செவ்வாய், 24 மே, 2022

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

 மின்னம்பலம் : அரசியல்வாதிகள் இந்த பட்டின பிரவேசம் நிகழ்வை தங்களுக்கு ஆதாயமாக பயன்படுத்திக் கொண்டு விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார் தருமபுரம் ஆதீனம். அதன் ஒரு பகுதியாகத்தான் பட்டினப் பிரவேசத்தை எந்த வகையிலும் அரசியலாக்கி விட வேண்டாம் என தருமபுரம் ஆதீனம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த அடிப்படையில் பட்டின பிரவேச நிகழ்ச்சியில் எந்த அரசியல் தலைவரும் தங்களை முன்னிறுத்திக் கொண்டு விடக் கூடாது என்பதில் ஆதின தரப்பினர் உறுதியாக இருந்திருக்கிறார்கள்.

May be an image of 1 person
அதேநேரம் மயிலாடுதுறையில் இருக்கும் உள்ளூர் அரசியல் பிரமுகர்களுக்கு எப்போதும் போல கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை ஆதின தரப்பிலிருந்து கொடுத்தார்கள்.

மயிலாடுதுறை நகராட்சி குண்டா மணி செல்வராஜ், மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்குமார் மற்றும் அதிமுக பாமக பாஜக என உள்ளூர் அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும் பட்டின பிரவேசம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். மயிலாடுதுறை திமுக மாவட்டச் செயலாளரும் பூம்புகார் எம்எல்ஏவுமான நிவேதா முருகன், மாவட்ட பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன் ஆகியோரும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக திட்டம் இருந்தது. ஆனால் நேற்று இரவு திமுக ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்த படியால் அந்த கூட்டமும் முடிவதற்கு 11 மணி ஆகிவிட்டது. அதனால் அமைச்சர் மெய்யநாதன் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என்கிறார்கள் திமுகவினர்.

நானும் பல்லக்கு தூக்க வருவேன் என்று முன்னரே அறிவித்திருந்த வகையில் பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அண்ணாமலை வருகையை காரணம் காட்டி ஆதின வாசல்வரை பாஜக கொடிகளை கட்டுவதற்கு அந்த கட்சியினர் முயற்சி செய்தனர். ஆனால் ஆதீன தரப்பும் போலீசும் இதை அனுமதிக்கவில்லை.

தருமபுரம் ஆதீனத்தை பட்டின பிரவேசம் தொடங்குவதற்கு முன்பாக சுமார் ஒன்பது மணிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா ஆகியோர் சந்தித்தனர்.

பல்வேறு பூஜைகளுக்கு பிறகு பல்லக்கு இருக்கும் இடம் நோக்கி மெதுவாக நடந்து சென்றார்‌ ஆதீனம்.அவர் பல்லக்கில் ஏறி அமர்ந்ததும் பரம்பரை பரம்பரையாக பல்லக்கு தூக்குவதற்கு பாத்தியப்பட்ட படையாட்சியார் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல்லக்கை கிளப்பினார்கள். அப்போது அண்ணாமலை பல்லக்கைத் தூக்கி சில அடிகள் எடுத்து வைக்க ராஜா பல்லக்கை தொட்டு கும்பிட்டதோடு நிறுத்திக் கொண்டார்.

திருவாரூர் தேர், கும்பகோணம் மகாமகம் போல முற்றிலும் ஆன்மீக திருவிழாவாகவே நடந்து முடிந்திருக்கிறது பட்டினப் பிரவேசம்.

. இந்த நிகழ்ச்சியின் மூலம் தங்களுக்கு அரசியல் ஆதாயம் தேடலாம் என்று நினைத்த அரசியல் தலைவர்களுக்கு தருமபுரம் ஆதீனம் இடமளிக்க வில்லை என்பதுதான் உள்ளூர் மக்களின் நிம்மதியாக இருக்கிறது.

தஞ்சை டிஐஜி தலைமையில்

நாகை மாவட்ட எஸ்பி ஜவஹர், மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி நிஷா ஆகிய இரண்டு மாவட்ட எஸ்.பி.கள் மற்றும் 600 போலீசார் பாதுகாப்பு கொடுக்க சுத்தமான ஆன்மீக திருவிழாவாகவே நடந்து முடிந்திருக்கிறது பட்டினப் பிரவேசம்.

இரண்டு மூன்று வாரங்களாகவே பட்டின பிரவேசம் பாலிடிக்ஸ் பிரவேசம் ஆகிவிடுமோ என்ற சந்தேகம் இருந்த நிலையில் அதை தருமபுரம் ஆதீனம் தகர்த்தெறிந்து உண்மையான ஆன்மீக விழாவாகவே நடத்தியிருக்கிறார் என்கிறார்கள் மயிலாடுதுறை பொதுமக்கள்.

வேந்தன்

கருத்துகள் இல்லை: