வியாழன், 13 ஜனவரி, 2022

ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் இடைக்கால பிணை கிடைத்தது

 Jeyalakshmi C  -  Oneindia Tamil :  டெல்லி: ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் 4 வார காலத்திற்கு இடைக்கால ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது.
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பணமோசடி செய்த புகாரில் முன்ஜாமீன் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 17-ஆம் தேதி தள்ளுபடி செய்ததால் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்தார்.


20 நாட்களாக 8 தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்த நிலையில்,புதன்கிழமையன்று கர்நாடகாவில் ஹாசன் நகரில் ராஜேந்திர பாலாஜியை சுற்றி வளைத்து காவல்துறை கைது செய்தது.

15 நாட்கள் நீதிமன்றக்காவலில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் வியாழக்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது,முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் அரசின் உள்நோக்கம் உண்டா?,
மேலும்,அவரின் முன்ஜாமீன் மனுவை இன்று விசாரிக்க இருந்தோம்,அதற்குள் ஏன் இவ்வளவு அவசரம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது.

மேலும்,ராஜேந்திர பாலாஜியின் உறவினர்களை, வழக்கறிஞர்களை எல்லாம் ஏன் தொந்தரவு செய்தீர்கள்? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நிச்சயமாக இந்த விசயத்தில் தமிழக அரசுக்கு உள்நோக்கம் இல்லை. மாறாக,ராஜேந்திர பாலாஜி மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் வந்ததன் காரணமாகவே அவரை நாங்கள் கைது செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் தரக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜிக்கு ஏதாவது நிவாரணம் வழங்கப்பட்டால் , அது வழக்கின் சாட்சிகளை அச்சுறுத்தும், அது வழக்கின் விசாரணையை பாதிக்கும். அதனால் தன் மீது பதியப்பட்ட மோசடி வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மற்றும் ரிட் மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கில் நேரடியாக எந்த இடத்திலும் சம்மந்தப்படாத ராஜேந்திர பாலாஜியை அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக கைது செய்துள்ளனர் எனவும், மேலும் கொரோனா காலம் என்பதால் ஒரு மாத காலம் ஜாமீன் வழங்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையடுத்து வாதிட்ட தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் , இந்த விவகாரம் மிகவும் தீவிரமானதாக கருதுவதற்கு காரணம் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டவர்கள் ஏழை, நடுத்தர மக்கள் எனவும், 32 பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் கொடுத்துள்ளனர் எனவும், பணத்தை இழந்து ஏமாற்றப்பட்டவர்களின் புகார் அடிப்படையில் தான் ராஜேந்திர பாலாஜியை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

ராஜேந்திர பாலாஜி குற்றம் செய்யவில்லை, ஏமாற்றவில்லை என்றால் முன்ஜாமின் மனு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டவுடன், ஏன் அவர் விசாரணைக்காக ஆஜராகவில்லை? எனவும், இந்த வழக்கில் ஆவண, ஆதாரங்கள் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக உள்ளதால் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தொடுக்கப்பட்ட வழக்கு எனக்கூறி இந்த விவகாரத்தை நீர்த்துபோக செய்யும் யுக்தியை ராஜேந்திர பாலாஜி கடைபிடித்துள்ளார் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க ராஜேந்திர பாலாஜியை போலிஸ் காவல் விசாரணைக்கு எடுக்க வேண்டியுள்ளது என தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் வழக்கை இன்று தள்ளி வைத்தனர்.
 இந்த நிலையில் உச்சநீதிமன்றம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நான்கு வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சி செய்யக் கூடாது என்று நிபந்தனை விதித்து ராஜேந்திர பாலாஜி மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: