வியாழன், 8 ஜூலை, 2021

உயர்கல்வி மன்றத்தின் தலைவராக பொன்முடி நியமனம்!

உயர்கல்வி மன்றத்தின் தலைவராக பொன்முடி நியமனம்!

 minnambalam :உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரை தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் தலைவராக நியமித்து இன்று (ஜூலை 8) முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் கல்வி மேம்பாட்டுக்காக புதியத் திட்டங்களை வகுப்பது, பேராசிரியர்களுக்கு நவீன தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளை அளிப்பது, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவது, புதிய கல்லூரிகள், பல்கலைக் கழகங்களைத் தொடங்குவதற்கான விதிமுறைகளை உருவாக்குவது ஆகியவற்றுக்காக தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் உருவாக்கப்பட்டது.

தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் முக்கியப் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பதால் அவற்றை நிரப்ப வேண்டும் என்று பேராசிரியர்கள் உட்பட பலர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் திருத்தி அமைக்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

அந்த அறிவிப்பில், “திருத்தியமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் தலைவராக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நியமிக்கப்பட்டுள்ளார்.

துணைத் தலைவராகப் பேராசிரியர் ராமசாமி, உறுப்பினர்-செயலராகப் பேராசிரியர் சு.கிருஷ்ணசாமியும், பணிவழி உறுப்பினர்களாக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், ஆளுநரின் செயலாளர், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், பல்கலைக்கழக மானியக் குழு செயலாளர், கல்லூரிக் கல்வி இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ஆகியோர் அங்கம் வகிப்பார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் அ.ராமசாமி, அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பணியாற்றியவர். இவர் அறிஞர் அண்ணா விருது, ராஜா சர்.அண்ணாமலை செட்டியார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். மேலும், கலைஞர் கருணாநிதி கடந்த 2006 ஆம் ஆண்டில் முதல்வராக இருந்தபோது, பேராசிரியர் அ.ராமசாமியை இதே பதவியில் அமரவைத்து அழகு பார்த்தது குறிப்பிடத்தக்கது. இப்பதவியில் பேராசிரியர் அ. ராமசாமி 14.8.2006 முதல் 9.12.2011 வரை அரும் பணியாற்றியிருக்கிறார்.

அதே போன்று, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் உறுப்பினர்-செயலராக நியமிக்கப்பட்டுள்ள சு. கிருஷ்ணசாமி 33 ஆண்டுகள் பச்சையப்பன் கல்லூரியில் இணைப் பேராசிரியராக வரலாற்றுத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், தேசிய ஆலோசனைக்குழு, ஐக்கிய நாடுகள் வளர்ச்சிக் திட்டக்குழு, உலக சுற்றுச்சூழல் ஆய்வுக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் உறுப்பினராகப் பொறுப்பு வகித்ததோடு, தமிழக அரசின் “நல்லாசிரியர் விருது’’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

-பிரியா

கருத்துகள் இல்லை: