Nagapattinam - Heritage City : நாகை பற்றி அறியாத தகவல் - 20
நாகப்பட்டினத்தை போர்த்துகீசியர் 1520-30களிலேயே கைப்பற்றி விட்டனர். இதே சமயத்தில் சென்னையின் சாந்தோம் நகரையும் (பழைய மயிலாப்பூர்) அவர்கள் கைப்பற்றினர். நாகையைச் சுற்றி இருந்த பத்து கிராமங்கள் போர்த்துகீசிய வணிகர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன (நாகை துறைமுகமும் நகரமும், புத்தூர், முட்டம், பொரவச்சேரி, அந்தணப்பேட்டை (அந்தோனிப்பேட்டை என்று போர்த்துகீசியர் குறிப்பிடுகின்றனர்), அழிஞ்ச மங்கலம், கரூரப்பன்காடு, சங்கமங்கலம், திருந்தினமங்கலம், மஞ்சக்கொல்லை, நரியங்குடி).
போர்த்துகீசியருடன் வந்த டொமினிகன், ஃப்ரான்ஸிஸ்கன், அகஸ்டினியன், ஜெஸ்யூட் பாதிரிமார்கள் நாகப்பட்டினத்தில் தங்கி தமது மதமாற்ற பணிகளில் ஈடுபட்டனர். 1540 களில் அவர்கள் தமது பணிகளை தீவிரப்படுத்தினர்.
நாகப்பட்டினத்தில் போர்த்துகீசியர் ஏற்படுத்திய சர்ச்சுகள்: Madre de Deus, São Jerónimo, Paulistas, São Domingos, Nossa Senhora da Nazaré, Sé. இவை தவிர Igreja da Misericordia என்ற ஒரு பெரிய சர்ச்சும் எழுப்பப்பட்டது (அநேகமாக பழைய பீச் எதிரில் உள்ள மாதரசி மாதா ஆலயம் - Lady of Mercy என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றனர்).
நாகப்பட்டினத்தில் 1594ல், அதாவது இன்றைக்கு நானூறு வருடங்களுக்கும் முன்பாகவே பெரிய போர்த்துகீசிய குடியிருப்பு இருந்தது.
தஞ்சாவூரில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த அச்சுதப்ப நாயக்கரின் காலம் அது. அப்போது வடக்கே முகலாய அரசர் அக்பர் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார். சுற்றியிருந்த அனைத்து முஸ்லீம் சுல்தானேட்களும் சேர்ந்து அன்றைய உலகின் தலைசிறந்த நகரான விஜயநகரத்தை உருக்குலையச் செய்த காலகட்டம் (Battle of Talikota - 1565) எனவே அப்போது போர்த்துகீசியருடன் மல்லுக்கட்ட முடியாமல் நாயக்கர்கள் வலுவிழந்திருக்கலாம்.
போர்த்துகீசியருக்கும் நாயக்க மன்னர்களுக்கும் சுமூகமான உறவு இல்லை. ஆங்காங்கே போர்களும் நிகழ்ந்தன. இதே காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் மன்னன், போர்த்துகீசியர்கள் தமிழர்களை கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாற்றுவதை எதிர்த்து போர்த்துகீசியருக்கு எதிராக போர் தொடுத்தான்.
நிர்ப்பந்தம் காரணமாகவோ அல்லது வியாபார அனுகூலம் வேண்டியோ போர்த்துகீசியரின் குடியிருப்பை நாகப்பட்டினத்தில் அனுமதித்த அச்சுதப்ப நாயக்கர் அவர்கள் நாகப்பட்டினத்தில் கோட்டை கட்டிக்கொள்ள அனுமதிக்கவில்லை. பின்னாளில் போர்த்துகீசியரிடமிருந்து நாகப்பட்டினத்தை கைப்பற்றிய டச்சுக்காரர்கள் (ஒல்லாந்தர்), இங்கே கோட்டை கட்டினர்.
போர்த்துகீசியர் நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு அரிசி ஏற்றுமதி செய்தனர். மலாக்கா (மலேஷியா), மணிலா (பிலிப்பைன்ஸ்) ஆகிய நாடுகளுக்கும், இந்தியாவின் மேற்குக்கரையில் இருந்த போர்த்துகீசிய மையங்களுக்கும் நாகையில் இருந்து ஏற்றுமதி நிகழ்ந்தது.
நன்றி: Shipbuilding, Navigation and the Portuguese in Pre-modern India By K.S. Mathew மற்றும் பிற வலைத்தளங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக