மின்னம்பலம் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரில் ஊடக நிறுவனங்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் தலையிட வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் இணைச்செயலாளர் பாரதி தமிழன் மே 22ஆம் தேதி வெளியிட்ட செய்தியில்...
"ஜி ஸ்கொயர் என்கிற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் புருஷோத்தமன் குமார் என்பவர் சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கெவின் என்கிற தனிநபர் மீது 21-05-2002 அன்று புகார் ஒன்றை அளிக்கிறார். கெவின் என்பவர் ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராமஜெயம் என்கிற பாலா என்பவரை அலைபேசி வழியாக தொடர்பு கொண்டு 50 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கவில்லை என்றால் ஜூனியர் விகடன் மற்றும் யூடியூப் போன்ற டிஜிட்டல் மீடியாக்களில் தவறான செய்திகளை வெளியிட செய்வேன் என்றும் கடந்த 09-05-2022 அன்று பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய ஒருவர் ஜி ஸ்கொயர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மிரட்டியதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புகாரில் ஜூனியர் விகடன் நிறுவனத்தின் இயக்குநர்கள் மூவர் பெயரையும் மற்றும் சவுக்கு சங்கர் ,மாரிதாஸ் ஆகியோர் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.
*தற்போது காவல்துறையில் புகார் கொடுத்துள்ள ஜி ஸ்கொயர் நிறுவனம் தங்களைப் பற்றிய செய்தி வெளியிட்டதற்காக ஜூனியர் விகடன் மீது ஏற்கெனவே வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியது.அதற்கு விகடன் நிறுவனமும் பதிலளித்திருக்கும் நிலையில் அதே உள்ளடக்கத்தை கொஞ்சம் கூடுதலாக புகாரில் சேர்த்து காவல் துறையிடம் வழங்கியுள்ளனர்.
புகாரின் உண்மையை முழுமையாக விசாரித்து அறியாமல் வேகவேகமாக ஜூனியர் விகடன் நிறுவன இயக்குநர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பது இதன் பின்னணி குறித்து கேள்விகளை எழுப்புகிறது.
இந்த பொய்ப்புகாரை வழக்காக பதிவு செய்து ஊடகங்களை மிரட்டும் போக்கு கண்டனத்துக்கு உரியது.
இரவு 9 மணிக்கு புகார் பெறப்பட்டு, இரவு 2 மணிக்கு உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, இரவே கைது நடந்துள்ளது.
மேலும், புகாரில், 3வது குற்றவாளியாக “ஜூனியர் விகடனோடு சம்பந்தப்பட்டவர்கள்” என்பது, விகடன் குழுமத்தின் உரிமையாளர் முதல் அந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஓட்டுனர் வரை அனைவரையும் கைது செய்ய, காவல் துறைக்கு உரிமை வழங்கியுள்ளது.
ஜூனியர் விகடன் பெயரை கூறி ஜி ஸ்கொயர் நிறுவனத்தை யாராவது மிரட்டினால், அந்நிறுவனத்தினர் விகடன் நிறுவனத்தை அணுகி தெளிவு பெற்றிருக்கலாம். அது உண்மையா என்றும் விசாரித்திருக்கலாம். ஆனால், காவல் துறையில் ஜி ஸ்கொயர் புகார் அளிப்பதும், இரவோடு இரவாக, மின்னல் வேகத்தில் சென்னை மாநகர காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதும், ஆளும் கட்சிக்கு எதிராக செய்தி வெளியிடும் பத்திரிக்கையாளர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கையாகவே கருத வேண்டியுள்ளது.*
ஊடகங்களுடன் நல்லுறவு பேணும் தமிழக முதல்வரின் கவனத்திற்கு இந்த வழக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்காது என்று நம்புகிறோம்.
ஊடக சுதந்திரத்தை மதிக்கும் முதலமைச்சர் உடனடியாகத் தலையிட சென்னை பத்திரிகையாளர் மன்றம் வேண்டுகிறது" என்று பாரதி தமிழன் குறிப்பிட்டுள்ளார்.
வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக