வியாழன், 8 ஜூலை, 2021

'பள்ளி பாடப்புத்தகங்களில் ஒன்றிய அரசே இடம்பெறும்'' - தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர் ஐ. லியோனி பேட்டி!

 நக்கீரன் - சக்தி :  தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவர் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல்லைச் சேர்ந்த பட்டிமன்ற நடுவர் ஐ. லியோனி தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நியமித்திருக்கிறார்.
திண்டுக்கல்லில் உள்ள பிரபல பள்ளியான புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்துவந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த ஐ. லியோனி பட்டிமன்றப் பேச்சாளராகவும் இருந்தவர்.
தனது பேச்சாலும் திறமையாலும் பட்டிமன்ற நடுவராகவும் நகைச்சுவை தென்றலாகவும் விளங்கிவந்தார். அதோடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு 25 வருடங்களுக்கு மேலாக கழகப் பணியாற்றியதின் மூலம் தலைமை கழகப் பேச்சாளர் ஆனார்.
அதன் மூலம் முன்னாள் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞரின் மனதிலும், இன்னாள் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் மனதிலும் இடம்பிடித்தார்.



அதோடு ஐ. லியோனி தலைமையில் கழக கொள்கை பரப்பு பட்டிமன்றம் நடைபெறுகிறது என்றால் கலைஞர், ஸ்டாலின் ஆகியோர் ஆவலுடன் அந்தப் பட்டிமன்றத்தில் கலந்துகொண்டு லியோனியின் நகைச்சுவை பேச்சைக் கேட்டு ரசிப்பார்கள். அந்த அளவிற்கு தலைவர்களின் மனதையும் லியோனி கவர்ந்துவந்தார். அதன் மூலம் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது மற்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகம் மூலம் லியோனிக்கு டாக்டர் பட்டமும் கிடைத்தது. அதைத் தொடர்ந்து கட்சி வளர்ச்சிக்காக தொடர்ந்து தேர்தல்  பிரச்சாரத்திலும் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு கட்சியை வளர்த்துவந்ததின் மூலம் தமிழ் கலை இலக்கிய மாநிலத் தலைவராகவும், கொள்கை பரப்புச் செயலாளராகவும்  இருந்துவருகிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து தேர்தலுக்காக இரவு பகல் பாராமல் தேர்தல் பிரச்சாரம் செய்துவந்ததின் மூலம் முதல்வர் ஸ்டாலின் மனதைக் கவர்ந்தார். அதனடிப்படையில் தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ. லியோனியை முதல்வர் ஸ்டாலின் நியமித்தார்.

 

அதைக் கண்டு லியோனி மற்றும் அவரது துணைவியார் அமுதா உள்பட குடும்பத்தினர் பூரித்துப் போய்விட்டனர். அதோடு உடனடியாக  ஸ்டாலினை சந்தித்து லியோனி வாழ்த்தும் பெற்றார். அதுபோல் அமைச்சர்கள் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிப் பொறுப்பாளர்களும், தொண்டர்களும் மற்றும் ரசிகர்களும் லியோனிக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் தனது சொந்த ஊரான திண்டுக்கல்லைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் ரசிகர்களும் ஐ. லியோனிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்தநிலையில் இன்று (08.07.2021) குடும்பத்தினருடன் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்ற திண்டுக்கல் லியோனி, சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ''2021 ஆண்டுமுதல் தமிழக அரசின் பள்ளி பாடப்புத்தகங்களில் மத்திய அரசுக்குப் பதில் ஒன்றிய அரசு என்றே இடம்பெறும். எப்படி சென்னை மாகாணம் தமிழ்நாடு என்று மாறி, அது இன்று தமிழ்நாடு என்ற பெயர் நிலைநிறுத்தப்பட்டது. அதேபோல் பல தமிழ் வார்த்தைகள் மக்களிடம் புழங்க புழங்க அந்த வார்த்தைகள் நடைமுறைக்கு வந்துவிடும்.

அதில் ஒரு முக்கியமான வார்த்தைதான் மத்திய அரசு என்பதை ஒன்றிய அரசு என்று மாற்றியது. ஒன்றியம் என்ற வார்த்தையே ஒரு அழகான சொல். மத்தியம் என்றால் சென்டரில் இருப்பது. ஆனால் ஒன்றியம் என்றால் பல மாநிலங்கள் ஒன்று சேர்ந்திருப்பது. எனவே மத்திய அரசு என்பதைவிட ஒன்றிய அரசு என்பது பொருத்தமான சொல். இதைப் பாடத்திட்டத்தில் கொண்டு வந்து மாணவர்கள் மத்தியில் கொண்டு வருவோம்'' என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: