வெள்ளி, 14 ஜனவரி, 2022

அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி: 700 காளைகள், 300 வீரர்கள் களம் காணுகின்றனர்...!

 தினத்தந்தி  : மதுரை,  பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றதாகும். அதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் தினமான (இன்று) நடக்கிறது.
பாலமேட்டில் நாளையும், அலங்காநல்லூரில் 17-ந் தேதி நடக்கிறது. இந்தாண்டு கொரோனா காரணமாக தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் 150 பார்வையாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும், பார்வையாளர்கள், மாடு பிடிவீரர்கள், மாட்டு உரிமையாளர்கள் என அனைவரும் 2 தவணை தடுப்பூசி கட்டாயம் போட்டு இருக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

அதோடு மாடு பிடி வீரர்களும், காளைகளும் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. மேலும் இதுவரை இல்லாத முறையாக மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பதிவு ஆன்லைனில் நடந்தது. அதன்படி 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக மொத்தம் 4 ஆயிரத்து 544 காளைகளும், 2001 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்து இருந்தனர்.

அதில் தற்போது அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்கு 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் அமைச்சர் மூர்த்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த கொரோனா காலத்திலும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். எனவே அவருக்கு மதுரை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மாடு பிடி வீரர்கள், காளைகள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டதுடன், பாகுபாடு இல்லாமல் போட்டிக்கு தகுதியானவர்கள், காளைகள் தேர்வு நடக்கிறது.

கடந்த காலங்களில் இருந்த டோக்கன் முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, அமைதியான ஜல்லிக்கட்டு போட்டிக்கு வித்திடப்பட்டு உள்ளது.

கொரோனா காரணமாக ஜல்லிக்கட்டுக்கு சிறப்பு விருந்தினர்களாக யாரையும் அழைக்கவில்லை. இருப்பினும் மதுரை, தேனி, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதுரை மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கட்சி பாகுபாடின்றி கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதல்-அமைச்சர் சார்பில் சிறந்த காளைக்கு ஒரு காரும், மாடு பிடி வீரருக்கு ஒரு மோட்டார் சைக்கிளும் வழங்கப்படுகிறது.

இதுதவிர இதுவரை இல்லாத அளவிற்கு மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு சிறப்பான பரிசுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. காலை 7 மணிக்கு போட்டிகள் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: