவின் மிக முக்கிய நினைவுச்சின்னமான தாஜ்மஹால் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலம் என்பது உலகறிந்த விஷயமாகும்!
இந்திய தொல்லியல் துறையின் 'இந்திய சுற்றுலா புள்ளிவிவரங்கள் 2022' என்ற தலைப்பில் உலக சுற்றுலா தினத்தன்று துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வெளியிட்ட அறிக்கையின் படி, நம் நாட்டில் வெளிநாட்டினரால் அதிகம் பார்வையிடப்பட்ட நினைவுச்சின்னங்களின் பட்டியலில் தாஜ்மஹாலை பின்னுக்கு தள்ளி தமிழ்நாட்டின் மகாபலிபுரம் முதலிடம் பிடித்துள்ளது! அதனைப் பற்றிய ருசிகரமான தகவல்கள் இதோ!
மகேந்திரவர்மனின் காலம் கடந்த படைப்புகள்
பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட இந்த 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கடற்கரை கோவில்களும், சிற்பங்களும், குடைவரை கோவில்களும் உலக பிரசித்தி பெற்றவை. மாமன்னன் மகேந்திரவர்மனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கற்களால் கட்டப்பட்ட ரதங்களும், கோவில்களும் காலம் கடந்து பெருமையோடு நிற்கிறது. இதன் நேர்த்தியான கட்டிடக்கலை மற்றும் நுணுக்கம் காரணமாக யுனெஸ்கோவின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. ஆண்டுதோறும் இந்த அதிசயத்தைக் காண லட்சக்கணக்கான மக்கள் இங்கு வருகை தருவது வழக்கம்.

இந்திய சுற்றுலாப் புள்ளிவிவரம் 2022
யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னத்தில் வகைப்படுத்தப்பட்ட தமிழக நகரமான மாமல்லபுரம், வெளிநாட்டுப் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் தாஜ்மஹாலைத் தோற்கடித்துள்ளது என்று சுற்றுலாத் துறை அமைச்சர் வெளியிட்ட இந்திய சுற்றுலாப் புள்ளிவிவரம் 2022 தெரிவித்துள்ளது. இதனை செப்டம்பர் 27 அன்று புது தில்லி விஞ்ஞான் பவனில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அவர்கள் வெளியிட்டார்.

தாஜ்மஹாலை ஓவர்டேக் செய்த மகாபலிபுரம்
சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சென்னையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாமல்லபுரத்திற்கு 2021-22ஆம் ஆண்டில் 1,44,984 வெளிநாட்டுப் பயணிகள் வந்துள்ளனர். சதவீத அடிப்படையில் மகாபலிபுரம் சிற்பங்கள் 45.50 வெளிநாட்டினரை ஈர்த்துள்ளது. ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் 38,922 வெளிநாட்டு பார்வையாளர்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது, இது மொத்த பார்வையாளர்களில் 12.21 சதவீதமாகும்.

மகாபலிபுரத்தின் சிறப்புகள்
இந்த தளத்தில் 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டு இந்து மத நினைவுச்சின்னங்களின் தொகுப்பு உள்ளது. 40 புராதன கோவில்கள் மற்றும் நினைவுச்சின்னங்களில் கங்கையின் வம்சாவளி உட்பட திறந்தவெளி பாறைகள், பஞ்ச ரதங்கள், ஒற்றைக்கல் பிரமிடு கட்டமைப்புகள், 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 10 பாறை வெட்டப்பட்ட குகைக் கோயில்கள் மற்றும் கடற்கரை கோயில் ஆகியவை அமைந்துள்ளன.

தமிழகத்திற்கு மேலும் பெருமை சேர்த்த மற்ற சுற்றுலாத் தலங்கள்
இந்திய சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ளப் பட்டியலில் உள்ள முதல் 10 நினைவுச் சின்னங்களில் ஆறு தமிழகத்தில் அமைந்துள்ளன. இதுவே ஒரு பெருமைப்படக்கூடிய விஷயமாகும். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடலோரக் குக்கிராமமான சாளுவன்குப்பத்தில் உள்ள புலித்தலை, பாறைக் கோயில் மற்றும் இரண்டு நினைவுச்சின்னங்கள்,

செஞ்சி மாவட்டத்திற்கு அருகிலுள்ள செஞ்சி கோட்டை, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அருகிலுள்ள வட்டக்கோட்டை கோட்டை, திருமயம் கோட்டை, பாறை வெட்டப்பட்ட ஜெயின் கோயில் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள சித்தன்னவாசல் ஆகியவையாகும்

வெளிநாட்டவர் இங்கே அதிகம் வருகை தர காரணம் என்ன?
சென்னைக்கு அருகே கலாச்சார ரீதியாக மிகவும் வளமான நகரமாக அடையாளம் காணப்படும் மகாபலிபுரம் ஆண்டுதோறும் எண்ணற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.

காலம் கட ந்த சிற்பங்கள் - கடற்கரை கோவில்கள், பஞ்ச ரதம், மகிஷாசுரமர்த்தினி மண்டபம், கிருஷ்ணா பட்டர்பால், கிருஷ்ணா குகைக் கோயில், அர்ஜுனா பெனன்ஸ், மற்றும் குகைக் கோயில்கள் சிறப்பு வாய்ந்தவை.

கடற்கரைகளில் சர்ஃபிங், ஃபிஷிங், கேம்பிங் மற்றும் சைட்சீயிங் - சர்ஃபிங், உள்ளூர் ஆட்களுடன் சேர்ந்து ஃபிஷிங், இரவில் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து கேம்பிங் ஆகியவற்றில் ஈடுபடலாம்.

க்ரோகோடைல் பேங்க் மற்றும் கடும்பாடி கிராமம் - மகாபலிபுரத்தில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் வழியில் கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் இந்த அழகிய கிராமமும், முதலை பண்ணையும் பார்க்க வேண்டியவை.

ஆலம்பரை கோட்டை க்கு பைக் ரைடு - கிழக்கு கடற்கரைச் சாலையில் மரங்கள், செடிகள், கடற்கரை என ஆனந்தாமாக பைக் ரைடு செல்லலாம்.

சீஷெல் மற்றும் கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகம் - 40,000 க்கும் மேற்பட்ட அரிய கடல் ஓடுகளின் மாதிரிகள், முத்துக்கள், மீன்வளம், டைனோசர் படிமங்கள் ஆகியவற்றை இங்கே காணலாம்.

ஷாப்பிங் - கடல் ஓடுகளால் செய்யப்பட்ட நினைவுப் பொருட்களால் மாமல்லபுரம் நிரம்பி வழிகிறது, அவற்றை வாங்கி மகிழ நம்மைக் காட்டிலும் வெளிநாட்டவர் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஒட்டுமொத்தமாக மேற்கூறிய அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி மகாபலிபுரத்தை ஒரு சர்வதேச சுற்றுலாத் தலமாக நிரூபிக்கின்றது

கருத்துகள் இல்லை: