புதன், 26 மே, 2021

நடிகர் சிவகார்திகேயனின் அப்பா கோவிந்தராஜுபிள்ளை தாஸ் இழப்பு பற்றி ஒரு நினைவு பகிர்வு

May be an image of 4 people, people standing and people sitting
சிவகார்த்திகேயன் தாய் தந்தை சகோதரி
Actor Sivakarthikeyan True History/ நடிகர் சிவகார்த்திகேயன் வரலாறு..... -  YouTube

அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்   :  சிவகார்திகேயனின் அப்பா கோவிந்தராஜு பிள்ளை தாஸ்!
(அல்லது)
ஹெச்.ராஜா என்னும் சல்லிப்பயல்!  இதுதான் இந்த பதிவின் தலைப்பு.
இந்த பதிவு என் முகநூலில் ஜூலை மாதம் 2014 ல் என்னால் எழுதப்பட்டது.
இன்றைக்கு ஹெச்.ராஜா என்னும் பொறுக்கிப்பயல் சிவகார்த்திகேயனின் தந்தை யாரோ ஜெயப்பிரகாஷ் என பேட்டி கொடுத்த போது,
பொங்கியெழுந்து ஹெச்.ராஜா மீது சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய கோ.தாஸ் அவர்களின் சகோதரர்கள் என் அத்தான்கள் கோ.ஜனார்த்தனம், கோ.பாலு, கோ.பாபு, கோ.சிவா போன்றவர்கள் போல என்னால் அமைதிகாக்க இயலாமையால் என்னால் இயன்ற வரை 2014 ல் நான் முகநூலில் எழுதிய அதே பதிவை இப்போது மீள்பதிவாக பதிகின்றேன்.
குறிப்பு : 1. இன்றைக்கு அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களின் வீடியோ டாப் ரகம்!
குறிப்பு 2 : கோ.தாஸ் அவர்கள் ஜெயிலர் அல்ல. சிறைத்துறை எஸ்.பி
குறிப்பு 3 : 2014 ல் நான் முகநூலில் எழுதிய பதிவு லிங் பின்னூட்டத்தில் இருக்கு. பாருங்கள்.
செம்பனார்கோவில் குடும்பம் - திருவீழிமிழலை குடும்பம்... இரண்டுமே பாரம்பரியம் மிக்க குடும்பங்கள். செம்பனார்கோவில் வகையறாவினருக்கு திருவீழிமிழலை குடும்பம் சம்பந்திகள்.


இப்போ நேத்தி இல்லை. நான்கு தலைமுறைகளுக்கு முன்பாகவே இருந்து. என் செம்பனார்கோவில்  குடும்பத்தின் பாட்டிகள், அத்தைகள், என் அக்காக்கள், தங்கைகள்  என இது வரை 15 பெண்கள் அந்த குடும்பத்தில் "வாக்கப்பட்டு" போயிருக்கின்றனர்.  
அந்த குடும்பத்தில் வாக்கப்பட்டு போன முதல் பெண் என் பாட்டி லெஷ்மியம்மாள் சாகும் தருவாயில் "செம்பனார்கோவில் குடும்பத்தில் இருந்து இங்க பொண்ணு கட்டிகுங்கப்பா.. ஆனா பொண்ணு குடுத்துடாதீங்க.
இந்த குடும்பத்துக்கு வந்த 'லெஷ்மி' திரும்பி போய்டும்" (என்னே ஒரு புகுந்த வீட்டு பக்தி!!!)ன்னு சொல்லிட்டு செத்துட்டதாக இன்று வரை ஒரு செவிவழி கதை உண்டு.
அதன்படியோ அல்லது எதேர்சையாகவோ தெரியவில்லை இன்றளவும் அந்த குடும்பத்தில் இருந்து இங்கே குப்பை கொட்ட ஒரு பெண்ணும் வரவில்லை.  
இனி மேல் எப்படி என தெரியவில்லை.
ஆனால் ஒற்றுமைக்கு நல்ல உதாரணமாக இன்றளவும் மாமன் - மச்சான்களாக அவரவர்களுக்கு உரிய மரியாதையும் கௌரவத்தையும் கொடுத்து வாங்கி கொண்டு சந்தோஷமாகவே இருக்கின்றனர். அவரவர்கள் வயதுக்கு ஒத்த இரு குடும்பத்தில் உள்ளவர்களும் நட்போடும் உரிமையோடும் பழகி வரும் நேரத்தில்,
 நான் ஒரு படி மேலே போய் என்னை விட பத்து பண்ணிரண்டு வருடங்கள் மூத்த 'அத்தான்'கள் கூடவும் மிக மிக நட்பாய் இருப்பேன்.
அந்த வகையில் டாக்டர் சுப்பையா (பிரபல இருதய அறுவை சிகிச்சை நிபுனர்...  
இப்போது இறந்து விட்டார்...) திரு.ஜெயப்பிரகாஷ் (சென்னை பல்கலைகழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார்) அதுபோல திரு.கோ. தாஸ் (  சிறை கண்ணானிப்பாளர்...
இப்போது இவரும் காலமாகிவிட்டார்) இதிலே நான் சொல்லப்போவது தாஸ் அத்தான் அவர்களைப்பற்றி தான்.
எனக்கு நேற்று முதல் இந்த தாஸ் அத்தான் நியாபகம் அதிகமாய் மனதை பிழிந்து கொண்டுள்ளது.  
இந்த தாஸ் அத்தான் .... ஒரு Man of perfect  என சொல்வார்களே, அது போல.. எந்த கெட்ட பழக்க வழக்கங்களும் இல்லாதவர். "சுத்தம்" என்பார்களே ... அதை இவரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழகத்தின் எட்டு மத்திய சிறைச்சாலையிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
நான் துபாய் போன பின்பும் கூட இரவுகளில் மணிக்கணக்கில் பேசுவோம்.
இந்தியாவுக்கு வந்தால் நேரில் போய்விடுவேன் பார்க்க. அரசியல், கலை, இலக்கியம்,  உலக விஷயங்கள் என எந்த தலைப்பிலும் அவரோடு விவாதிக்கலாம். நேரம் போவது தெரியாமல் பேசுவார்.  
சிறை உள் வளாகம் என்பது சுமார் 12 கிமீ தூரம் இருப்பினும் கூட இவர் காலை, மாலை இரு நேரமும் சுற்றி வராத நாட்கள் இருக்காது. சிறைக்குள் "பெட்ரோல்" வண்டிகள் அனுமதி இல்லை என்பதால் புதிய "ஹம்பர்" சைக்கிளில் சுற்றி வருவார்.
பொதுவாக superintendent of jail (SP) யாரும் இது போல தன் டிகினிட்டி விட்டு சைக்கிளில் சுற்றி வர மாட்டார்கள். ஆனால் இவர் செய்வார்.
தாஸ் அத்தான் அவர்களுக்கு ஒரு மகள். ஒரு மகன். இவர்களுக்கு  சிறைவளாகத்தின் உள்ளேயே வீடு எப்போதும் அமைந்து விடுவதால் நண்பர்கள் குறைவு. பெண் மூத்தவள். பையன் அடுத்தது.குழந்தைகளை தன் நண்பர்களாகவே பாவிப்பார் இவர். பள்ளிக்கு செல்லும் போதும் tution போகும் போதும் ஒரு கார் அவர்களை கொண்டு விட்டு விட்டு அழைத்து வரும். பாதுகாப்பு காரணம் ஒன்று. அடுத்து private வாகனங்கள் சிறை வளாகத்தின் உள்ளே நுழைய இயலாது என்பது அடுத்த காரணம். பெண் நல்ல மதிப்பெண் பெற்று மெடிகல் சேர்ந்தாள். அடுத்து பையன்  இன் ஜினியரிங் சேர்ந்தான். இதல்லாம் 2000 வருட காலகட்டத்தில்.

2003ம் வருடம். நான் துபாயில் இருந்து  ஒரு பத்து நாள் விடுமுறைக்கு வந்தேன்.  வந்ததும் அவருக்கு வழக்கம் போல தொலைபேசியில் பேசினேன். "வாடா மாப்ள.... எப்ப வர்ரே கோவைக்கு. ஒரு டூர் அடியேன் கோவைக்கு. அப்படியே ஊட்டிக்கு போய் வந்த மாதிரி இருக்கும்ல" என்றார். அது 2003 ஜனவரி மாதம் 25ம் தேதின்னு நினைக்கிறேன். "வர்ரேன் அத்தான். இந்த தபா பத்து நாள் தான் லீவ் கிடைச்சுது. பார்கிறேன்" என்றேன். பின்னர் ஷேமலாபங்கள் விசாரித்து விட்டு வைத்து விட்டேன். அப்போது பையன் இஞினியரிங் சேர்ந்து இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்தான்
திருச்சியில். தாஸ் அத்தானும் மயிலாடுதுறையில் வீடு கட்டி விட்டார். அதே நேரம் திருச்சியில் ஏற்கனவே ஒரு வீடு வாங்கியும் இருந்தார். ஓய்வுக்கு பின்னர் மயிலாடுதுறையில் வந்து செட்டில் ஆகிவிடனும். தன் சொந்த கிராமமான திருவீழிமிழலையில் நிலம் எல்லாம் மயிலாடுதுறையில் இருந்து போய் பார்த்து விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார்.

 நாங்கள் நண்பர்கள் ஒரு 7 பேர் ஒரு செட். க்ளோஸ் ப்ரண்ட்ஸ் என சொல்வார்களே... அது.  நாங்கள் ஏழு பேரில் தாஸ் அத்தானின் தம்பி சிவாவும் ஒருத்தன். நாங்கள் எப்போது டூர் போனாலும் தாஸ் அத்தான் எந்த சிறையில் வேலை செய்கின்றாரோ அதை ஒட்டிய ஊர்களுக்கு தான் டூர் போவோம். அப்போது எல்லாம் சிறைக்கு போய் அங்கே சூப்பரண்டண்ட் பங்களாவில் டேரா போடாமல் போவது இல்லை.இங்கே அவர் பையன் பற்றியும் சொல்ல வேண்டும். சுட்டி என்றால் செம சுட்டி.  தாஸ் அத்தான் பையன் பெயரும் சிவா தான். நாங்கள் +2 முடித்த காலத்தில் இருந்தே இந்த டூர் போகும் பழக்கம் இருந்தது. அப்போது நாங்கள் போகும் போதேல்லாம் அவர் பையன் சிவா சின்ன பையன். தாஸ் அத்தான் தன் கிராமத்து சுவடு மாறாமல் அந்த சூப்பர்ண்டண்ட் பங்களாவில் எப்போது 4 பசு மாடுகள் வளர்த்து வருவார்.

காலை 4 மணிக்கு எழுந்து விடுவார். அப்போதே சிவாவும் எழுந்து விடுவான். அவங்க அப்பா கூடவே மாடு கறப்பான். வைக்கோல் போடுவான். மாடு குளிப்பாட்டுவான். (கார் எல்லாம் கழுவ ஆர்டர்லியும் கண்விக்ட் வார்டனும் ஏகபோகத்துக்கு உண்டு) ஆனால் மாடுகளை கவனிப்பது என்பதில் அவங்க அப்பா மாதிரியே இவனுக்கும் அத்தனை ஆர்வம். சின்ன வயசிலேயே பைக் ஓட்டுவான். கார் ஓட்டுவான். (பெரிய வளாகம்.... கத்து கொடுக்க ஆள் பஞ்சம் இல்லை) அது போல அப்போது சிறையில் ஒரு லைஃப் கைதி ஒருவர். அவர் கராத்தே மாஸ்டர். அவரிடம் விடிகாலை 5 மணி முதல் கராத்தே கற்றான். கருப்பு பட்டை வரை மிகத்திறமையாக கற்று தேர்ந்தான்.

நாங்கள் போனால் சிரிக்க சிரிக்க பேசுவான். எங்களை மட்டுமல்ல அவன் அப்பா, அம்மா, அக்கா கௌரி என எல்லோரையும் போல பேசுவான். நடிப்பான். டிபிக்கலாக அப்படியே இருக்கும். ஆள் ஒல்லிப்பிச்சானாக இருப்பான். அவங்க அப்பா மாதிரியே நெற்றி நிறைய பெரிய விபூதி பட்டை போட்டு நடுவே குங்கும பொட்டு வைத்து இருப்பான். இன்னும் சொல்லப்போனா "கேடிபில்லா கில்லாடி ரங்கா" படத்தில் வரும் பட்டை முருகன் போல ஆனால் ஒல்லியாக இருப்பான். நல்லா படிப்பான். அக்கா கௌரிக்கு மட்டும் கொஞ்சம் பயப்படுவான்.

அதை விடுங்கள்....எங்கே விட்டேன்... உம்... 2003 ஜனவரி 25ம் தேதி நான் விடுமுறைக்கு வந்த போது பேசினேன் என்றேனே... அங்க தான விட்டேன்... வருகிறேன்....
விடுமுறைக்கு வந்தால் நண்பர்களின் (நாங்க ஏழு பேர்  என சொன்னேனே அதில் ஒருத்தன் சங்கர்... பாண்டியன் டிம்பர் டிப்போ) வியாபார நிறுவனம் போய் அமர்வேன். அப்படி அமர்ந்திருக்கும் போது ஜனவர் 29 - 2003 அன்று ஒரு போன் வந்தது அங்கு.சங்கர் தான் போன் எடுத்தான்.
"அப்படியா?" என கேட்டவன் எழுந்து நின்றான். கண்களில் இருந்து நீர் வழிந்து ஓடுது. நான் பதறிப்போய் என்னடா சங்கர் என கேட்கும் போது "கோவையிலே தாஸ்  அண்ணன் ஹார்ட் அட்டாக்ல இறந்து போயிட்டாங்கடா" என சொன்னான். வானமே இடிந்து தலையில் விழுந்தது போல இருந்தது எனக்கு. அடுத்த வினாடி அப்சரா கார்த்தி அங்கே ஓடி வந்தான். பாண்டியில் இருந்த  எங்கள் நண்பன் கந்தசாமிக்கு செய்தி சொல்லப்பட்டது.

இருங்க ... இன்னும் ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக்... மன்னிக்கவும்...இந்த கந்தசாமியின் அப்பா டாக்டர் கண்ணன் அவர்கள்  1994ல் கடலூரில் D.M.O (District Medical Officer) ஆக இருந்தார். அப்போது தாஸ் அத்தான் அவர்கள் கடலூர் மத்திய சிறையில் Deputy superintendent of jail ஆக இருந்தார்.

பத்து கொலை ஜெயப்ரகாஷ் அப்போது கடலூர் சிறையில். இன்னும் சில ஹேங்கிங் ப்ரிசனர்ஸ் அப்போது கடலூரில் இருந்தாங்க. அப்படிப்பட்ட ஹேங்கிங் ப்ரிசனர்ஸ்சை DMO அரேங்கில் இருப்பவர்கள் தான் வந்து நேரிடையாக மருத்துவ பரிசோதனை மாதம் ஒரு முறை செய்து விட்டு அரசுக்கு அறிக்கை கொடுக்க வேண்டும்.
அப்போது சிறைக்கு வந்த டாக்டர் கண்ணன் செக்கப் செய்து முடித்த பின்னர் ஹார்ட் அட்டாக் வந்து மயங்கி விழ தாஸ் அத்தான் தான் தாங்கி பிடித்து மருத்துவமணைக்கு எடுத்து சென்றார். உயிர் போய்விட்டது. அப்போது கந்தசாமி முதல் எங்கள் எல்லோருக்கும் தாஸ் அத்தான் சொன்னது நியாபகம் வந்தது. "மத்த மத்த வியாதி போல இல்லை மாரடைப்பு என்பது... எப்போ வரும் எப்படி வரும்னு தெரியாது.
அதனால நாம தான் அதை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்கனும்" என சொன்னது நியாபகம் வந்தது. அப்படிப்பட்ட அவருக்கு மாரடைப்பினால் மரணம்...

கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு ஜனவரி 30ம் தேதி 2003 அன்று கொண்டு வரப்பட்டார்கள்.  சிறைத்துறை டி ஐ ஜி, மற்ற அத்தனை எட்டு மத்திய சிறை கண்காணிப்பாளர்கள், நாகை மாவட்ட ஆட்சியர், DRO, என ஏகப்பட்ட சிவப்பு விளக்கு கார்கள் பவனியோடு இறுதி ஊர்வலம். அரசு மரியாதை துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டார். பாவம் இஞினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருந்த சிவாவும் அவன் உடம்புக்கு பொருத்தம் இல்லா வேட்டி, மேல் துண்டு சகிதம் அழுது கொண்டே கொள்ளி வைத்தான். கொள்ளி வைக்கும் முன்னே அந்த உடலை எடுத்து சிதையின் மீது வைத்து விட்டு சிறைத்துறை டி.ஐ.ஜி ஆக இருந்த தாஸ் அத்தானின் சித்தப்பா திரு.சுவாமிநாதன் அவர்கள் மீண்டும் தன்னோடு தழுவிக்கொண்டு அழுததும் அதைப்பார்த்து சிவாவும் அழுததும் இன்னும் என் கண்ணில் இருக்கின்றது. ... இதான் வாழ்க்கை. இவ்வளவு தான் வாழ்க்கை....

கிட்ட தட்ட அதல்லாம் மறந்தே விட்டது. ஆனால் நேற்று விஜய் டிவியில் தாஸ் அத்தானின் பையன் விருது வாங்கிட்டு உணர்ச்சி வசமாய் நின்று கொண்டு இருந்த போது "இந்த நேரத்தில் நீங்க யாரை மிஸ் பண்றீங்க?" என கோபி கேட்டதும்... "அப்பாவ... என் அப்பாவ.... அவருக்கு நான் எதுவும் செஞ்சது இல்லை.... ஒன்னே ஒன்னு தான் செஞ்சேன்... கொள்ளி வச்சேன்... இந்த விருதை அப்பா போட்டோக்கு பக்கத்தில் வைப்பேன்" என சொன்னபோது "வெல்டன் சிவகார்த்திகேயன்" என என் மனசு சொன்னது.  பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு அந்த பழைய நியாபகங்கள் வந்து விட்டன.

எழுத்தை போன்ற ஒரு சிறந்த வடிகால் எதுவும் கிடையாது எனக்கு... மனதின் பாரம் குறைய வேண்டுமானால் எழுதுவேன் எப்போதும். இதோ எழுதி முடித்ததும்.... மனம் இலகுவாய் இருக்கின்றது....
- அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்

கருத்துகள் இல்லை: