வியாழன், 26 மே, 2022

பாலியல் தொழில் - வயதுவந்த, சுய ஒப்புதலோடு ஈடுபடுவோர் மீது குற்ற நடவடிக்கை கூடாது! உச்சநீதிமன்றம் அதிரடி

BBC - சுசித்ரா கே.மொகந்தி -     பிபிசி செய்திகளுக்காக
வயதுவந்த, சுய ஒப்புதலோடு பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் விஷயத்தில் போலீஸ் தலையிடவோ, அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவோ கூடாது,
அவர்கள் கண்ணியத்தோடு நடத்தப்படவேண்டும்
குற்றவாளிகளைப் போல நடத்தப்படக்கூடாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. 2011ம் ஆண்டு கொல்கத்தாவில் பாலியல் தொழிலாளி ஒருவர் மீது வழக்குத் தொடரப்பட்டதை தாமாக முன்வந்து கவனத்தில் எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபன்னா அடங்கிய ஆயம், இந்த உத்தரவை மே 19-ம் தேதி பிறப்பித்துள்ளது.


பாலியல் தொழிலாளிகள் தொடர்பில் இதுபோன்ற ஒரு உத்தரவை உச்ச நீதிமன்றம் முதல் முறையாகப் பிறப்பித்துள்ளது என்கிறார், இந்த வழக்கில் தொர்புடைய தர்பார் மகிளா சமன்வய கமிட்டி சார்பில் வாதிட்ட மூத்த வழக்குரைஞர் ஆனந்த் குரோவர். "உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பாலியல் தொழிலாளிகள் சமூகத்துக்கு நல்ல செய்தியை அளித்துள்ளது. இனி பாலியல் தொழிலாளிகள் கண்ணியத்தோடு நடத்தப்படவேண்டும். அவர்கள் குற்றவாளிகளைப் போலவோ, அவர்கள் குடிமக்களே அல்ல என்பதைப் போலவோ நடத்தப்படக்கூடாது. ரேஷன் அட்டை, ஆதார் போன்ற அடையாள அட்டைகள் பெறுவது அவர்கள் உரிமை என வரையறுக்கப்பட்டுள்ளது," என்கிறார் அவர்.

ஒரு ரெய்டு நடத்தும்போது பாலியல் தொழிலாளிகள் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தால், அவர்கள் சுய விருப்பத்தோடு அதில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தால் அவர்களை போலீசார் அவர்களை கைது செய்யக்கூடாது என்று உத்தரவில் கூறப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார் குரோவர்.

ஆனால், பாலியல் தொழிலாளிகளின் வேலையை ஒரு தொழிலாக அங்கீகரிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் எதையும் கூறவில்லை என்பதையும் குரோவர் தெளிவுபடுத்துகிறார்.
விளம்பரம்

    வீட்டு வேலைக்கு அழைத்து வந்து பாலியல் தொழில்: சாலையில் வீசப்பட்ட இளம் பெண்
    இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க பெண் எம்.பி.க்கள் ஆதரவு

பாலியல் தொழிலாளிகளை இந்தியாவில் கண்ணியத்தோடு நடத்துவது தொடர்பான பிரச்னையில் உச்ச நீதிமன்றம் இத்தகைய ஆணை ஒன்றைப் பிறப்பித்திருப்பது மிக நல்லது என பிபிசியிடம் கூறினார், மற்றொரு பிரபல உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் காமினி ஜெய்ஸ்வால். "அவர்களை எப்போதும் குற்றவாளிகளைப் போல நடத்திக்கொண்டிருக்க முடியாது. அவர்களும் மனிதர்கள்தான். அவர்கள் கண்ணியத்தோடு நடத்தப்படவேண்டும் என்பது மிக நல்ல விஷயம். அவர்களுக்கு செய்வதற்கு வேறு ஏதும் இல்லை என்பதால்தான் இதையெல்லாம் செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்," என்று காமினி பிபிசியிடம் கூறினார்.

அவர்கள் தங்கள் பாதுகாப்புக்காக தொடர்புகொள்ளவேண்டிய எண் ஒன்றை அரசு அளிக்கவேண்டும், உணவு, உறைவிடம் போன்றவற்றை அளித்து, நிர்பந்தத்தின் பேரில் அவர்கள் இந்த தொழிலுக்குள் தள்ளப்படும் நிலையை அரசு தடுக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். போலீசுக்கு இந்த உத்தரவு தொடர்பாக கூருணர்வு ஊட்டி, அவர்களைப் பொறுப்பாக்கும் பணியை செய்யவேண்டும் என்றும் அவர் கூறுகிறார். "பாலியல் தொழிலுக்கு கண்ணியத்தை அளித்து, இந்த தொழிலை மேற்கொள்வோர் போலீஸ் உள்ளிட்டோரால் பாதிப்புக்கும், வன்முறைக்கும் உள்ளாகும் நிலையை கருத்தில்கொண்டு உச்ச நீதிமன்றம் மிக முற்போக்கான ஓர் ஆணையைப் பிறப்பித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார் மற்றொரு உச்ச நீதிமன்ற வழக்குரைஞரும், இந்தப் பிரச்சனைகளில் குரல் கொடுப்பவருமான வ்ரிந்தா குரோவர்.
உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவும் பரிந்துரைகளும்

2011 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றத்தால் இந்த பிரச்னையை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட முழு பிரச்னையையும் ஆராய ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு அளித்த பரிந்துரைகளை முழுமையாக ஆராய்ந்த பின்னர், மே 19, 2022 அன்று இந்த ஆணையைப் பிறப்பித்துள்ளது. பிரதீப் கோஷ் அந்தக் குழுவின் தலைவராக செயல்பட்டார். மூத்த வழக்கறிஞர் ஜெயந்த் பூஷண், உஷா பல்நோக்கு கூட்டுறவு சங்கம், இந்திய அரசு மற்றும் பிற தொடர்புடைய தரப்புகள் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தன.

அந்தக் குழு உச்ச நீதிமன்றத்தில் அளித்த பரிந்துரையில்

(1) கடத்தல் தடுப்பு,

(2) பாலியல் தொழிலை விட்டு வெளியேற விரும்பும் பாலியல் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளித்தல், மற்றும்

(3) பாலியல் தொழிலைத் தொடர விரும்பும் பாலியல் தொழிலாளிகள் அதைக் கண்ணியத்துடன் தொடரும் சூழ்நிலை வேண்டும்.

என்ற பரிந்துரைகளை அந்தக் குழு அளித்தது.

உச்ச நீதிமன்றமும் இதில் பெரும்பாலான பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு சுய விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடுவோரை போலீஸ் கைது செய்யக்கூடாது என்று தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

சட்டத்தின்கீழ் பாதுகாப்பு பெறுவதில் பாலியல் தொழிலாளிகளுக்கும் சம உரிமை உண்டு. (பாலியல் நடத்தை என வரும்போது) வயது, சம்மதம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு குற்றவியல் சட்டம் எல்லோர் விஷயத்திலும் சமமாக செயல்படவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் ஆணையில் கூறியிருப்பது என்ன?

பாலியல் தொழிலாளியின் குழந்தைகள் அவர்கள் செய்யும் தொழில் காரணமாக அவர்களிடம் இருந்து பிரிக்கப்படக்கூடாது. மனித கண்ணியத்தின் அடிப்படைப் பாதுகாப்பு பாலியல் தொழிலாளிகளுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் உரியது என்று நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

வயது முதிராத, மைனரான ஒருவர் பாலியல் தொழில் விடுதியில் காணப்பட்டால், அந்த குழந்தை கடத்தப்பட்டதாகவே எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதையும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அதே நேரம், அந்த மைனர் நபர் தனது மகன் அல்லது மகள் என்று அந்த விடுதியில் உள்ள பாலியல் தொழிலாளி ஒருவர் கூறினால் அந்த குழந்தைக்கு பரிசோதனை செய்து அந்தக் கூற்று சரியா என்று பார்த்து அது உண்மை எனில் அந்தக் குழந்தையை பலவந்தமாக பிரிக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
தாய்லாந்தில் தொழிலாளர் தினத்தில் ஃபேஷன் ஷோ நடத்திய பாலியல் தொழிலாளர்கள். பாலியல் தொழிலும் ஒரு தொழிலே என்று கூறும் பதாகை ஏந்தியிருக்கிறார் ஒரு பெண்.

ஒரு பாலியல் தொழிலாளி தமக்கு எதிராக பாலியல் குற்றம் இழைக்கப்பட்டதாக புகார் கொடுத்தால் அந்தப் புகார் பாகுபாட்டுடன் நடத்தப்படக்கூடாது; பாலியல் தாக்குதலுக்கு உள்ளான பாலியல் தொழிலாளிகளுக்கு மருத்துவ, சட்ட உதவிகள் வழங்கப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. "பாலியல் தொழிலாளிகளிடம் போலீஸ் முரட்டுத் தனத்துடனும், வன்முறை வழியிலும் பல நேரங்களில் நடந்துகொள்வது தெரியவருகிறது. அவர்கள் உரிமை ஏதுமற்ற வர்க்கம் என்பதைப் போல இருக்கிறது அந்த அணுகுமுறை" என்று குறிப்பிட்ட நீதிமன்றம் போலீசுக்கு கூருணர்வு அளிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களோ, குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களோ யாராக இருந்தாலும், பாலியல் தொழிலாளிகள் கைது, மீட்பு, ரெய்டு நடவடிக்கைக்கு உள்ளாகும்போது அவர்களின் அடையாளத்தை வெளியிடாமல் தவிர்க்க ஊடகங்கள் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பாலியல் தொழிலாளிகளிடம் இருந்து மீட்கப்படும் ஆணுறை உள்ளிட்டவற்றை குற்றம் நடந்ததற்கான ஆதாரமாக போலீஸ் எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: