செவ்வாய், 11 ஜனவரி, 2022

பாசிச படையெடுப்பின் கை தேர்ந்த உளவாளி’ ஆர்.என். ரவி !

 வினவு -புதிய ஜனநாயகம்  : எல்லாவிதமான விதிகளையும் சட்டங்களையும் தகர்த்து தமிழகத்தில் ஒரு பாசிச ஆட்சிக்கான அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஆர்.என் ரவி.
ஆர்.என். ரவி, நாகாலாந்து மாநில ஆளுநராக பதவி வகித்தபோது அந்த மாநில அரசு நிர்வாகத்தை சீர்குலைத்து பா.ஜ.க. ஆதரவு கட்சிகளுக்கு ஆள்பிடித்தவர். அரசு நிர்வாகத்தில் ஆர்.எஸ்.எஸ். அடியாட்களை நிரப்பியவர். உளவுத்துறை அதிகாரியான அவர் நாகா போராளிக் குழுக்களிடம் நெருங்கி, அவர்களை சீரழித்து போர் நிறுத்த அறிவிப்பை ஏற்படுத்தியவர். நாகாலாந்திலிருந்து ஆளுநர் ரவி வெளியேறிய நாளை மக்கள் வெடிவைத்துக் கொண்டாடினர். ரவியின் பிரிவு உபசரிப்பு நிகழ்ச்சியினை பத்திரிகைகள் புறக்கணித்தன. இப்படிப்பட்ட இழிபுகழ் வாய்ந்தவரும் பாசிஸ்டுகளின் கையாளுமான ஆர்.என். ரவி, தமிழகத்தில் தான் பதவியேற்றது தொடங்கி இன்றுவரை தனக்கு கொடுக்கப்பட்ட கையாள் வேலையை கனகச்சிதமாக அமல்படுத்தி வருகிறார்.

செப்டம்பர் 21-ம் தேதி ஆளுநர் ரவி, தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தையும் நேரில் வரவழைத்து தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்றப் போராட்டங்கள் பற்றியும் முந்தைய ஆளுநர் புரோகித்துக்கு எதிராக கருப்புக்கொடி காட்டிய தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் பற்றியும் விசாரித்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. ஆளுநர், அரசு சம்பந்தமாக ஏதேனும் தகவல்பெற வேண்டுமானால், தலைமைச் செயலாளரை வரவழைத்து பேசுவது  வழக்கம். ஆனால், புதிய ஆளுநர் வழக்கத்துக்கு மாறாக போலீசு அதிகாரிகளை அழைத்து பேசினார். கடந்த எடப்பாடி ஆட்சியில், பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக கம்பு சுழற்றிய தி.மு.க. இதைப்பற்றி வாயே திறக்கவில்லை.
படிக்க :
♦ புதிய ஜனநாயகம் ஜனவரி – 2022 அச்சு இதழ் !
♦ ஆர்.என். ரவி : தமிழ்நாட்டைச் சுற்றிவளைத்துள்ள நச்சுப் பாம்பு !
தமிழக ஆளுநர் கேட்கும்போது துறைசார்ந்த விவரங்களை வழங்கத் தயாராக இருக்க வேண்டும் என அரசு செயலாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் பிறப்பித்த உத்தரவு ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இது ‘வழக்கமான நடைமுறைதான்’ என்று தலைமைச் செயலர் இறையன்பு பூசி மெழுகினார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண் 167-இல், ஆளுநர் சில விவரங்களை மாநில அரசிடம் கேட்கலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் கேட்கும் விவரங்களை அளிக்க வேண்டிய பொறுப்பு அந்த மாநிலத்தின் முதலமைச்சருக்குத்தான் உள்ளது. நேரடியாக அரசு செயலாளர்களை ஆளுநர் அழைத்துப் பேசுவது மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிடுவதாகவே பொருள்படும். இதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் எந்த அனுமதியும் வழங்கவில்லை. ஆளுநரின் அடுத்தடுத்த செயல்பாடுகள் தி.மு.க. கூட்டணிக் கட்சியினரிடம் கூட புலம்பலையும் ஆத்திரத்தையும் உருவாக்கியுள்ளது.
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், “நேரடியாக அதிகாரிகளை சந்திப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குவதாக அமையும்” என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் தி.மு.க. கமுக்கமாக இருக்கிறது.
000
கோவையில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த மாணவி, அப்பள்ளி ஆசிரியரின் பாலியல் ரீதியான சுரண்டலால் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான பள்ளி ஆசிரியர் மற்றும் முதல்வரை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடினர். இறந்துபோன மாணவியின் உடலை வாங்கச் சொல்லி பெற்றோர்களை மிரட்டிய போலீசு, இன்னொரு பக்கம் பள்ளியின் முதல்வரை கைதுசெய்யாமல் தப்பிச் செல்ல கால அவகாசம் ஏற்படுத்திக் கொடுத்தது. பின்னர் மக்களின் தொடர் போராட்டம் காரணமாக பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை வேறு வழியின்றி கைது செய்து சில நாட்களிலேயே விடுதலையும் செய்துள்ளது போலீசு. இதற்கு எதிராகப் போராடிய மக்கள்மீது வழக்கு தொடுத்தது. மேலும், இப்போராட்டத்தை சீர்குலைக்க வந்த இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத்துக்கு கார் கதவை திறந்துவிட்டு குடை பிடித்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரண் இலங்கை இராணுவத்தினரால் கடலில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி மீது இரு வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். ஆனால் பா.ஜ.க. நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு போலீசு எவ்வித இடையூறுமின்றி இருந்துள்ளனர். “இப்போது நிலைமைகளை பார்க்கும்போது தி.மு.க. அரசை பெருவாரியாக மவுனம் காத்துவருகிறது.

மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படும்போது அது குறித்து கேள்வி எழுப்புவதுதான் மாநில சுயாட்சி. ஆனால், அதில் தி.மு.க. கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. தமிழ்நாடு போலீசுத்துறை தமிழ்நாட்டு அரசின் கையில் இல்லை. அது நேரடியாக ஒன்றிய அரசின் கையிலோ அல்லது அதற்கு சார்பானவர்களின் கையிலோதான் இயங்கிக் கொண்டிருக்கிறது” என்று வெளிப்படையாகவே போட்டுடைத்தார் திருமுருகன் காந்தி.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை கருப்பு தினமாகக் கடைபிடிக்கும் முசுலீம் அமைப்புகளுக்கு போலீசால் இம்முறை கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மோரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்றுவதற்கு போலீசுத்துறை தடை விதித்ததுடன், அப்போது ஆதிக்க சாதியினரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு எதிராக தூண்டிவிட்டுள்ளது. பின்னர் அதை கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதற்கு, “ஆட்சிதான் மாறியது காட்சிகள் மாறவில்லை, தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலும், அ.தி.மு.க. மனநிலையிலேயே போலீசார் நடந்து கொள்கின்றனர்” என திருமாவளவன் குற்றஞ்சாட்டினார்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தை கேக் வெட்டி கொண்டாடியதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மீது போலீசார் இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து விமர்சித்து பேசிய அவரும், “ஆட்சி மாறியது ஆனால் காட்சிகள் மாறவில்லை. ஆட்சிக்கு தி.மு.க. வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்தது போலவே நிலைமை தொடர்கிறது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மீதே வழக்கு போடுகிற போலீசாக தமிழக போலீஸ் உள்ளது” என குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் ஒன்றிய இணையமைச்சரின் மகனால் விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து மோடி அரசுக்கு எதிராக தமிழகம் முழுக்க விவசாயிகள் சங்கங்கள் உட்பட பல்வேறு இயக்கங்கள் போராடினார்கள். மயிலாடுதுறையில் மோடியின் உருவ பொம்மையை எரித்தபோது, “மோடி உருவ பொம்மையை எரித்தால் பதிலுக்கு நாங்கள் லெனின் உருவ பொம்மையை எரிப்போம்” என்று தகராறு செய்த பா.ஜ.க.வினர் கைது செய்யப்படவில்லை. அதேபோல், தஞ்சையிலும் விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய நிகழ்ச்சியிலும் பா.ஜ.க.வினர் தகராறு செய்துள்ளனர். அவர்களை மரியாதையாக வழியனுப்பிய போலீசு, போராடும் விவசாயிகளை ஒடுக்கியது.
கல்வித் துறையில் காவிகளின் பிடி மென்மேலும் இறுகிக் கொண்டிருக்கிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் தேடுதல் குழுவின் ஒருங்கிணைப்பாளராக முன்னாள் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாலகுருசாமியை ஆளுநரின் பரிந்துரையின்படி தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. பாலகுருசாமி நீட், புதிய கல்விக் கொள்கை, நவோதயா பள்ளிகளுக்கு ஆதரவு தெரிவித்தவர் ஆவார்.

திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்கான அழைப்பிதழில் விடுதலை நாள் பவள விழாவுக்கான வாசகமாக Azadi Ka Amrit Mahotsav என்பதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதை “சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா” எனத் தமிழாக்கம் செய்துள்ள தமிழக அரசு, அதைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியபோதும் அதை பாரதிதாசன் பல்கலைக்கழகம் மீறி இந்தி முழக்கத்தை பயன்படுத்தியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள பா.ம.க. எம்.பி அன்புமணி, “இது இந்தித் திணிப்புதான். தமிழக அரசின் ஆணையை மதிக்காத பாரதிதாசன் பல்கலைக்கழகம் யாருடைய கட்டுப்பாட்டில் செயல்படுகிறது?” என்று வினா எழுப்பியுள்ளார்.

அக்டோபர் மாத இறுதியில் பல்கலைக்கழகம் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கூட்டத்தைக்கூட்டிய ரவி, “புதிய கல்விக்கொள்கையை உடனே அமுல்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார். மும்மொழிக் கல்விக் கொள்கையை விமர்சித்த அமைச்சர் பொன்முடிக்கு பதில் அளிக்கும் விதமாக பட்டமளிப்பு நிகழ்ச்சியின் மேடையிலேயே புதிய கல்விக் கொள்கையின் ‘சிறப்பு அம்சங்களை’ எடுத்துக் கூறியுள்ளார். மேலும், “புதிய  கல்விக் கொள்கையானது இந்தியாவை சமத்துவமான மற்றும் துடிப்பான அறிவுச் சமூகமாக மாற்றும்” என்று மேடையில் சவாலாக பதிலளித்துள்ளார்.

அனைத்து அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழங்களிலும் குறிப்பாக பெருநகரங்களில் உள்ள கல்வி நிலையங்களில் இடதுசாரி அரசியல் பேசுகின்ற மாணவர்களின் பட்டியலை தயார்செய்து தருமாறு ‘மேலிடத்திலிருந்து’ இரகசிய உத்தரவு வருகிறது. தமிழகத்தில் செயல்படுகின்ற பெரும்பாலான கல்வி நிலையங்களில் பல ஆண்டுகளாக திட்டமிட்டு நெருக்கடிகள் கொடுத்து மாணவர் அமைப்புகள் துடைத்தொழிக்கப்பட்டிருக்கிற நிலைமையில், அமைப்பாய் இல்லாத ஒருசில முன்னணி மாணவர் செயல்பாட்டாளர்களையும் குறிவைத்து ஒடுக்குவதில் கவனத்தை குவித்துள்ளார்கள்.


“மத்திய அரசின் ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உதவி மற்றும் ஆலோசனை (Aid & Advice) கொடுப்பதற்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறதே ஒழிய, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முடிவுகளை மாற்றவோ அல்லது தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கவோ எந்த அதிகாரமும் கிடையாது” என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. எல்லாவிதமான விதிகளையும் சட்டங்களையும் தகர்த்து, தமிழகத்தில் ஒரு பாசிச ஆட்சிக்கான அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஆர்.என். ரவி.


படிக்க :
♦ NEP-2020 : நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் திமுக – அமைதி காக்கும் கூட்டணிக் கட்சிகள் !
♦ திமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்
“மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை பா.ஜ.க. நுழைய முடியாது, ஆர்.எஸ்.எஸ். கனவு நிறைவேறாது” என்று சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாய் ஜம்பம் ஒன்றும் புதிதல்ல, 1999-ம் ஆண்டு பா.ஜ.க.வுடன் திமுக கூட்டு வைத்த நாடாளுமன்றத் தேர்தலில், மேடையிலேயே “பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தாலும் சரி, கலைஞர் இருக்கும் வரை தமிழகத்தில் மதவாதம் வராது” என்று பேசினார்கள். அதே கருணாநிதிதான் ஆட்சியை தக்க வைக்கவும் மத்தியில் அமைச்சர் பதவிக்காகவும் குஜராத் இனப்படுகொலை குற்றவாளியான ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ‘சமுதாய அமைப்பு’ என்றார். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.விற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். பதவி என்று வந்துவிட்டால் கொள்கையாவது சுரைக்காயாவது!


உளவாளியின் வேலையே எதிரி நாட்டில் ஊடுருவி தனது எஜமானர் அரசுக்கான அடித்தளத்தை உருவாக்கி, பின் எதிரி அரசை வீழ்த்துவதே! அதைத்தான் ஆர்.என். ரவி திறம்பட செய்து கொண்டிருக்கிறார். ஆனால், இந்த பாசிச படையெடுப்பை ‘தேர்தல்’ அட்டைக் கத்தியில் வீழ்த்த முடியும் என்ற பகற்கனவில் நம்மில் பலர் உள்ளார்கள்.
காவி – கார்ப்பரேட் பாசிச ஆட்சியை நிறுவுவதற்காக ஒரு மறைமுகமான போரை தமிழகத்தின் மீது நடத்திக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். – பார்ப்பன பாசிச கும்பல். அக்கும்பலின் உளவுப்படைத் தளபதியான ஆர்.என். ரவி, தமிழக அரசின் அனைத்து விழுமியங்களையும் காலில் போட்டு மிதித்துக்கொண்டும் தங்களுக்கான ஐந்தாம் படையை உருவாக்கிக்கொண்டும் வருகிறார்.
எனவே, ‘பா.ஜ.க.வை தி.மு.க. பார்த்துக்கொள்ளும்’, ‘வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதன் மூலம் பாசிசத்தை தடுத்துவிடலாம்’ என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் போக்கை தமிழக அறிவுத் துறையினரும் ஜனநாயக சக்திகளும் விட்டொழிக்க வேண்டும். பார்ப்பன பாசிஸ்டுகளை களத்தில் வீழ்த்தும் போரில்தான் ஆர்.என் ரவியைக் கூட வீட்டுக்கு அனுப்ப முடியும்.

கருத்துகள் இல்லை: