Vigneshkumar - Oneindia Tamil : பெங்களூர்: கர்நாடகாவில் புதிய பாடத்திட்டத்தில் ஆர்எஸ்எஸ் நிறுவனரின் பேச்சு சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா பாஜகவைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
மேடவாக்கம் அருகே ரிசார்ட் ஸ்டைல் வில்லா @ 1.82 கோடி ரூபாய் முதல்!
கர்நாடக மாநிலத்தில் 10 ஆம் வகுப்புக்கான திருத்தப்பட்ட பாடத்தில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கேவாரின் உரையின் சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
இதற்கு அங்குள்ள கல்வியாளர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்த விவகாரம் குறித்து முன்னாள் முதல்வரும் கர்நாடக மூத்த தலைவருமான சித்தராமையா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஆரியர்கள் இந்தியர்களா
கர்நாடக தலைநகர் பெங்களூரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் முதல்வர் சித்தராமையா, "இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ன பூர்வீக இந்தியர்களா? நாங்கள் சில விஷயங்கள் குறித்துப் பேச விரும்பாததால் அமைதியாக இருந்தோம். ஆரியர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்களா சொல்லுங்கள்?
ஆர்எஸ்எஸ் அமைப்பினர் திராவிடர்களா?
ஆர்எஸ்எஸ் அமைப்பினர் திராவிடர்களா? இந்த நேரத்தில் நாம் அனைவரும் வேர்களுக்குச் செல்ல வேண்டும். 600 ஆண்டுக்கால முகலாய ஆட்சிக்கு யார் பொறுப்பு? நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் அவர்கள் எப்படி வந்திருப்பார்கள். அவர்களுக்கு யார் இடம் கொடுத்தார்கள்? 200 ஆண்டுக்கால ஆங்கிலேயர் ஆட்சிக்கு யார் காரணம்? கர்நாடகாவில் உள்ள குழந்தைகள் பாடப்புத்தகங்களில் என்ன படிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு ரோஹித் சக்ரதீர்த்தா என்ற ஒற்றை நபருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பகத் சிங் பாடம் நீக்கம்
நாம் எங்கே செல்கிறோம்? பகத் சிங்கின் பாடம் நீக்கப்பட்டு. அதற்குப்பதிலாக ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவாரின் உரை சேர்க்கப்பட்டுள்ளது. பகத் சிங்கை விடத் தேசபக்தி நிறைந்த நபரைச் சொல்ல முடியுமா? பாஜக வரலாற்றைத் திரிக்க முயல்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, சரியான வரலாறு என்ன என்பதை அறிவதே கடினமாகிவிட்டது" என்று கடுமையாகச் சாடி பேசினார்.
மல்லிகார்ஜுன கார்கே
கர்நாடகாவில் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது குறித்து ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் பாஜகவைக் கடுமையாகச் சாடினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "ஹெட்கேவாரின் 1921 உரையைக் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். நாட்டின் விடுதலை போரில் ஹெட்கேவாரின் பங்களிப்பு என்ன? பாடங்களில் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தை சேர்த்து பகத்சிங், நேரு மற்றும் காந்தி ஆகியோரை ஒவ்வொன்றாக அகற்ற முயல்கிறார்கள். இதை நாம் எதிர்த்துப் போராட வேண்டும்" என்று அவர் சாடினார்.
பாஜக பதிலடி
அதேநேரம் ஆரியர்கள் குறித்த சித்தராமையாவின் கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர், "மீண்டும் மீண்டும், சித்தராமையா உள்ளிட்ட சிலர் மெக்காலேயின் ஆவியால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். காந்தியும் நேருவும் இந்தியர்கள் இல்லையா? காந்தி, நேரு, திலகர் மற்றும் பகத்சிங் இந்தியர்கள் இல்லை என்றால் யார் தான் இந்தியர்?" என்று பதிலுக்குக் கேள்வி எழுப்பி உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக