சனி, 15 ஜனவரி, 2022

அவுஸ்திரேலியாவில் ஆணவக்கொலை முயற்சி - இலங்கை இளைஞனை காதலித்த பாகிஸ்தானிய பெண் மீது சரமாரி கத்திக்குத்து

SA Police

sbs.com.au தமிழ் : அவுஸ்திரேலியளவில் அடிலெய்ட் என்ற இடத்தில்  இலங்கை இளைஞனைக் காதலித்த பாகிஸ்தான் பெண்ணை குடும்பமே சேர்ந்து 'ஆணவக்கொலை' செய்வதற்கு முயற்சித்தார்கள் என்று தெரிவிக்கப்படுகின்ற சம்பவத்தில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு பிணையை நிராகரித்த நீதிமன்றம் வழக்கினை எதிர்வரும் மார்ச் மாதம்வரை ஒத்திவைத்துள்ளது.  

தெற்கு ஆஸ்திரேலியா - அடிலெய்ட்டின் Blair Athol பிரதேசத்தில் வசித்துவந்த - பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட - 21 வயது முஸ்லிம் யுவதி ஒருவர், இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட - கிறிஸ்தவ இளைஞரைக் காதலித்தார் என்று கூறப்படுகிறது. இருவரும் ஒன்றாகக் கல்விகற்ற பல்கலைக்கழகத்தில் இந்தக் காதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.ஆனால், இந்த உறவினை, பெண் வீட்டார்கள் கடுமையாக எதிர்த்துள்ளார்கள். இதனையடுத்து,  குறிப்பிட்ட யுவதி  வீட்டைவிட்டு வெளியேறி தனது காதலனுடன் வசிப்பதற்காகச் சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதி, குறிப்பிட்ட யுவதி பொதுவான இடமொன்றில் தனது தாயாரை சந்திக்கச் சென்றுள்ளார். அடிலெய்ட் Sefton Plaza Shopping Centre பகுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெறுவதற்கு ஏற்பாடானது. யுவதியின் காதலர், Sefton Plaza Shopping Centre வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தனது காதலியை இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.

குறிப்பிட்ட யுவதி தனது தாயாருடனும் சகோதரியுடனும் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, தங்களைவிட்டுப்போகவேண்டாம் என்று அவரது சகோதரி, கைகள் இரண்டையும் இறுக்கிப்பிடித்தார் என்று கூறப்படுகிறது. அதுவரைக்கும் அங்கு பதுங்கியிருந்தார் என்று கூறப்படும், யுவதியின் தகப்பனாரும் சகோதரனும் மச்சானும் திடீரென்று அங்கு வந்து, யுவதியை இழுத்துத் தமது காரில் ஏற்றுவதற்கு முயற்சித்தார்கள் என்றும் அதற்கு மறுத்தபோது, குறிப்பிட்ட யுவதியின் வயிற்றில் சமையல் கத்தியால் சரமாரியாகக் குத்தி, காருக்குள் இழுத்துப்போட்டு, தங்களது வீட்டுக்குக் கொண்டுபோயிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் வாகனத்தின் இலக்கத்தோடு பொலீஸாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். தனது காதலி கடத்தப்பட்டிருப்பதை உணர்ந்த காதலனும் பொலீஸாருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்.

உடனடியாகவே, குறிப்பிட்ட குடும்பத்தவர்களின் Blair Athol வீட்டுக்கு விரைந்து சென்ற பொலீஸார், படுகாயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்த யுவதியை மீட்டு, ஆம்புலன்ஸை அழைத்து, அடிலெய்ட் வைத்தியசாலையில் சேர்த்தார்கள். ஆழமான வெட்டுக்காயங்களினால் கணிசமானளவு இரத்தத்தை இழந்திருந்தார் என்று கூறப்படும் குறிப்பிட்ட யுவதி, சத்திர சிகிச்சை மூலம் உயிர் மீட்கப்பட்டார்.

இந்தச் சம்பவத்தில், குறிப்பிட்ட யுவதியின் தந்தை, தாய், சகோதரி, சகோதரன், மச்சான் ஆகிய ஐவர் மீதும் கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது.

சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, அரசு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவிக்கையில் - குறிப்பிட்ட யுவதி வேறு கலாச்சாரத்தில் - மதத்தில் - திருமணம் செய்துகொள்ள முயன்றதால், அவரை மொத்தக் குடும்பமும் சேர்ந்து 'ஆணவக்கொலை' செய்வதற்கு முயற்சித்துள்ளார்கள் என்று கருதவேண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். கத்தியால் ஆழமாகக் குத்தியதன் மூலம் படிப்படியாக இரத்தம் வெளியேறி, குறிப்பிட்ட யுவதி மரணிக்கவேண்டும் என்பது தாக்குதலாளிகளினதும் அதற்கு உடந்தையானவர்களதும் நோக்கமாக இருந்துள்ளது என்றும் சட்டத்தரணி கூறியுள்ளார்.

வழக்கு மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: