மின்னம்பலம் : ஜி ஸ்கொயர் - ஜூனியர் விகடன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை: காவல்துறை!
ஜி ஸ்கொயர் விவகாரத்தில் ஜூனியர் விகடன் இயக்குநர்களின் பெயரை எப்.ஐ.ஆரில் இருந்து நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் புருஷோத்தம் குமார் மயிலாப்பூர் இ-1 காவல்நிலையத்தில், 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாக அளித்த புகாரின் பேரில் கெவின் என்பவர் கைது செய்யப்பட்டார். ஜூனியர் விகடன் பத்திரிகையின் இயக்குநர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கை பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது என அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
ஜி ஸ்கொயர் அளித்த புகாரை மறுப்பதாகவும், புகாரில் கூறப்பட்டிருக்கும் கெவின் பற்றி மேலதிக தகவல் தந்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம் என்றும் ஜூனியர் விகடன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை காவல் துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “ ‘ஜி ஸ்கொயர்’ தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் அந்நிறுவன அலுவலர் புருஷோத்தம் குமார் கடந்த மே 21, 2022 அன்று சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், கெவின் என்பவர், ‘ஜி ஸ்கொயர்’ நிறுவனம் குறித்தும், அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாலா (எ) ராமஜெயம் குறித்தும் ஜூனியர் விகடன் இதழில் அவதூறு செய்தி வெளியிடப்படும் என்றும், சமூக ஊடகவியலாளர்கள் சிலர் மூலம் சமூக வலைதளங்களில் அவதூறாகச் செய்தி பரப்பிவிடுவோம் என்றும் மிரட்டி, பணம் கேட்பதாகத் தெரிவித்து, நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.
புகாரின் அடிப்படையில், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 221/2022ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, முதல் குற்றவாளி கெவின் 2022 மே 22 அன்று கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணை முடிவடைந்துள்ளது.
கெவின் 50 லட்சம் ரூபாய் கேட்டு பிளாக் மெயில் செய்தது விசாரணையில் புலனாயிற்று. அதேபோன்று, அந்த பத்திரிகையில் பணிபுரியும் சிலருடன் பணப் பரிவர்த்தனை நடைபெற்றதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இதற்கும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
எனினும், முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஜூனியர் விகடன் பத்திரிகையின் இயக்குனர்கள் உள்ளிட்ட சிலர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. அதன்படி இவர்களின் பெயர்களை எஃப்ஐஆரில் இருந்து நீக்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-பிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக