ஞாயிறு, 4 ஜூலை, 2021

மதுரை கலைஞர் நூலகத்திற்காக காத்திருக்கிறோம்! . மாவட்டங்கள் தோறும் இது போன்று பெரும் நூலகங்கள் அமையட்டும்

May be an image of indoor

Karthikeyan Fastura  : பள்ளி, கல்லூரிகளில் நாம் பயிலும் கல்வி என்பது ஆரம்பப் பாடமே.
பள்ளிகளில் ஒரு வருடம் முழுக்க 6 புத்தகங்களை ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு சப்ஜெக்ட்டிலும் கொஞ்சம் கொஞ்சமாக  படிக்கும் போது நிறைய படிப்பது போன்று,
சுமை போன்று தோன்றுகிறதோ?  என்ற ஐயம் எனக்கு உண்டு.
ஒருவேளை இந்த பாட புத்தகங்களை அறிமுகப்படுத்தி இந்த புத்தகம் படிக்க நன்றாக இருக்கிறது.
முழுசா படிச்சு பாரு என்று சொல்லியிருந்தா எப்படி இருக்கும் என்று யோசித்திருக்கிறேன்.
பள்ளியில் எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு வந்தது சிங்கம்புணரி அரசுமேல்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் போது. அப்போது பள்ளி ஆரம்பித்த சிறிதுநாளிலேயே ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கிவிட்டது.
பள்ளி நடக்கும். தலைமை ஆசிரியர் மற்றும் வெகுசில ஆசிரியர்களே இருந்தனர்.   புத்தகம் கொடுத்தார்கள்.


காலை முதல் மாலை வரை வகுப்புகள் நடக்காது. ஆசிரியர்கள் ரோந்து வரவே நேரம் சரியாக இருக்கும். கொஞ்சநாட்களுக்கு பிறகு நன்றாக படிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து நீ கிளாஸ் எடு இல்லையென்றால் வகுப்பை அமைதியாக பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டார்கள். அந்த வகையில் நான் அந்தவயதில் ஆசிரியனானேன். தமிழ் புத்தகத்தை எடுத்தேன்.

புத்தம் புது புத்தகம். நல்ல வாசனை. படிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு தலைப்பையும் படிக்க ஆரம்பித்து ஒரே நாளில் படித்து முடித்துவிட்டேன். அதே போல  வரலாற்று புத்தகம், அறிவியல் புத்தகம் எல்லாம் ஓரிரு நாளில் படித்து முடித்துவிட்டேன். கணிதம் பயிற்சி பயிற்சியாக செய்து பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது. விடை சரிபார்க்க பின்பக்கம் சென்று பார்க்கலாம். இப்படியாக ஒரு வாரத்தில் கணிதமும் முடித்துவிட்டேன். ஆங்கிலம் மட்டும் உள்ளே செல்ல முடியவில்லை. பக்கத்துவீட்டு அக்காக்களிடம் போய் நிற்பேன். அவர்கள் புரிந்துகொண்டதை சொல்லிக்கொடுப்பார்கள். Dictionary இல்லாமல் திணறினேன்.

அது மட்டும் நூலகத்திலும் இல்லை. அந்த ஊரில் உள்ள புத்தக கடையிலும் இல்லை. கதைகள் கூட குத்துமதிப்பாக படித்துவிடலாம். பாடல்கள் இருக்கும். இலக்கணம் இருக்கும். உள்வாங்குவது கடினமாக இருந்தது. ஆனாலும் முயற்சியை கைவிடவில்லை. எனக்கு புரிந்ததை பிற மாணவர்களுக்கு சொல்லிக்கொடுப்பேன்.  

ஆக புத்தகவாசிப்பு என்ற பழக்கம் என் தாத்தாவின் மூலமாக தெரிந்துகொண்டதும், நூலகம் என்ற பொக்கிஷத்தை பற்றிய அறிமுகம் கிடைத்ததும் பாடங்களை பாடமாக பார்க்காமல் ஒரு புத்தகமாக படித்து கடக்க எளிதாக்கியது. அதன் பிறகு 9வது முதல் மதுரைவாசம். பள்ளியின் சூழல் எனக்கு பெரும் அச்சுறுத்தலாக தான் இருந்தது. அதனாலேயே பாடங்களுக்குள் தொடக்கத்திலேயே செல்ல முடியவில்லை. கணக்கிலடங்கா வீட்டுப்பாடம் என்ற தொந்தரவு வேறு. நல்வாய்ப்பாக பள்ளி சென்று திரும்பும் வழியில் மாவட்டமத்திய நூலகம் அங்கு  சென்று படிக்க ஆரம்பித்தேன். எனக்கு வரலாற்று புத்தகங்களும், உயிரியல் புத்தகங்களும் அதிகம் ஈர்த்தன. தமிழ் கதைகள், நாவல்களும் ஈர்த்தன. எனக்கு பிடித்த கணித புத்தகங்கள் நூலகங்களில் இல்லை குறிப்பாக தமிழில் இல்லவே இல்லை. தொகைக்கணிதம் பற்றி மட்டும் ஒரு புத்தகம் கிடைத்தது. கணிதத்திற்கு என்று நூலகத்தில் ஒரு சிறு பகுதி கூட இல்லை.

கணிதம் என்று நினைத்து கணிதவியல் (Accounts) புத்தகத்தை எடுத்து படித்த வேடிக்கை எல்லாம் உண்டு. ஒருவேளை எனக்கு தேவையான
கணித புத்தகங்கள் கிடைத்திருக்குமானால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்  
தேர்வில் நூலக புத்தக வாசிப்பு சிக்கலையும் கொண்டுவந்தது. எனக்கு பிடித்த சப்ஜெக்ட் அதில் எனக்கு பிடித்த கேள்வி என்றால் விலாவாரியாக ஒரு கேள்விக்கு ஒன்னரை மணிநேரம் எடுத்துக்கொண்டு எழுதுவது, பிறகு அவசர அவசரமாக பிற கேள்விகளுக்கு பதட்டத்தோடு பதில் எழுதுவது என்று சமச்சீரில்லாமல் சென்றேன். அதை மட்டும் கட்டுப்படுத்தி இருந்தால் தேர்வை எளிதாக கடந்திருக்கலாம். ஆனாலும் ஆவரேஜ்க்கு கீழே சென்றதில்லை.

ஏகலைவன்களுக்கு கற்பதில் பிரச்சனை இருந்ததில்லை. தேர்வுகளில் தான் சிக்கலை வைப்பார்கள். மருத்துவர்.அனிதா 1175 மார்க் எடுத்தபோதும் அவரது கனவை தொடவிடாமல் நீட் என்று தேர்வு வைத்தார்கள் அல்லவா..? அவர் மட்டும் மருத்துவராகி இருந்திருந்தால் மருத்துவ உலகில் பெரும் பாய்ச்சலை நடத்தி இருப்பார்.

Back To the Topic. பள்ளி கல்லூரிகளில் கல்வி என்பது தொடக்கமே. முழுமையான கல்வி ஒரு பயணம். அதில் நூலகங்கள் ஒரு அற்புதமான ட்ராக். புத்தகவாசிப்பு என்பது அறிவின் பயண அனுபவங்கள், அடுத்தடுத்த நிலைக்கு  எடுத்துச் செல்பவை. பிரபஞ்சத்தின் ரகசிய கதவுகளை திறந்து காட்டுபவை. அதை சிறுவயதிலேயே நம் குழந்தைகளுக்கு ஒரு பழக்கமாக பழக்கிவிட்டால் எதுவுமே அவர்களுக்கு எதுவுமே  கடினமில்லை. உலகின் எந்த துறையிலும் உச்சத்தை தொட்டவர்களை உற்றுப் பாருங்கள் அவர்கள் புத்தகவாசிப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். உழைப்பால் அந்த உச்சத்தை தொட்டவர்கள் அதை தக்கவைக்கவும் புத்தகவாசிப்பை தான் கருவியாக வைத்திருப்பார்கள்.

புத்தக வாசிப்பை  இந்த கொரோனா காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கு பயிற்றுவியுங்கள். பிறகு பள்ளி என்பது அவர்களுக்கு விளையாட்டாக தெரியும்.  மாதமாதம் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்துவைப்போம். அதைவிட எளிய வழி நூலகத்திற்கு அழைத்துச்செல்வதும், புத்தகங்கள் வாங்கி சேர்ப்பதும், வீட்டில் ஒரு சிறு நூலகத்தை உருவாக்குவதும் ஆகும். மதுரையில் அமைய இருக்கும் கலைஞர் நூலகத்திற்காக காத்திருக்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போன்று பெரும் நூலகங்கள் அமையட்டும்

கருத்துகள் இல்லை: