வெள்ளி, 14 ஜனவரி, 2022

பொங்கல்: சென்னையிலிருந்து 6 லட்சம் பேர் பயணம்!

 மின்னம்பலம்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களில் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் 6 லட்சம் பேர் சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
வேலை,கல்வி காரணமாக சென்னை உள்ளிட்ட வெளியூரில் தங்கியிருப்பவர்கள் பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாட விரும்புவார்கள். அதன் காரணமாக பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் லட்சக்கணக்கில் சென்னையிலிருந்து மக்கள் வெளியேறுவார்கள்.


இன்று(ஜனவரி 15) தமிழ்நாடு முழுவதும் பொங்கல் தைதிருநாள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக இந்தாண்டு ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், நேற்று முன்தினம் முதலே சென்னையிலிருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்ப ஆரம்பித்தனர். இவர்களுக்காக கடந்த 11, 12, 13 ஆம் தேதிகளில் சென்னையிலிருந்து 10,300 பேருந்துகள், பிற ஊர்களில் இருந்து 6,468 பேருந்துகள் என மொத்தம் 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையில் ஆறு இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

சென்னையில் இருந்து கடந்த 11ஆம் தேதி 2,763 பேருந்துகளில் 1,14,665 பேரும், 12ஆம் தேதி 3,352 பேருந்துகளில் 1,36,730 பேரும், 13ஆம் தேதி 2,011 பேருந்துகளில் 85,971 பேரும் என மொத்தம் 8,126 பேருந்துகளில் 3,37,366 பேர் பயணம் செய்துள்ளனர். அதுபோன்று, ஆம்னி பேருந்துகளில் நேற்றுவரை 60 ஆயிரம் பேர் வரை பயணம் செய்துள்ளனர். மேலும் விரைவு மற்றும் சிறப்பு ரயில்களில் கடந்த 2 நாட்களில் மட்டும் 1.20 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். அதனுடன் கார், வேன் போன்ற சொந்த வாகனங்களில் சென்றவர்கள் சுமார் 1 லட்சம் பேர் இருப்பார்கள். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மொத்தமாக கிட்டதட்ட 6 லட்சம் பேர் சென்னையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் பேருந்து நிலையத்தில் நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பயணிகளிடம் பேருந்து சேவை குறித்து கேட்டறிந்தார். தமிழகம் முழுவதும் அதிகாரிகள் குழுக்கள் மூலம் 1,364 பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டு ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்து 500 அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

வருகிற 16ஆம் தேதி முழு ஊரடங்கு என்பதால் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சென்னைக்கு தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 3,797 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 10,097 பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

-வினிதா

கருத்துகள் இல்லை: