திங்கள், 10 ஜனவரி, 2022

ரூ.70 திருடியதாக கொடூர தண்டனை.. 10 வயது சிறுமி உயிரிழப்பு.. போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்கள்

  Vigneshkumar  -  e Oneindia Tamil :  திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சிறுமி குறித்த போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனையில் சமீபத்தில் வாய் மற்றும் வலது தொடையில் சூட்டுக் காயங்களுடன் 10 வயது சிறுமி ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அச்சிறுமி சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதால் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.    அதன்படி மருத்துவமனைக்கு வந்த போலீசார், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்த போலீசார், இது தொடர்பான விசாரணையைத் தொடங்கினர். அப்போது போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. 

அதாவது பெரம்பலூர் அருகே உள்ள வேப்பந்தட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை. இவரது 10 வயது மகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு, உறவினர் வீட்டில் இருந்து 70 ரூயாய் திருடி உணவு பண்டங்களை வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த 10 வயது சிறுமியைத் தண்டிக்கும் விதமாகத் தாயும் உறவினரும் சேர்ந்து வாய் மற்றும் வலது தொடையில் சூடு வைத்துள்ளனர். அத்துடன் நிற்காமல் மிளகாய் புகையையும் முகரச் செய்துள்ளனர். இவை எல்லாம் கடந்த ஜன. 6ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தீக்காயங்களுடன் அச்சிறுமி அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவரது தாயார் முதலில் அருகிலுள்ள மருந்தகத்தில் மருந்தை வாங்கி கொடுத்துள்ளார்.

இருப்பினும், அப்போதும் சிறுமியின் காயங்கள் சரியாகவில்லை. இதனால் விபரீதத்தை உணர்ந்த பெற்றோர், முதலில் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்குச் சிறுமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தான் அச்சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குழந்தைகள் சிறு சிறு தவறுகளைச் செய்வது என்பது இயல்பான ஒன்று தான். அதைப் பக்குவமான முறையில் எடுத்துக்கூறி குழந்தைகளைச் சரிப்படுத்த வேண்டியது பெற்றோரின் கடைமை. மாறாக, தவறு செய்த சிறுமிக்குப் பாடம் புகட்டுவதாக நினைத்துக் கொண்டு கொடூர தண்டை கொடுத்ததால், பெற்ற மகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார் இந்த தாய். இந்தச் சம்பவத்தில் போலீசார் தங்கள் அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்

கருத்துகள் இல்லை: