சனி, 15 ஜனவரி, 2022

முல்லைப் பெரியாறு: இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலை! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

முல்லைப் பெரியாறு: இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலை!

மின்னம்பலம் : பென்னிகுயிக் சிலை இங்கிலாந்தில் நிறுவப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் ஜான் பென்னிகுயிக்கின் பிறந்தநாள் இன்று.


இந்நிலையில், இங்கிலாந்தின் பென்னிகுயிக் சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையைப் பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்து அமைத்த, கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் புதிய சிலையை, அவர் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழக அரசு சார்பில் நிறுவப்படும்.

இதற்கான முயற்சிகள் அனைத்து லண்டன் வாழ் தமிழர்களால் எடுக்கப்பட்டு, சிலை நிறுவ இங்கிலாந்து சட்டப்படி, செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளார்கள்.

முல்லைப் பெரியாறு திட்டத்திற்குத் தொடர்ந்து ஆங்கிலேய அரசால் நிதியுதவி செய்ய இயலாத சூழ்நிலையில், கர்னல் ஜான் பென்னிகுயிக் இங்கிலாந்து சென்று தனது குடும்ப சொத்துகளை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு எத்தகைய தடைகள் வந்தாலும், இந்த அணையை எப்படியாவது கட்டி முடிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடனும், மன உறுதியுடனும், விடா முயற்சியுடனும், துணிவுடன் செயல்பட்டு பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். இந்த அணை மூலம் சுமார் 2,19,840.81 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன.

பென்னிகுயிக் பிறந்தநாளில் சிலை நிறுவப்படுவது குறித்து அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா


கருத்துகள் இல்லை: