சனி, 29 மே, 2021

சங்கி – ஜக்கி பேக்கரி டீலிங் ! - மருதையன்

idaiveli.wordpress.com : “trying to find another angle to make more money” – என்று பி.டி.ஆர் கூறியிருப்பது நாடறிந்த உண்மை.நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்,   ஜக்கி வாசுதேவை தரம் தாழ்ந்த முறையில் விமர்சித்து விட்டதாகவும், பொறுப்பான பதவியில் இருக்கும் ஒருவர் இவ்வாறு பேசியிருப்பது துரதிருஷ்ட வசமானது என்றும் இஷா மையம் டீசன்டாக  கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறது.  பி.டி.ஆரை  “நாய்” என்று சாடியிருக்கிறார் ஜக்கி.ஒருவேளை ஜக்கியை “நாய்” என்று பி.டி.ஆர் திட்டியிருந்தால்,  “நாயும் ஒரு ஜீவன்தானே” என்று தத்துவம் பேசி “லைக்”கை அள்ளியிருப்பார் ஜக்கி. பி.டி.ஆரின் சொல்லாண்மை அதற்கு வாய்ப்பளிக்கவில்லை. ஒவ்வொரு சொல்லும் ஜக்கியின் உயிர்நிலையைத் தாக்கி,  சத்குருவுக்கு உள்ளே இருந்த “நாயை” வெளியே இழுத்துப் போட்டு விட்டது.  

பி.டி.ஆர் கூறியிருக்கும் கருத்துகள் அனைத்தும் ஜக்கியைப் பற்றிய ஆகத் துல்லியமான மதிப்பீடுகள்.  “In the case of Jaggi, he is a publicity hound and charlatan who is trying to find another angle to make more money. He is a commercial operator using God and religion”

ஜக்கி ஒரு சுயவிளம்பர வெறியன், அறிவாளியைப் போல நடிக்கும் ஒரு டுபாக்கூர். கடவுளையும் மதத்தையும் வைத்துப் பணம் பண்ண முயற்சிக்கும் பேர்வழி – இதுதான் பி.டி.ஆர் கூறியிருப்பதன் பொருள்.  இதில் ஒரு சொல் கூட மிகை கிடையாது.

ஜக்கி ஒரு டுபாக்கூர்!

ஜக்கி மதத்தை வைத்து பணம் பண்ணும் பேர்வழி என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் charlatan (அறிவாளியைப் போல நடிக்கும் ஒரு டுபாக்கூர்) என்று சொல்லியிருக்கிறாரே, அதுதான் என்னைப் பெரிதும் கவர்ந்த வார்த்தை.

ஜக்கி ஒரு சத்குருவாக ஃபார்ம் ஆகிக் கொண்டிருந்த நாட்களில் – அதாவது பல ஆண்டுகளுக்கு முன் – என்.டி.டி.வியில் ஒரு விவாதம்.

மறைந்த அறிவியலாளரும் Centre for Cellular and molecular Biology என்ற  அமைப்பை தோற்றுவித்தவருமான அறிவியலாளர் புஷ்ப பார்கவாவை ஜக்கியுடன் விவாதிக்க வைத்தது ஒரு கொடுமை! கோவிட் மூன்றாவது அலை பற்றி ஹீலர் பாஸ்கருடன் விவாதம் நடத்த சவும்யா சாமிநாதனை கூப்பிடுவதைக் காட்டிலும் பெரிய கொடுமை அது!

(பார்கவா உருவாக்கிய CCMB என்ற அமைப்புதான் கோவிட் இல் தோன்றியிருக்கும் இந்தியன் வேரியன்டை அடையாளம் காட்டி மார்ச் மாதமே மோடி அரசை எச்சரித்தது. அந்த அமைப்பை சேர்ந்த விஞ்ஞானி ஷாகித் ஜமீல், மோடி அரசின் இருட்டடிப்பு நடவடிக்கைகள் காரணமாக  சில நாட்களுக்கு முன் ராஜினாமா செய்தார் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுகூர்வது பொருத்தம்)

மேற்படி என்.டி.டி.வி விவாதத்தைப் பார்த்தால் ஜக்கி எத்தகைய அசட்டு முட்டாள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.  இது பற்றி முன்னர் புதிய கலாச்சாரத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். Charlatan என்ற சொல்லுக்கான பொருளை மேலும் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால்,  ஜக்கி, நேஷனல் லா யுனிவர்சிட்டி மாணவர்களிடமும், ஜாவேத் அக்தரிடமும் விவாதிப்பதை யூ டியூபில் பாருங்கள். 

 “ஒரு மனிதன் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு 14 நாட்கள் அவன் உயிருடன் இருக்கிறான். அந்த நாட்களில் அவன் நகமும் முடியும் வளர்கின்றன”  “கிரகண காலத்தில் உணவைத் திறந்து வைத்திருந்தால் அது நஞ்சாக மாறுகிறது” “பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை டார்வினுக்கு 15,000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆதியோகி கண்டு பிடித்து விட்டார்” – இவையெல்லாம் ஜக்கி என்ற டுபாக்கூரின் அறிவியல் கண்டுபிடிப்புகள்.

விவாதங்களில் ஒருவர் மாற்றுக் கருத்து சொல்லும்போது, ஜக்கி  ஏளனமாக ஒரு சிரிப்பை உதிர்ப்பார். அதைக் கவனித்துப் பாருங்கள்.  பதில் சொல்ல முடியாத போது அர்ஜுன் சம்பத்  சிரிப்பதைப் போலவே இருக்கும்.  ஆங்கிலம் பேசும் அர்ஜுன் சம்பத் என்பதுதான் சத்குருவின் உண்மையான தரம்.

ஜக்கியின் ஆன்மீக OMR!

“trying to find another angle to make more money” – என்று பி.டி.ஆர் கூறியிருப்பது நாடறிந்த உண்மை.  காவிரி காலிங் போல கோயில் அடிமை நிறுத்து என்பதும் ஜக்கியின் இன்னொரு வசூல் திட்டம்.

கோக் நிறுவனம் தனது வணிகத்துக்கு நிலத்தடி நீரைத் தேடுகிறது. வேதாந்தா அகர்வால்  தனது வணிகத்துக்கு ஹைட்ரோ கார்பனைத் தேடுகிறார். ஜக்கி கோயில்களைத் தேடுகிறார். 

டில்லி செங்கோட்டையை டால்மியாவுக்கு தத்து கொடுத்து பராமரிக்கச் சொல்லியிருக்கிறது மோடி அரசு.  நாடு முழுவதும் 90 க்கும் மேற்பட்ட தொல்லியல் சின்னங்களை முதலாளிகளுக்குத் தத்து கொடுப்பதாகவும் மத்திய சுற்றுலாத்துறை அறிவித்திருக்கிறது. நோக்கம் – பராமரிப்பது, சம்பாதிப்பது

மோடியின் நண்பரான ஜக்கி, வனத்துறையிடமிருந்தும் பழங்குடி மக்களிடமிருந்தும் காடுகளை “விடுவித்ததை”ப் போல,  அறநிலையத்துறையின் அடிமைத் தளையிலிருந்து கோயில்களை விடுவிக்க விரும்புகிறார்.

உண்மையைச் சொல்வதென்றால், தமிழக கோயில்களைக் கைப்பற்றுவது என்பது  ஆர்.எஸ்.எஸ் இன் நீண்ட நாள் விருப்பம். 1980 களில் மண்டைக்காடு கலவரத்தைத் தொடர்ந்து,  தமிழகத்தில் காலூன்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ்  தொடங்கிய முதல் அமைப்பின் பெயர் ஆலயப் பாதுகாப்புக் கமிட்டி. அதன் இன்றைய வளர்ச்சிதான் அறநிலையத்துறையை ஒழிப்பது என்ற கோரிக்கை. கோயில்களை ஆர்.எஸ்.எஸ் மையங்களாக மாற்றி, திருவிழாக்களில் கலவரத்தைத் தூண்டி, “பார்ப்பனிய இந்து ஓர்மை”யை உருவாக்குவதென்பது சங்கிகள் பின்பற்றி வரும்  “அரசியல் மாடல்”.

காஞ்சி முதல் குமரி வரை ஒரு நீண்ட “ஆன்மீக ஓ.எம்.ஆரை” உருவாக்கி,  ஒவ்வொரு கோயிலுக்கும் பொருத்தமாக  “சிவராத்திரி டான்ஸ் – நவராத்திரி டான்ஸ்” போன்ற  புதுப்புது கான்செப்டுகளை சந்தைப்படுத்தி,  மேற்படி ஆன்மீக வீக் எண்டு பார்ட்டிகளுக்கு  உலகெங்கும் பரவியிருக்கும்  ஐ.டி அம்பிகளை ஈர்த்து கல்லா கட்டலாம் என்பது ஜக்கியின் “பிசினஸ் மாடல்”.

சுருங்கக் கூறின், “கோயில் அடிமை நிறுத்து” என்பது ஜக்கிக்கும் சங்கிகளுக்கும் இடையிலான ஒரு “பேக்கரி டீலிங்”.

தேரை இழுத்து தெருவில் விட்டு விட்டார் பி.டி.ஆர்!

“பி.டி.ஆர் இப்படிப் பேசியதற்குப் பின் எனக்கு அவர்மீது இருந்த மதிப்பே போய்விட்டது. வெளிநாட்டில் படித்தவர் இப்படிப் பேசலாமா?”  என்று டிவிட்டரில் குமுறியிருக்கிறார் ஸ்வராஜ்யா பத்திரிகையின் நிர்வாக ஆசிரியரான ஜக்கி என்று அழைக்கப்படும் ஜெகந்நாதன்.

ஸ்ரீமதி துர்கா ஸ்டாலின் அவர்களின் தெய்வ நம்பிக்கை காரணமாக தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் மு.க.ஸ்டாலின் மீது “ரொம்ப மரியாதை வச்சுண்டிருந்தவாள்”  பலபேர்,  இந்த ஸம்பவத்துக்குப் பின் மனக்கிலேசத்துக்கு ஆளாகியிருப்பதாகக் கூறுகின்றனர்.

இது அவாளுடைய வழக்கமான டெக்னிக். தேர்தலுக்கு முன்னரே இதைத் தொடங்கி விட்டனர். “ஸ்டாலினின் வேட்பாளர் தெரிவு அற்புதம்  –  டாக்டர் எழிலன் போன்ற சில ஹிந்து துவேஷிகளைத் தவிர” என்று ஒரு பிட்டைப் போட்டார்கள்.  பிறகு ஆ.ராசா வைக் குறி வைத்து தாக்கினார்கள்.

பி.டி.ஆரை சமாளிப்பது  அவாளுக்கு கொஞ்சம் சிக்கல்.  “வெளிநாட்டில் படித்துவிட்டு வந்து சரளமான ஆங்கிலத்தில் நீட் தேர்வை தாக்குகிறார். ” “மதுரை மீனாட்சி பக்தர் என்று சொல்லிக்கொண்டு,  நெற்றியில் குங்குமத்துடன் பார்ப்பன ஆதிக்கத்தைச் சாடுகிறார். லேமன் பிரதர்ஸ்-இல் பெரிய பதவியில் இருந்து விட்டு, இங்கே வந்து சமூக நீதிக்கு வாதாடுகிறார்.  

பார்ப்பன அறிவுத்துறையினரும்,  டில்லித் திமிரில் ஊறிய ஆங்கில  ஊடகத்தினரும், திமுகவில் இப்படி ஒரு “அவதாரத்தை” எதிர்பார்க்கவில்லை. தற்போது பி.டி.ஆர் ஜக்கிக்கு கொடுத்திருக்கும் சாட்டையடி,  திமுக தலைமைக்கு சங்கடத்தைத் தோற்றுவித்திருக்க கூடும்.

தற்போது பி.டி.ஆர் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். சொன்ன எந்தக் கருத்திலிருந்தும் அவர் பின்வாங்கவில்லை. “ஒரு பேட்டியில் ஜக்கி வாசுதேவைப் பற்றி  நான் சொன்ன  கருத்துகள் இவை. மற்றப்படி குற்றச்சாட்டுகள் தொடர்பான விவகாரங்களை அந்த துறை கவனித்துக் கொள்ளும். எனக்கு கோவிட் வேலை தலைக்கு மேல் இருக்கிறது. ஜக்கி வாசுதேவ் பல சட்டங்களை தொடர்ந்து மீறியிருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கு என்னிடம் இருக்கும் ஆதாரங்களை உரிய அமைச்சரிடம் கொடுப்பேன்.  எனக்கு ஜக்கியுடன் தனிப்பட்ட பகை எதுவும் இல்லை.  மற்றப்படி  ஜக்கியின் முறைகேடுகளை இந்தியாவிலும் அமெரிக்காவிலும் இருக்கும் அதிகாரிகள் எந்தவித தலையீட்டுக்கும் இடம் கொடுக்காமல் விசாரிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

சத்குருவின் திருவிளையாடல்கள்

தற்போது நியூஸ் லாண்டரி இணைய இதழில் சத்குருவின் திருவிளையாடல்கள் பற்றிய புலனாய்வுக் கட்டுரை வெளிவந்திருக்கிறது. எதிர்காலத்தில் தனது பிசினஸில் இப்படிப்பட்ட அபாயங்கள் வரக்கூடும் என்பதை  ஜக்கி அறியாதவர் அல்ல.

சாராயம், கஞ்சா, விபச்சாரம் போன்ற தொழில்களில் ஈடுபடும் சமூகவிரோதிகள், சின்ன கட்சி பெரிய கட்சி என்ற பேதமில்லாமல் எல்லோருக்கும் தாராளமாக நன்கொடை கொடுப்பது வழக்கம். அவர்கள் சர்வ கட்சித் தலைவர்களுடன் தவறாமல் போட்டோவும் எடுத்து வைத்துக் கொள்வார்கள். ஜக்கியும் அதே ரகம்தான். 

மரம் நடுகிறேன், யோகா சொல்லிக் கொடுக்கிறேன், அன்னதானம் செய்கிறேன் என்று ஏதாவது ஒரு மொக்கையான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, அரசியல் பிரபலங்களை அழைத்து அவர்களுடன் போட்டோ எடுத்து வைத்திருக்கிறார் ஜக்கி. “கலைஞருடன் ஜக்கி, மகேஷ் பொய்யாமொழியுடன் ஜக்கி, விவேக்குடன் ஜக்கி”  போன்ற படங்கள் சமூக ஊடகங்களில் இப்போது வலம் வருகின்றன.

“அறநிலையத்துறையை எந்தக் கட்சி ஒழிக்குமோ அந்தக் கட்சிக்கு (பாஜக வுக்கு) வாக்களியுங்கள்” என்று தேர்தலுக்கு முன் பிரச்சாரம் செய்த ஈஷா மையத்தினர் இப்போது பம்முகிறார்கள். “கட்சி வேறுபாடின்றி எல்லா அரசுகளுக்கும் நாங்கள் ஒத்துழைத்திருக்கிறோம். இனியும் ஒத்துழைப்போம்” என்று பிளேட்டைத் திருப்புகிறார்கள். ஜக்கியின் வன ஆக்கிரமிப்பு மற்றும் நிதி மோசடி – வரி ஏய்ப்புக் குற்றங்கள், மறைக்க முடியாதவையாக இருப்பதுதான் இதற்குக் காரணமாக இருக்க வேண்டும்.

“முறைகேடுகளை விசாரிப்போம்” என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சொல்லியிருக்கிறார். எனினும் இதை அளவுக்கு அதிகமாகக் கொண்டாடுவது பொருளற்றது.  சமீபத்தில் ஜீயர் நியமனம் குறித்த அறநிலையத்துறை அறிவிப்பு இவ்வாறுதான் கொண்டாடப்பட்டது. நான் அறிந்தவரை, மடங்கள், ஆதீனங்கள் மீதான அறநிலையத்துறையின் அதிகாரங்கள் பெரிதும் வரம்புக்குட்பட்டவை. சங்கரராமன் கொலைவழக்கில் சங்கராச்சாரி ஜெயேந்திரரும், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மீதான கொலைமுயற்சி வழக்கில் சீனியர் ,ஜுனியர் ஆகிய இருவரும் குற்றம் சாட்டப்பட்டவர்கள். Moral Turptitude க்காக இருவரையும் மடாதிபதி பதவியிலிருந்து நீக்குவதற்கு, விதிமுறைகளின்படி அறநிலையத்துறைக்கு அதிகாரம் உண்டு. இருந்தும் அப்படி எதுவும் நடக்கவில்லை.

அன்று, சங்கராச்சாரி சந்தி சிரித்து மக்கள் மத்தியில் தனிமைப்பட்டுப் போயிருந்த நிலையிலேயே அது நடக்கவில்லை. இன்று வன ஆக்கிரமிப்புதான் ஜக்கியின் குற்றங்களில் முதன்மையானதாகப் பேசப்படுகிறது. இதை நிரூபித்து விட முடியும். மீட்கவும் முடியும்.

ரைஸ் புல்லிங் ஆன்மீகம்!

வன ஆக்கிரமிப்பைக் காட்டிலும் ஆபத்தானது, பார்ப்பனரல்லாத படித்த நடுத்தர வர்க்கத்தினரின் சிந்தனையில் ஜக்கி, ஸ்ரீஸ்ரீரவிசங்கர் போன்றோர் நடத்தி வரும் ஆக்கிரமிப்புகள். அதன் விளைவாகத்தான் சிவராத்திரிக்கு கூட்டம் கூடுகிறது.

இன்று “கோவில் அடிமை நிறுத்து” என்ற அட்டையைப் பிடித்து நிற்பவர்களில் பலர் பார்ப்பனரல்லாதவர்கள். கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் போன்ற சொற்களைக் கூட 1960, 70 களின் பார்ப்பனரல்லாத நடுத்தர வர்க்கத்தினர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இன்று விதவிதமான ஹோமங்கள் பார்ப்பனரல்லாத சமூகத்தினரின் மார்க்கெட்டுக்குள் வந்துவிட்டன.

சத்குரு, வடநாட்டு சங்கிகளைப் போலச் சாணியைப் பூசிக்கொண்டு நிற்காமல், ஹார்லே டேவிட்சன் பைக்கில் ரேபான் கண்ணாடியணிந்து தரிசனம் தருகிறார். நவீன அறிவியல் போலத் தோற்றம் காட்டும் மொழியில் நமது “பாரம்பரிய ஞானத்தை” கடைவிரிக்கிறார். ஜக்கியின் இந்த “ரைஸ் புல்லிங் ஆன்மீகம்”  கொங்கு வட்டாரத்தில் பெற்றிருக்கும் சித்தாந்த செல்வாக்கிற்கும் அந்தப் பகுதியில் பாஜக – அதிமுக அணி பெற்றிருக்கும் தேர்தல் வெற்றிக்கும் தொடர்பில்லை என்று நாம் கருதவியலுமா?

ஜக்கியின் சத்குரு இமேஜைத் தகர்க்க வேண்டுமானால், அவர் கடைவிரிக்கும் அபத்தங்களை எள்ளி நகையாடி, மக்கள் மத்தியில் அதனைக் கேலிப்பொருளாக்க வேண்டும். ஜக்கியின் குற்றங்கள் மீது நடவடிக்கை வர வேண்டுமானால், “ஜக்கியை கூண்டில் நிறுத்து” என்பதை மக்கள் இயக்கமாக்க வேண்டும். பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் ஜக்கிக்கு எதிராக போடப்பட்டிருக்கும் வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக தூங்க வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைத் தட்டி எழுப்ப வேண்டும். ஜக்கியின் முறைகேடுகளை மட்டுமின்றி, ஜக்கியை முட்டுக்கொடுத்து தூக்குகின்ற ஊடகங்களை அடையாளம் காட்டுவதும் அவசியம்.

கோயில் சொத்து யாருக்குச் சொந்தம்?

கோயில் சொத்துகள் குறித்த விவரங்களை வெளியிடப்போவதாகவும் ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அமைச்சர் சேகர்பாபு அறிவித்தவுடனே,  திமுக அரசின் வெளிப்படைத்தன்மையைப் பாராட்டுவதாக சொல்லியிருக்கிறார் ஜக்கி. அதிகாரத்தைக் கைப்பற்ற இயலாதபோது, அதிகாரத்தில் இருப்பவர்களை தங்களுக்கு ஏற்ப வளைக்கும் வித்தை தெரிந்தவர்கள் அவர்கள். நாம்தான் விழிப்புடன் இருந்து அதனை முறியடிக்க வேண்டும்.

சொத்து விவரங்களை அறநிலையத்துறை வெளியிடட்டும். கோயில் சொத்துகளை அனுபவிப்போரில் ஏழைகள் எத்தனை பேர், பணக்காரர்கள் எத்தனை பேர் என்பதைத் தெரிந்து கொள்வோம். “மன்னர்கள் எழுதி வைத்த கோயில் சொத்து” என்று இந்து அமைப்பினர் கூறுகிறார்கள். எந்த மன்னனும் ஜமீன்தாரும் தான் உழைத்து சம்பாதித்து அதனை கோயிலுக்கு எழுதிவைக்கவில்லை.  உழவர்களின் உடைமைகளை பலவந்தமாகப் பிடுங்கித்தான் கோயிலுக்கும் பார்ப்பனர்களுக்கும் கொடுத்திருக்கிறார்கள்.  இதுதான் வரலாறு. 

மன்னர்களின் தனிச்சொத்துகளாக இருந்த சமஸ்தானங்களை அவர்களிடமிருந்து பிடுங்கியது போல, மன்னர்களால் கோயில்களுக்கும் மடங்களுக்கும் எழுதி வைக்கப்பட்ட பல லட்சம் ஏக்கர் நிலங்களையும் சொத்துகளையும் அரசு பிடுங்கியிருக்க வேண்டும். அது நடக்கவில்லை.  ஏனெனில், அரசியல் சட்டத்தின் பிரிவு 26 மத நிறுவனங்களின் சொத்துகளைப் பாதுகாக்கிறது. அறநிலையத்துறை அவற்றை மேலாண்மை மட்டுமே செய்கிறது.

“அந்த மேலாண்மையும் கூடாது. கோயில் சொத்துகளை பக்தர்களாகிய எங்களிடம் ஒப்படைத்துவிடு” என்று கோருகிறது ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பல். “கடவுளுக்கு எதற்கு சொத்து?” என்பதுதான் நாம் எழுப்ப வேண்டிய கேள்வி. எந்த ஊரிலாவது அய்யனார், ஒண்டிவீரன், சுடலைமாடனுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் சொத்து இருக்கிறதா? அந்த தெய்வங்களுக்கு அன்றாடம் ஆறுகாலப் பூசை நடக்கிறதா?

ஆறுகாலப் பூசை, திருப்பள்ளி எழுச்சி, அபிஷேகம், ஆராதனை, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் என்பனவெல்லாம் சிதம்பரம், தில்லை, திருவண்ணாமலை போன்ற கோயில்களுக்கு மட்டும் வாய்க்கப் பெற்றதற்கு காரணம் அவை ஆளும் வர்க்கத்தினர்/ சாதியினரின் கடவுளர்கள். அய்யனாரும் மதுரைவீரனும் உழைக்கும் வர்க்கம்/சாதியினரின் கடவுளர்கள்.

எனவே, நிலமில்லாத கிராமப்புற ஏழை இந்துக்களுக்கும், வீடில்லாத நகர்ப்புற ஏழை இந்துக்களுக்கும்  கோயில் சொத்துகள் பயன்பட வேண்டும் என்று நாம் கோரவேண்டும்.  அதே போல, வக்பு வாரிய சொத்துகள் ஏழை முஸ்லிம்களுக்கும், திருச்சபையின் சொத்துகள் ஏழை கிறித்தவர்களுக்கும் பயன்படட்டும்.

இந்த கோரிக்கையை இந்து அமைப்பினரால் பெரிதும் கொண்டாடப்படும் சுவாமி சகஜானந்தா தமிழக சட்டப்பேரவையில்  முன்வைத்திருக்கிறார். எந்த சிதம்பரம் கோயில் நிலங்களை தாழ்த்தப்பட்ட, ஏழை உழவர்களுக்கு எழுதி வைக்குமாறு அவர் கோரினாரோ அந்த கோயில் சொத்துகளான நிலங்களும், நகைகளும் கணக்கற்ற அளவில் தீட்சிதர்களாலும் ரியல் எஸ்டேட் முதலைகளாலும் களவாடப் பட்டிருக்கின்றன.

1985 இல் அம்மன் நகையை குறிப்பிட்ட சில தீட்சிதர்கள் திருடிவிட்டதாக சக தீட்சிதர்களே புகார் கொடுத்ததைத் தொடர்ந்து எம்ஜியார் ஆட்சிக்காலத்தில்தான் சிதம்பரம் கோயிலுக்கு அறநிலையத்துறையின் நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டார். அந்த அதிகாரியின் அலுவலகத்தையே தீட்சிதர்கள் உடைத்தனர். நிர்வாக அதிகாரி நியமனத்துக்கு இடைக்காலத் தடை பெற்றனர். அப்புறம் கோயிலுக்குள் சில கொலைகளும் நடந்தன.

பின்னர் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் விடாப்பிடியான முயற்சியின் விளைவாக சென்னை உயர்நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளாகப் புதைக்கப்பட்டிருந்த “நிர்வாக அதிகாரி நியமனம் தொடர்பான வழக்கு” தோண்டி எடுக்கப்பட்டது. கோயிலை அறநிலையத்துறை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததது. உடனே அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கலைஞர் கொண்டு வந்தார். அடுத்த சில ஆண்டுகளிலேயே உச்ச நீதிமன்றம் அதை தீட்சிதர்களுக்கே சொந்தமாக்கி தீர்ப்பளித்தது. தீர்ப்பளித்தவர் சமீபத்தில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பாப்டே என்பது குறிப்பிடத்தக்கது.

சில ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்தப் போராட்டம் வெறும் சட்டப்போராட்டமாக மட்டும் நடத்தப்படவில்லை. பல பொதுக்கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் பரப்புரைகளும் சிதம்பரத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டன. இருப்பினும், இந்த அநீதியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சிதம்பரம் மக்கள் மத்தியில் எவ்வித கொந்தளிப்பையும் ஏற்படுத்தவில்லை.

அவ்வளவு ஏன், தில்லைச் சிற்றம்பலத்தில் நின்று தேவாரம் பாடும் உரிமைக்காக நடத்தப்பட்ட போராட்டத்தின் நிலையும் அதுதான். போராட்டத்தை  ஆதரிப்பதாக சைவ ஆதீனங்கள் அறிக்கை கூட விடவில்லை. தமிழை விடவும், தேவாரத்தை விடவும்,  சிவனை விடவும் சொத்து பெரிது என்று அவர்கள் கருதியதுதான் காரணம்.

இது திமுக – ஜக்கி ஒண்டிக்கு ஒண்டி மோதல் அல்ல!

எனவேதான் சொல்கிறேன். பிடிஆர் அல்லது ஆ.ராசா போன்றோரின் துணிச்சலான பேச்சைக் கைதட்டிக் கொண்டாடுவதால் மட்டும் எதுவும் ஆகப்போவதில்லை. “ஈஷாவை விரட்டு” என்று ஒரு மக்கள் இயக்கத்தை நாம் கட்ட முடியுமா என்பதுதான் நம் முன் இருக்கும் சவால்.

“ராமன் என்ன எஞ்சினீயரா?” என்று எள்ளி நகையாடினார் கலைஞர்.  இருப்பினும்  ராமர் பாலம் என்ற  சுப்பிரமணிய சாமியின் கட்டுக்கதையை அங்கீகரித்து சேதுக்கால்வாய் திட்டத்தையே முடக்கியது உச்ச நீதிமன்றம். தமிழகம் கொந்தளிக்கவில்லை.

பெரியார் மக்கள் மத்தியில் இயக்கம் கட்டினார். அதன் விளைவாகத்தான் இட ஒதுக்கீடு முதல் சுயமரியாதை திருமண சட்டம், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டம் ஆகியவை அனைத்தும் வந்தன.

தற்போது அர்ச்சக மாணவர்களை நியமனம் செய்வோம் என்று திமுக வாக்குறுதி அளித்திருக்கிறது. நியமித்தால், அவாள் நீதிமன்றத்துக்கு சென்று முட்டுக்கட்டை போடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். “அப்படி நீதிமன்றம் போனால், சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாவோம்” என்ற அச்சத்தை சம்மந்தப் பட்டவர்களுக்கு தமிழகம் ஏற்படுத்துமானால், அதுதான் நம் வெற்றிக்கு உத்திரவாதம்.

மராத்தா இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு நமக்கு எச்சரிக்கை. நீதிமன்றமும் அரசியல் சட்டமும் அவர்களது ஆட்டம். அங்கே ஆட்டவிதிகளை அவர்கள்தான் தீர்மானிப்பார்கள். அந்த விதிகளுக்கேற்ப  நாம் ஆடவும் வேண்டும்.  விதிகளை மீறுவதற்குப் பயிலவும் வேண்டும்.

நடப்பது திமுகவுக்கும் ஜக்கிக்கும் இடையிலான ஒண்டிக்கு ஒண்டி பிரச்சனை அல்ல. திமுக செய்தால் கைதட்டுவதற்குச் சிலரும், செய்யத் தவறினால் விமர்சிப்பதற்குச் சிலரும் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.  அத்தகையோரைப் பார்வையாளர் மாடத்திலிருந்து இறக்குவது கடினம்.

நாம், மைதானத்தில் மக்களை இறக்குவது எப்படி என்று சிந்திப்போம்.

  • மருதையன்

கருத்துகள் இல்லை: