சனி, 10 ஜூலை, 2021

கொங்கு நாடு பிரிவினையில் கனிமவள அரசியல்

கொங்கு நாடு பிரிவினையில் கனிமவள அரசியல்
minnambalam.com - கப்பிகுளம் ஜெ.பிரபாகர் : இந்தியா பன்மொழி பேசும் மக்கள் வாழ்கின்ற மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்தியாவில் கடைசியாக எடுக்கப்பட்ட 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 121 மொழிகள் இந்தியா முழுவதும் பேசப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு பண்பாட்டையும், வாழ்வியலையும் கொண்ட கூட்டமைப்புதான் இந்தியா என்ற நாட்டின் அடையாளம். அதன் ஒரு அங்கம்தான் தமிழ்நாடு என்ற மாநிலம்.

பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு முந்தைய வரலாற்றில் இந்தியா என்ற பெயர் கிடையாது. ஆனால், சங்க இலக்கியங்களிலும், பிரிட்டிஷ் கால படைப்புகளிலும் தமிழ்நாடு என்ற பெயர் இருந்துள்ளது. பழம்பெருமையையும், வரலாற்றையும் கொண்டது தமிழ்நாடு. உலக மொழிகளிலேயே, குறியீடு, கல்வெட்டு, ஓலைச்சுவடி, பட்டயங்கள், அச்சு, கணிணி மொழி என்று அனைத்து காலத்திலும், அறிவியல் வளர்ச்சியிலும் தனிச்சிறப்பைப் பெற்றது தமிழ் மொழி.

தமிழ்நாட்டில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு பெரும்பான்மை மக்கள் வாழ்ந்து வந்தாலும், தமிழ் நிலப்பரப்பில் தெலுங்கு, உருது, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும், முப்பத்து ஆறு வகையான பழங்குடி மொழிகளைப் பேசுகின்ற வெவ்வேறு இன பழங்குடி மக்களும் வாழ்ந்து வருகிறார்கள்.

தொடக்கத்தில் தமிழ்நாடு என்ற பெயரில் ஒரு நாடோ, மாநிலமோ இருக்கவில்லை. பண்டைய மனிதர்கள் கூட்டமாக வாழ்ந்த காலங்களின் தொடர்ச்சியாக, ஊர்க்குடும்பு, நாட்டான், நாட்டாண்மை, பண்ணாடி முறைகளும், மன்னர்களின் ஆட்சியும்தான் தமிழ் மண்ணில் நடைபெற்று வந்தது. கற்காலம், இரும்பு காலம், வரலாற்றுக் காலம், சங்ககாலம் என்று தொல்லியல் அகழாய்வுகள் மூலம் பிரிக்கப்படும் அத்தனை காலத்திலும் தமிழர்கள் பழம்பெரும் நாகரீகத்தோடு வாழ்ந்து வந்த சான்றுகள் கிடைத்துள்ளன, கிடைத்து வருகின்றன.

சங்க காலத்தில் நாடு என்ற ஆட்சிமுறை வழக்கத்தில் இருந்த போது, தமிழ்நாட்டினை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். மூவேந்தர்களின் பேரரசுகள் வீழ்ந்த போது, பல்லவர்களும், பிற்கால சோழர்களும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளனர். வடமேற்கு பகுதியிலிருந்து வந்த இஸ்லாமியர் படையெடுப்புகள் இந்தியாவில் மாற்றங்களை உண்டாக்க, அதன் தாக்கம் தமிழ்நாட்டின் ஆட்சியமைப்பிலும் மாறுதல்களை ஏற்படுத்தியது. பதினான்காம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டதாக தமிழ்நாடு மாறியது. நாடு, பாளையம், சமஸ்தானம், ஜமீன் என்ற மன்னர்களுக்கு உதவியாக குறு நிலப்பரப்புகளும் ஆட்சி செய்யப்பட்டு அல்லது நிர்வாகம் செய்யப்பட்டு வந்தன.


தமிழ்நாட்டின் நிலப்பரப்பினை சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, பல்லவ நாடு, கொங்கு நாடு, நடு நாடு, நாஞ்சில் நாடு, ஈழ நாடு, மலை நாடு என்று அவ்வப்போது பிரித்தே மன்னர்கள் பலரும் ஆட்சி புரிந்து வந்தனர். இன்று பேசப்படும் கொங்கு நாடு என்பது கூட, சேர நாடு, சோழ நாடு என்று வெவ்வேறு காலகட்டத்தில் ஆட்சி புரியப்பட்டுள்ளது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களும் கொங்கு நாட்டினை ஆட்சி செய்துள்ளார்கள். அப்போது அது பாண்டியது நாடாகவும் இருந்துள்ளது.

கொங்கு நாட்டிற்கென்று தனி மன்னர்கள் ஆட்சிபுரிந்த காலம் மிகவும் குறைவானது. கொங்கு நாட்டில் மட்டும் இருபத்தி நான்கு உள்நாடுகள் இருந்தன. பூந்துறை நாடு, தென்கரை நாடு, காங்கேய நாடு, பொங்கலூர் நாடு, ஆறை நாடு, வாரக்க நாடு, திருவாவினங்குடி நாடு, மணநாடு, தலையநாடு, தட்டைய நாடு, பூவாணிய நாடு, அரையநாடு, ஒடுவங்க நாடு, வடகரை நாடு, கிழக்கு நாடு, நல்லுருக்கு நாடு, அண்டை நாடு, வெங்கல நாடு, காவடிக்க நாடு, ஆனைமலை நாடு, ராசிபுர நாடு, காஞ்சிக்கூடல் நாடு, குருநாடு, வாழவந்தி நாடு ஆகிய இருபத்தி நான்கு நாட்டையும் குறுநில மன்னர்கள் நிர்வாகம் செய்து வந்தனர்.

இப்போது கொங்குநாடு என்று தமிழ்நாட்டிலிருந்து ஒரு பகுதியைப் பிரிப்பதற்கு எழுப்பப்பட்டுள்ள கோரிக்கையின் பின்னே, தேர்தல் அரசியல், கனிம வள அரசியல், மொழி அரசியல், இன அரசியல், சாதி அரசியல் எனப் பல்வேறு அரசியல் காரணங்கள் உள்நோக்கங்களாகப் புதைந்திருக்கின்றன.

விடுதலைப் போராட்டங்களின் தொடர்ச்சியாக, ஐநூற்றி அறுபத்து நான்கு சிற்றரசர்களை, பாளையக்காரர்களை, சமஸ்தானங்களை, மாகாணங்களை ஒன்று சேர்த்து இந்தியா என்ற ஒற்றைக்குடையின் கீழ் மிகப்பெரிய ஜனநாயக நாட்டைக் கட்டமைத்தனர் தலைவர்கள். விடுதலை இந்தியாவில் மக்களாட்சியை நிலைநாட்டிட தேர்தல் முறையை நடைமுறைப்படுத்தி, பொருளாதாரத்தில் ஓங்கி உயரச் செய்தனர். இப்போது மீண்டும் இந்தியாவை பிரித்துக் கொண்டிருக்கிறோம். மற்றொருபுறம் கூட்டாட்சியை நீர்த்துப்போகச் செய்யும் ஒற்றை ஆட்சியை, ஒற்றை அதிகாரத்தை நோக்கிப் பயணிக்கிறோம்.

பண்டைய வரலாற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்டால் கொங்கு பகுதியினை 24 மாகாணங்களாகப் பிரிக்க வேண்டும். நிர்வாக வசதிக்காகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் பிரிக்கப்பட்டால், அன்றைய சென்னை மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்ட தமிழர் நிலங்களை ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிடமிருந்து மீட்டு புதிதாக உருவாகும் மாநிலத்தோடு சேர்க்கப்பட வேண்டும். இரண்டும் இல்லாமல் ஒரு மாநிலமோ, ஒன்றியப் பிரதேசமோ பிரிக்கப்பட்டால் அதற்கு வெறும் ஓட்டுவங்கியை மட்டுமே நம்பும் தேர்தல் அரசியலும், பிற உள்நோக்கங்களும் மட்டுமே காரணமாக இருக்க முடியும். அப்படி பிரிக்கப்படுவது, ஒரே மொழி பேசும் மக்களிடையே பிரிவினையை உருவாக்கும். நாட்டின் வளர்ச்சியையும் தடுக்கும்.

கொங்கு நாடு என்றழைக்கப்படும், மேற்கு மாவட்டங்களை நோக்கி பலரின் பார்வையும் பதிவதற்கு முதன்மைக் காரணம் தேர்தல் அரசியல் மட்டுமில்லை. அப்பகுதியில் நிறைந்திருக்கும் இயற்கை வளங்கள். நீர்வளமிக்க மேற்குத் தொடர்ச்சி மலைகளும், கனிம வளமிக்க கிழக்குத் தொடர்ச்சி மலைகளும். இந்தப் பகுதியை தனியே பிரித்தெடுத்துச் சென்று விட்டால், நினைத்ததை சாதிக்க முடியும். கனிம வளச் சுரங்கங்களை ஏற்படுத்தி பொருளாதார வளர்ச்சியென்று தனிப்பாதையில் பயணிக்க முடியும். இரும்பை உருக்கி உலோகங்கள் பயன்படுத்திய தமிழர்களின் உலோகக் கால வரலாறு கிழக்குத் தொடர்ச்சி மலையில்தான் புதைந்து கிடக்கிறது. எட்டு வழிச் சாலையின் பிரச்சனையே கிழக்குத் தொடர்ச்சி மலையின் கனிம வளங்கள்தானே. அப்படியிருக்க மேற்கு மாவட்டங்களை நோக்கிய பார்வை, வெறும் தேர்தல் அரசியல் பார்வை மட்டுமில்லை, அதற்குப் பின்னால் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருளாதார அரசியல் பார்வை. அதற்கு உதாரணமாக ஒடிசாவும், சட்டீஸ்கரும் பிரிந்து வந்த பின்னர் அம்மாநிலங்களில் கனிம சுரங்கங்கள் அதிகரித்து வந்ததைக் காணலாம்.

முன்னொரு காலத்தில் ஈழநாடு என்று ஒரு நாடு இருந்தது. இப்போது தமிழ்நாடு என்று ஒரு மாநிலம் உள்ளது. மொழியாலும், பண்பாட்டாலும், இனத்தாலும் ஒன்றுபட்டு நிற்கும் தமிழ் மாநிலத்தைக் கூறு போட்டால், முதலில் மொழி அழியும், பின்னர் பண்பாடு சிதையும், இறுதியில் இப்படி ஒரு இனம் வாழ்ந்தது என்று வரலாற்றில் படித்துக் கொள்ள முடியும். ஏதோ ஒரு உள்நோக்கத்தில்தான், எதிர்பார்ப்பில்தான் தமிழ்நாட்டினைப் பிரிக்க வேண்டுமென்ற புதிய கோரிக்கையும் உருவாகியுள்ளது. மொழியாலும், இனத்தாலும், பண்பாட்டாலும் உயர்ந்தோங்கி நிற்கும் தமிழர்கள் பிரிவினையைப் புறந்தள்ளி, ஒன்றாக வென்று காட்டுவார்கள்.

கருத்துகள் இல்லை: