திங்கள், 5 ஜூலை, 2021

சுய இன்ப பழக்கம்: கொரோனா வைரஸிலிருந்து காக்குமா? - நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துமா?

 ஜாரியா கோர்வெட்  -   பிபிசி ஃப்யூச்சர் :  நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பது - உண்மையும், நம்பிக்கைகளும்.
(கொரோனா உலகத் தொற்று தொடங்கிய நிலையில் பிபிசி தமிழில் வெளியான கட்டுரை இது. நோய் எதிர்ப்பு ஆற்றல் குறித்த உரையாடல் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதால் இந்தக் கட்டுரை மறுபிரசுரம் செய்யப்படுகிறது.)
உலக வரலாற்றில் இதுவரை ஏற்பட்ட மோசமான, உலகம் தழுவிய தொற்று நோய்களிலேயே மிக மோசமானது 1918ல் ஏற்பட்ட ஸ்பேனிஷ் இன்ஃபுளூயன்சாதான். உலக மக்கள் தொகையே 200 கோடியாக இருந்த அந்த காலகட்டத்தில் 50 கோடி பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டது. பலகோடி பேர் உயிரிழந்தனர்.
அந்த காலத்தில் வெளியான விக்ஸ் வேபோரப் விளம்பரம் ஒன்றில் அமைதியாக இருக்கும்படியும், மலமிளக்கி சாப்பிடும்படியும், விக்ஸ் தடவும்படியும் 'அறிவுரைகள்' செய்யப்பட்டிருந்தது.

விக்ஸ் மட்டுமல்ல, விக்சுக்குப் போட்டியாக பல 'அற்புத சுகமளிக்கும்' மருந்துகள் சந்தையில் தோன்றி வியாபாரம் செய்யத் தொடங்கின. மில்லர்ஸ் ஆன்டிசெப்டிக் பாம்பு எண்ணெய், டாக்டர் பெல்ஸ் பைன் டார் தேன், ஷென்க்ஸ் மாண்ட்ரேக் மாத்திரைகள், டாக்டர் ஜோன்ஸ் தைலம், ஹில்ஸ் கஸ்கரா குனைன் புரோமைட் போன்றவை அவற்றில் சில.



இப்போதும் நிலைமை பெரிதாக மாறிவிடவில்லை. ஸ்பானிஷ் இன்ஃப்ளூயன்சா தொற்றுக்கும், கோவிட்-19 தொற்றுக்கும் இடையில் ஒரு நூற்றாண்டுகால இடைவெளி. இந்த இடைவெளியில் ஏராளமான அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. ஆனாலும் இன்றும் கேள்விக்குரிய பல மருந்துக் கலவைகள், நாட்டு மருத்துவ சிகிச்சைகள் நோயெதிர்ப்பை ஊக்குவிக்கும் என பிரசாரம் செய்யப்படுகிறது.

சமூக ஊடகத்தில் பகிரப்பட்டுவரும் இது தொடர்பான புரளிகளில் சுய இன்பம் செய்துகொள்வது கொரோனாவைத் தடுக்கும் என்ற புரளி விநோதமானது. வழக்கம்போலவே, ஊட்டச்சத்து அறிவுரைகள் அள்ளித் தெளிக்கப்படுகின்றன. விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் அதிகமுள்ள உணவுகளை அதிகம் உண்ணும்படி இந்த அறிவுரைகள் வருகின்றன. பல போலி அறிவியலாளர்கள் கொம்பூச்சா, புரோபயாட்டிக் உணவு, போன்ற நவநாகரிக உணவுகளை உட்கொள்ளும்படி அறிவுறுத்துகிறார்கள்.

சிவப்பு மிளகாயும், கிரீன் டீயும் கொரோனா வராமல் தடுக்க முகக் கவசத்தைவிட அதிகமாக உதவும் என்று ஒரு ஆலோசனை பகிரப்படுகிறது. இது மோசடி. ஏனெனில் சிலவகை முகக்கவசங்களை அணிவதால் சுவாசப்பாதையில் வைரஸ் தொற்று ஏற்படும் வாய்ப்பு ஐந்தில் ஒருமடங்கு குறையும்.
நோயெதிர்ப்பு சக்தி ஊக்கம் பெறுவது என ஏதுமில்லை

மாத்திரைகள், நாகரிக அதிசக்தி உணவுகள், உடல் நலப் பழக்கங்கள் ஆகியவற்றின் உதவியோடு எதிர்ப்பு ஆற்றலை குறுக்கு வழியில் உருவாக்கமுடியும் என நினைப்பது ஒரு மூடநம்பிக்கை. உண்மையில் நமது நோயெதிர்ப்பு அமைப்பை ஊக்குவிப்பது என்ற கருத்துக்கு எந்தவித அறிவியல் அடிப்படையும் இல்லை.

"நோயெதிர்ப்பு சக்தி என்பது வெவ்வேறு உட்கூறுகளை உடையது" என்கிறார் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நோயெதிர்ப்பியல் வல்லுநர் அகிகோ இவாசகி. "நம் உடலில் தோல், காற்றோட்டப் பாதைகள், சளிம சவ்வுகள் ஆகியவை தொற்றுக்கு எதிர்ப்பரணாக அமைந்துள்ளன. இந்த அரண்களைக் கடந்து வைரஸ் உள்ளே புகுந்துவிட்டால் உடலின் உள்ளார்ந்த நோயெதிர்ப்பு எதிர்வினை தூண்டப்படும்" என்கிறார் அவர். இந்த உள்ளார்ந்த எதிர்வினை என்பது வேதிப்பொருள்கள், உயிரணுக்கள் ஆகியவை எச்சரிக்கை எழுப்பி, உள்ளே புகுந்த வைரசை எதிர்த்துப் போரிட்டு அழிப்பதே ஆகும்.

"அது போதுமானதாக இல்லாதபோது, தகவமைப்பு எதிர்ப்பாற்றல் என்ற ஒன்றை நம் உடல் தூண்டிவிடும்" என்கிறார் அவர். இது ஆன்டிபாடிஸ் எனப்படும் எதிர்ப்பான்களை உருவாக்கும். இது நடக்க சில நாள்கள் முதல் வாரங்கள் வகை ஆகலாம். இப்படி உருவாகும் தகவமைப்பு நோயெதிர்ப்பு குறிப்பிட்ட வகை நோய் நுண்மியை மட்டுமே தாக்கும். "எடுத்துக்காட்டாக, கோவிட்-19 நோயை எதிர்க்கும் T செல்கள் இன்ஃபுளுயன்சா அல்லது பேக்டீரியாக்களை தாக்காது" என்கிறார் அவர்.

பெரும்பாலான நோய்த் தொற்றுகள் கடைசியில் தகவமைப்பு நோயெதிர்ப்பு ஆற்றலைத் தூண்டும். ஆனால் இதனை செயல்படுத்த மற்றொரு வழி உள்ளது. அதுதான் தடுப்பு மருந்து. உயிருள்ள அல்லது செத்த நுண்ணியிரிகளை முழுதாகவோ, அவற்றின் சில பகுதிகளையோ உடலுக்குள் நோய் வருவதற்கு முன்பாகவே செலுத்துவதே தடுப்பு மருந்து. இதன் மூலம் உண்மையான நோய் நுண்மிகள் உடலுக்குள் நுழையும்போது அவற்றை அடையாளம் கண்டுகொள்ள உடலுக்குத் தெரியும்.

ஒரு நபரின் நோயெதிர்ப்பு அமைப்பை ஊக்குவிப்பது என்ற கருத்து, இதுபோன்ற எதிர்வினைகளை, வலுவாக்கவே வாய்ப்புள்ளது. ஆனால் உண்மையில், நீங்கள் இதைச் செய்ய விரும்பமாட்டீர்கள்.

ஜலதோஷம், உடல் வலி, காய்ச்சல், மூளைத் தளர்ச்சி, ஏராளமான சளி, மூக்கொழுகல் ஆகிய அறிகுறிகளை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தப் பிரச்சனைகள் எல்லாம் உண்மையில் வைரஸ் அல்லது பிற நோய் நுண்மிகள் நேரடியாக உருவாக்கியவை அல்ல. நமது உடல் அமைப்பே தூண்டியவை. இவை உள்ளார்ந்த நோயெதிர்ப்பு ஆற்றலின் எதிர்வினையே.

சளி நோய் நுண்மிகளை வெளியே தள்ள உதவுகிறது. காய்ச்சல் நுண்மிகள் பெருக முடியாத அளவுக்கு உடலின் வெப்பநிலையை அதிகரிக்கிறது. நம் நோயெதிர்ப்பு அணுக்கள் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்று அறிவுறுத்துவதற்காக அழற்சி ஏற்படுத்தும் வேதிப்பொருள்கள் நம் உடலின் ரத்தச் சிறை வழியாகப் பயணிக்கும். அந்த வேதிப் பயணத்தின் பக்க விளைவே வலிகளும், அசௌகரியங்களும். ஓய்வெடுத்து, உடல் குணமடைய உதவும்படி மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்பவும் இந்த அறிகுறிகள் உதவுகின்றன.

இந்த சளிம, வேதி சமிக்ஞைகள் ஆகியவை அழற்சியின் ஒரு பகுதியே. நோய் எதிர்ப்பு வினையின் அடித்தளமும் இவையே. ஆனால், இந்த செயல்முறை களைப்பை ஏற்படுத்துவது. எனவே, இந்த செயல்முறைய நீங்கள் விரும்பமாட்டீர்கள். அது எப்படி இருந்தாலும், கோவிட்-19 உள்ளிட்ட பெரும்பாலான வைரஸ்கள் இந்த செயல்முறையை தூண்டவே செய்யும். கொம்பூச்சா, பச்சை தேனீர் அல்லது நோய் எதிர்ப்பை ஊக்குவிக்கும் என்று கூறப்படும் வேறு கலவை எதுவானாலும் அவற்றால் உண்மையில் தாக்கம் ஏதாவது இருக்குமானால், அதை உட்கொள்கிறவர்கள் சுகம் பெற்று மிளிரமாட்டார்கள். அதற்குப் பதிலாக மூக்கு ஒழுகிக்கொண்டுதான் இருப்பார்கள்.

ஏனெனில் நோயெதிர்ப்பு அதிகமானால், அழற்சி வினை அதிகரிக்கவே செய்யும். ஆனால் நகைமுரண் என்னவென்றால், நோயெதிர்ப்பு ஆற்றலை இன்னின்ன பொருள்கள் ஊக்குவிக்கும் என்று கூறுகிறவர்கள் அவற்றால் அழற்சி குறையும் என்றே கூறுகிறார்கள்.

நோயெதிர்ப்பின் மற்றொரு கூறாகிய, தகவமைப்பு நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகமானால்கூட அதீத அசௌகரியமே ஏற்படும். எடுத்துக்காட்டாக, ஆர்வம் மிகுந்த நோயெதிர்ப்பு அணுக்கள், தீங்கிழைக்காத மகரந்தம் போன்ற துகள்களை, தீங்கு விளைவிப்பவை போல நடத்துமானால் அதனால் ஒவ்வாமை ஏற்படுகிறது. ஒவ்வொரு முறை அவை பாதிக்கும் பொருள்களை எதிர்கொள்ளும்போதும் உள்ளார்ந்த நோயெதிர்ப்பு வினைகளையும் தூண்டிவிடுகின்றன. இதனால் ஏராளமான தும்மல், கண்ணரிப்பு, சோர்வு ஆகியவை ஏற்படுகின்றன. இந்த 'நோயெதிர்ப்பை ஊக்குவிக்கும்' மருந்துகளை பரிந்துரை செய்கிறவர்கள், சளியும், தும்மலும், ஒவ்வாமையும் அதிகரிக்கவேண்டும் என்று நினைத்து அவற்றைப் பரிந்துரைப்பதில்லை.

மல்டி விட்டமின்கள் நோயெதிர்ப்பு அமைப்புக்கு உதவும் என்று பலர் கூறுகிறார்கள். ஆனால், ஏற்கெனவே உடல் நலத்தோடு இருப்பவர்கள் உடலில் விட்டமின் மருந்துகள் வேலை செய்யாது என்பது மட்டுமல்ல சில நேரம் அவை தீங்கும் விளைவிக்கும்.

சி விட்டமினை எடுத்துக்கொள்வோம். இரு முறை நோபல் பரிசு வென்ற லினஸ் பாலிங், ஜலதோஷத்தை எதிர்த்துப் போராடும் ஆற்றல் சி விட்டமினுக்கு இருக்கிறது என்ற கருத்தால் ஆட்கொள்ளப்பட்டார். அதில் இருந்து, சி விட்டமின் என்ற இந்த ஆன்டி ஆக்சிடன்ட் மூலம் உடல் நலனுக்கு ஏற்படும் ஆதாயங்கள் குறித்த மாயைகள் சமூகத்தில் நிலவி வருகின்றன.

சளியையும், சுவாசத் தொற்றையும் குணப்படுத்துவதில் சி விட்டமினுக்கு இருப்பதாக கூறப்படும் ஆற்றல் மிகப் பிரபலம். ஆனால் இப்படி ஓர் ஆற்றல் இருப்பதைக் காட்டுவதற்கு ஆதாரம்தான் இல்லை. விருப்பு வெறுப்பற்ற முறையில் ஆய்வுகளை மேற்கொள்வதற்குப் பெயர் பெற்ற கோச்ரானே (Cochrane) என்ற அமைப்பு 2013ல் நடத்திய ஆய்வில், "ஜலதோஷம் ஏற்பட்ட பெரியவர்களுக்கு, நோய் சி விட்டமின் அதிக அளவில் தந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், நோய்க் குறிகளின் தீவிரத்திலோ, கால நீட்சியிலோ குறிப்பிடத்தக்க தாக்கம் எதுவும் ஏற்படவில்லை" என்பது தெரியவந்தது.
கொரோனா வைரஸ்: கோவிட்-19 குறித்த மூடக் கருத்துகளை மக்கள் ஏன் நம்புகிறார்கள்?

வளர்ந்த நாடுகளில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்கள் உணவு மூலமாகவே தேவையான அளவு சி விட்டமினைப் பெறுவதால் விட்டமின் சி சந்தை என்பது ஓரளவு ஒரு மோசடிதான் என்கிறார்கள் வல்லுநர்கள். 15 முதல் 18-ம் நூற்றாண்டு வரை சி விட்டமின் பற்றாக்குறையால் தோன்றும் ஸ்கர்வி நோயால் 20 லட்சம் மாலுமிகளும், கடற் கொள்ளையரும் கொல்லப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆனால் ஸ்கர்வி நோய் பாதித்தோர் எண்ணிக்கை தற்போது மிக மிக குறைவு. எடுத்துக்காட்டாக, 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் இங்கிலாந்தில் இந்த நோயால் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 128 மட்டுமே. மறுபக்கம், அதிக அளவில் இந்த விட்டமின் மருந்துகளை எடுத்துக்கொள்வதால் சிறுநீரகத்தில் கல் தோன்றவும் வாய்ப்புள்ளது.

"விட்டமின் குறைபாடு இருந்தாலொழிய, விட்டமின் மருந்துகளை எடுத்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கு எந்தப் பலனுமில்லை" என்கிறார் இவாசகி.

தாவர உணவு சாப்பிடுகிறவர்களுக்கு சில வகை விட்டமின் குறைபாடுகள் ஏற்படலாம். ஆனால், டி விட்டமின்களை தனியாக உட்கொள்வது தவறில்லை என்கிறார் இவாசகி.

டி விட்டமின் குறைபாட்டையும், சுவாசத் தொற்றுகள் ஏற்படுவதற்கான அதிக இடர்பாட்டையும் இணைத்துக்காட்டும் பல ஆய்வுகள் வந்துவிட்டன. தண்டு மரப்பு நோய் (multiple sclerosis) போன்ற பல வகை தன் தடுப்பாற்று நோய்களுக்கும் (autoimmune diseases) விட்டமின் டி பற்றாக்குறை காரணமாக இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

உள்ளார்ந்த மற்றும் பெற்ற நோய்த்தடுப்பு வினைகளில் விட்டமின் டி முக்கியப் பங்காற்றுவதாகக் கருதப்படுகிறது. ஆனால், வசதியான நாடுகள் உள்பட பல நாடுகளில், டி விட்டமின் பற்றாக்குறை இருக்கிறது.

2012ல் உலகம் முழுவதும் 100 கோடி பேருக்கு டி விட்டமின் பற்றாக்குறை இருந்தது. இப்போது பொதுமுடக்கம் காரணமாக ஏராளமானோர் வீட்டில் முடங்கி இருக்கிறார்கள். அதனால், உடலில் சூரிய ஒளி படும் வாய்ப்பு குறைந்து, அதனால், விட்டமின் டி பற்றாக்குறையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
சுய இன்பத்தால் பயனுண்டா?

வரலாற்றில் நீண்ட காலம் முன்பிருந்தே சுய இன்பம் என்ற பாலியல் நடவடிக்கை மீது மேற்கத்திய மருத்துவத்துக்கு பல சந்தேகங்கள் இருந்துவந்தன. ஒரு அவுன்ஸ் (28 மிலி) விந்து இழப்பு, 40 அவுன்ஸ் (1.18 லிட்டர்) ரத்தப் போக்கினால் ஏற்படும் அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று 18ம் நூற்றாண்டு மருத்துவர் ஒருவர் கூறினார். அதன் பிறகு, நரம்புத் தளர்ச்சியில் இருந்து பார்வையிழப்பு வரை பல நோய்களுக்கும் சுய இன்பத்தையே காரணமாக காட்டுவது பல நூற்றாண்டுகளாக தொடர்ந்தது.
நோயெதிர்ப்பு சக்தி ஊக்கம் பெறுவது என ஏதுமில்லை


இப்போது காட்சி மாறிவிட்டது. சுய இன்பத்தால், ஆச்சரியமளிக்கும் பல நன்மைகள் விளைவதாக சமீபத்திய ஆய்வு காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, ஆண்களின் விந்து ஆரோக்கியத்துக்கு இது உதவுவதாக கூறப்படுகிறது. ப்ரோஸ்டேட் புற்றுநோய் ஆபத்தும் சுய இன்பம் செய்வதால் குறைகிறது என்றும் கருதப்படுகிறது.

ஆனால், சுய இன்பம் செய்வதால் நோயெதிர்ப்பு ஆற்றல் கூடுவதாகக் கூறுவது மிகையானது. பாலியல் தூண்டலுக்கு உள்ளாகும்போதும், பாலுறவு உச்ச நிலையிலும் ஆண்களுக்கு ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக ஓர் ஆய்வு கூறுவது உண்மை. ஆனால், இது நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் என்பது ஆதாரமற்றது.

சுய இன்பம் செய்வதன் மூலம் பாலுறவில் மற்றவர்களோடு தொடர்பு கொள்ளாமல் நீங்கள் விலகி இருக்கிறீர்கள். ஒரு வகையில் இதனால், கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கலாம்

கருத்துகள் இல்லை: