ஞாயிறு, 9 ஜனவரி, 2022

எம்.ஜி.ஆர் முதல் வடிவேலு வரை இணைந்து நடித்த ரெங்கம்மா பாட்டியின் இன்றய நிலை

 tamil.indianexpress.com/ : எம்.ஜி.ஆர் முதல் வடிவேலு வரை படங்களில் குணச்சிதிர வேடத்தில் நடித்துவந்த பிரபல நடிகை இப்போது உடநிலை பாதிக்கப்பட்டு தனது சொந்த கிராமத்தில், இருப்பதற்கு வீடுகூட இல்லாமல் விதிக்கு வந்துள்ள சம்பவம் வெளியாகி சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் தோல்வியடைந்தவர்கள் மட்டுமல்ல சில சமயங்களில் வெற்றி அடைந்தவர்களும் பிரபலமானவர்களும் கூட நலிந்து போவது உண்டு. அதுதான் சினிமா என்ற மாய உலகத்தின் யதார்த்த முகமாக உள்ளது. ஒரு திரைப்படத்தின் ஹீரோ, ஹீரோயின், வில்லன் நடிகர்களைப் போல குணச்சித்திர நடிகர்களும் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். 

அந்த வகையில், எம்.ஜி.ஆர், மோகன்லால், படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் வடிவேலு, கஞ்சா கருப்பு உடன் நகைச்சுவை வேடங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை ரங்கம்மா பாட்டி.

நடிகை ரங்கம்மா எம்ஜிஆர் நடித்த விவசாயி திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த ரங்கம்மா பாட்டி, நடிகர் நெப்போலியன் நடித்த சீவலப்பேரி பாண்டி திரைப்படத்தில் நெப்போலியனுக்கு அம்மா வேடத்தில் நடித்தார்.

வடிவேலு, கஞ்சா கருப்பு உட்பட பல நடிகர்களுடன் நகைச்சுவை வேடங்களிலும் நடித்து கலக்கியுள்ளார் ரங்கம்மா பாட்டி. தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், மலையாளத்தில் நடிகர் மோகன்லாலுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ரங்கம்மா பாட்டிக்கு மோகன்லால் உடன் நல்ல பழக்கமாம். நடிகர் வடிவேலு கூட ஒரு முறை இவருக்கு வெற்றிலை, பாக்கு வாங்கி கொள்வதற்காக ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.

500க்கு மேற்பட்ட சினிமாவில் நடித்துள்ள ரங்கம்மா பாட்டி மேலும் குட்டிமா என்ற குறும் படத்திலும் நடித்துள்ளார். அதில் நடிகை ரங்கம்மா பாட்டி தனது நடிப்புக்காக பல விருதுகள் பெற்றார்.

இப்படி, எம்.ஜி.ஆர். மோகன்லால், வடிவேலு, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ள ரங்கம்மா பாட்டி தற்போது உடல் நலக் குறைவு காரணமாக தனது சொந்த கிராமத்தில் வசித்து வருகிறார். சினிமாவில் பல படங்களில் நடித்து சம்பாதித்த பணத்தையெல்லாம், ரங்கம்மா பாட்டி தனது குடும்பத்திற்கே செலவழித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், ரங்கம்மா பாட்டி யார் உதவி என்று கேட்டாலும் உடனடியாக உதவி செய்பவராக இருந்துள்ளார்.

ஆனால், அவருக்கு இப்போது யாரும் உதவி செய்ய ஆள் இல்லை. தற்போது ரங்கம்மா பாட்டிக்கு உதவி செய்ய யாருமின்றி இல்லாமல் மிகவும் கஷ்டத்தில் இருந்து வருகிறார். தற்போது கிராமத்தில் தங்குவதற்குகூட இடம் இல்லாமல் வீதிக்கு வந்துள்ள ரங்கம்மா பாட்டி, அவரின் உறவினர்கள் அனைவரும் வீட்டுக்குள் தங்கியிருக்க, இவருக்கு தங்குவதற்கு இடமில்லாமல் வீட்டின் முன் ஒரு ஓரமாக தங்கியுள்ளார்.

தனக்கு ஒரு குடிசை கட்டுவதற்கு உதவி செய்தால் போதும் என்று கூறும் ரங்கம்மா பாட்டி, நடிகர் லாரன்ஸிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால், அவரும் இதுவரை பாட்டிக்கு உதவி செய்வது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனாலும், ரங்கம்மா பாட்டி, தனக்கு உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.

எம்.ஜி.ஆர். மோகன்லால், வடிவேலு, கஞ்சா கருப்பு போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றிருந்தாலும் ரங்கம்மா பாட்டி இன்று தங்குவதற்கு கூட இடமில்லாமல் வீதிக்கு வந்துள்ளார். பல கோடிகளில் சம்பளம் வாங்கும் பெரிய நட்சத்திர நடிகர்கள் ரங்கம்மாவைப் போன்ற நலிந்த நடிகர்களை காப்பாற்ற உதவிக் கரம் நீட்ட வேண்டும் என்று சமூக வலை தளங்களில் ரங்கம்மா பாட்டிக்கு ஆதரவாக குரல்கள் எழுந்துள்ளன. எம்.ஜி.ஆர் முதல் வடிவேலு வரை இணைந்து நடித்த ரங்கம்மா பாட்டிக்கு இந்த கதியா என்று பலரும் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: