புதன், 26 மே, 2021

நாயன்மார்கள் சங்கிகளின் முன்னோடிகள்! -- சங்கிகள் எப்படி உருவாகிறார்கள் என்பதற்கு பெரியபுராணமே சிறந்த எடுத்துக்காட்டு.

May be an image of text that says 'பெரிய புராணம் மானக் கஞ்சாற நாயனார்: மகளின் திருமண நாளன்று முனிவர் ஒருவர் மானக்கஞ்சாறர் இல்லத்திற்கு வருகிறார் அவரை வரவேற்று தனது மகளை முனிவரை வணங்கும் படி கூற,அவரும் முனிவர் காலில் விழுகிறார் திருமணக் கோலத்தில் இருந்த மகளின் கூந்தலை பஞ்சவடிக்காக (மயிரினால் பூணூலாகத் தரிக்கப்படும் வடம்) முனிவர் கேட்கிறார் முனிவரது விருப்பப்படி மகளின் கூந்தலை அரிந்து கொடுக்கிறார் மானக்கஞ்சாறர்'

Dhinakaran Chelliah   :  நாயன்மார்கள் சங்கிகளின் முன்னோடிகள்
 அறிந்தும் அறியாத நாயன்மார்கள்
சங்கிகள் எப்படி உருவாகிறார்கள் என்பதற்கு பெரியபுராணம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் எனும் திருத்தொண்டர் புராணம்
பனிரெண்டாம் திருமுறையாக போற்றப்படுகிறது.இதில் 63 நாயன்மார்களின் கதைகளும் 9 தொகையடியார்களின் கதைகளும் உள்ளன.
63 நாயன்மார்கள் என்ற எண்ணிக்கையே சைவத்திற்கு முன்பு வாழ்ந்த 63 சமணப் பெரியார்களுக்குப் போட்டியாக எழுதப்படவை என்ற கருத்தும் நிலவுகிறது.காரணமே இல்லாமல் சிலர் நாயன்மார் பட்டியலில்  சேர்க்கப் பட்டிருப்பதை அவதானித்தால் இது உண்மை என்றே தோன்றுகிறது.
இந்தப் பதிவில்,கண்ணப்பர்,நந்தனார்,
சிறுத்தொண்டர்,அப்பர்,சுந்தரர்,சம்பந்தர்,
காரைக்கால் அம்மையார் போன்றவர்களை விடுத்து பெரும்பாலும் நாம் கேள்விப்படாத நாயன்மார்களின் கதைகளைச் சுருக்கி எழுதியுள்ளேன்.
நாயன்மார்களில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் அந்தணர்களாவர்.இவர்களை பெரியபுராணம் மறையவர்,அந்தணர்,


ஆதிசைவர்,வேதியர் என பல பெயர்களில் அழைக்கிறது.சிவன் இவர்களிடம் கண்ணைக் கொடு,பிள்ளையக் கொடு,மனைவியைக் கொடு,உன் உயிரைக் கொடு எனக் கேட்கவில்லை,வழக்கமான திருவிளையாடல்கள் மற்றும் சோதனைகள் பெரும்பாலும் இவர்களுக்கு இல்லை.சிவனை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக நேராக கைலாயத்திற்கு சென்ற அந்தணர்கள் உண்டு.
பெரும்பாண்மையான நாயன்மார்கள் வைதிக பாரம்பரியம் கொண்டவர்கள்,வேதம்,வேள்வி ஆகமங்களை அறிந்தவர்கள்.வடமொழியில் வேத மந்தரங்கள்,பஞ்சாட்சர மந்திரங்களை ஓதுகிறவர்கள்.
“சைவம்” முழுக்கவே தமிழர்களுக்கானது,வடமொழியோ நால் வேதங்களோ,வைதிக கர்ம அநுட்டானங்களோ,தர்ம சாஸ்திரங்களோ
சைவத் திருமுறைகளில் இல்லை என்பது அப்பட்டமான பொய்.இக்கதைகளில் பெரும்பாலும் சிவன் வேதியராகவே சித்தரிக்கப் படுகிறார்.சிவபெருமானை முதல் அந்தணர் என்றும் அவரது அம்சம் எனக் கருதப்படும் சுந்தரர் ஆதிசைவர் எனும் அந்தணர் வகுப்பாராகவே சித்தரிக்கப்படுகிறார்.
மேலுள்ள கருத்துக்களை பெரிய புராணம் படிக்கிறவர்கள் எளிதிற் உணர்வார்கள். முழுக்க முழுக்க வைதிக சனாதனம் கலப்பு உள்ளவையே திருமுறைகள்,அதிலிருந்து வைதிக கருத்துக்களை அகற்ற இயலாது என்பதே உண்மை.
சைவம் தமிழர்களுக்கானது என முழக்கமிட்டு, சனாதனத்தை எதிர்க்கும் சைவ மடங்களின் போலித் தன்மை பெரியபுராணம் படிக்கிறவர்களுக்கு விளங்கும்.
சிவனுக்காக,சிவனடியார்களுக்காக கொலை செய்வதையும்,திருடுவதையும்,மற்றவர்களை துன்புறுத்துவதையும்,சூதாடுவதையும்,
வன்கொடுமை புரிவதையும்,தன்னைத் தானே வருத்திக் கொள்வதையும்,குற்றங்கள் புரிவதை யும் பெரியபுராணத்தில் நியாயப் படுத்துகிறார் சேக்கிழார்.
தந்தயைக் கொன்றவர்,பெற்ற குழந்தையைக் கொன்றவர்,உற்றார் உறவினர்களைக் கொன்றவர்,மனைவியை அடியாருடன் அனுப்பியவர்,கொலைக் குற்றங்களைப் புரிந்தவர், திருட்டு,சூது,வன்முறையில் ஈடுபட்டவர்,மகளைத் துன்புறுத்தியவர் போன்றவர்களின் கதையை நமது குழந்தைகளுக்குக் கூற இயலுமா என்பதே நம் முன்னே எழும் கேள்வி?!
இன்றளவும் இவர்களின்  சிலைகள் கோயில்களில் வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது,குரு பூசையும் வழிபாடும், விழாக்களும் நடத்தப்படுகிறது.
சைவ சமயம்,சைவ சித்தாந்தத்தில் பற்றுள்ளவர்கள்,ஹிந்து என தன்னை அடையாளப்படுத்த விரும்புகிறவர்கள் தயவு செய்து இந்தப் பதிவில் கூறப்பட்டுள்ள நாயன்மார்களின் கதைகளைப் படியுங்கள்.’அன்பே சிவம்’ என்பது எவ்வளவு பெரிய அபத்தம் என்பதை நீங்களே உணர்வீர்கள்.
சைவ சமயம் வன்முறையில் வளர்ந்த ஒரு சமயம் என்பதையும் சைவம் வளர்வதற்கு முன்பு சமணமும் பௌத்தமும் தென்பகுதி மக்களால் கடைப்பிடித்த சமயங்கள் என்பதை பெரிய புராணம் படிப்போர் உணரலாம்.
1.கழற்சிங்க நாயனார் மற்றும் செருத்துணை நாயனார்: பல்லவ மன்னான கழற்சிங்கர் தமது அரசியுடன் திருவாரூர் கோயிலுக்குச் சென்றார்.இருவரும் கோயில் மண்டபத்தைச் சுற்றி வந்தனர்.ஓரிடத்தில் அரசியார் அடியவர்கள் பூ மாலைகளைத் தொடுத்துக் கொண்டிருப்பதை கவனித்தார்.அப்போது ஒரு பூ மண்டபத்தருகே சிதறி வீழ்ந்தது.அதை எடுத்த அரசி மோந்து பார்த்தார்.அந்நேரம் செருத்துணை நாயனார் அங்கே வந்தார். இறைவனுக்குரிய மலரை எடுத்து மோந்து பார்க்கிறாளே எனக் கோபம் கொண்டு சரசர வென்று அரசியைப் பற்றி அவள் மூக்கை அரிந்து சிறிதும் அஞ்சாமல் நின்றார். மூக்கிலிருந்து குருதி சோரக் கீழே விழுந்தாள் அரசி.தரிசனம் முடித்து அங்கே வந்த கழற்சிங்கர் தம் மாதேவி குருதியோடு கீழே கிடந்து புரளுவதைக் கண்டார்.
இச் செயலைச் செய்தது யார் என்று கோபத்துடன் கேட்டார்.அப்போது செருத்துணை நாயனார் மன்னனின் முன்னே வந்து, “நான்தான் இது செய்தேன்,அதற்கு தக்க காரணம் உண்டு”என்றார்.சிவபிரானுக்குரிய மலரை மோந்து பார்த்த பிழையினால் அந்த மூக்கை அரிந்தேன் என்றார் செருத்துணையார்.
“மலர் போனால் வேறு மலர் வரும்; மூக்கு போனால் வேறு மூக்கு வருமா என அரசர் கேட்கவில்லை.சிவாபராதம் சிறிதானாலும் பெரிதானாலும் தண்டிப்பதற்குரியது என்று எண்ணிய கழற்சிங்கர் மலரை எடுத்து மோந்த குற்றத்திற்கு முன் எடுத்த குற்றத்தைச் செய்தது கை.ஆகவே அதை முதலில் தண்டித்திருக்க வேண்டும்,அதை நான் செய்கிறேன் என்று கூறி அரசியின் கையை வளையோடும் வெட்டினார்.
2.மூர்க்க நாயனார்: சூதாட்டத்தில் வல்வரான இவர் சூதாட்டத்தில் பணம் சம்பாதித்து அந்த வருமானத்தைக் கொண்டு சிவனடியார்களுக்கு உணவளித்து வந்தார்.சூதாட்டத்தில் இவருடன் முரண்படுவோர்களை உடைவாளால் அவர்களைக் குத்தி அவர்களிடமிருந்து பொருளை அபகரித்து சிவனடியார்களுக்கு உணவளித்தார்.
3.சண்டேசுவர நாயனார்: விசார சர்மன் சிறு வயதிலேயே சிவபக்தி கொண்டவர்.பசுக்களை மேய்க்கும் தொழிலை மேற்கொண்டார்.
மாடு மேய்க்கச் செல்லும் இடத்தில், மணலைக் குழைத்து சிவலிங்கம் வடிப்பார். மேயச்செல்லும் பசுக்கள், தங்கள் பாலை அதன் மேல் சுரந்து அபிஷேகம் செய்யும்.
ஒருமுறை அவ்வூர் இளைஞன் ஒருவன், சிவலிங்கம் மீது பசுக்கள் பால் சுரந்ததைப் பார்த்து விட்டு, ஊருக்குள் போய், விசார சர்மனின் செய்கை பற்றி சொல்லிக் கொடுத்து விட்டான். எஜமானர்கள், இது குறித்து எச்சதத்தனிடம் சொல்லி, மகனைக் கண்டித்து வைக்கும்படி கூறினர்.
உண்மையை அறிய, ஒருநாள் மாடு மேய்க்கும் இடத்திற்கு வந்து மறைந்திருந்து கவனித்தான் எச்சதத்தன். அந்த இளைஞன் சொன்னது போலவே, மண் லிங்கத்தின் மீது பசுக்கள் பாலைச் சொரிந்தன. விசார சர்மன், லிங்கத்தின் முன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தான்.எச்சதத்தனுக்கு கோபம் வந்து விட்டது.வேகமாக மகன் அருகே வந்து அவனை உதைத்துக் கண்டித்தான். தன் தந்தையிடம்,
“இங்கே பசுக்கள் எவ்வளவு பாலைச் சுரந்தாலும், எஜமானர்களின் வீட்டுக்கும் போதுமான பாலைத் தருகின்றன. சிவபூஜையைக் கெடுக்காதீர்கள்…’ என்றான் விசார சர்மன். மகன், தன்னை எதிர்த்துப் பேசுவதாக கருதிய எச்சதத்தன், மணல் லிங்கத்தை காலால் மிதித்து உடைத்து விட்டான். கோபமடைந்த மகன்,கையில் கோலை எடுத்தான். அது கோடாரியாக மாறியது. தந்தையின் கால்களின் மீது வீசினான். கால் இரண்டும் துண்டுபட்டு கீழே விழுந்தான் எச்சதத்தன். இதன் காரணமாக சிவபெருமான் தன்னுடைய பூசைக்கு உரிய பொருட்களுக்கு காவல் காப்பதற்கு உரியவராக சண்டேசுவரர் எனும் பதவியை விசாரசர்மனுக்கு அளித்தார்.
சிவன் கோயிலுக்குச் செல்வோர் சண்டேசுவர நாயனாரின் சிலைக்கு முன்பு கைதட்டும் வழக்கம் இன்றும் தொடர்கிறது. கோயிலிருந்து எதையும் எடுத்துச் செல்லவில்லை என்பதை அறிவிக்கும் முகமாக இந்தச் செயலை செய்கின்றனர் பக்தர்கள்.சிவன் சொத்து குலநாசம் எனும் பிரயோகம் இதன் பொருட்டே வந்தது.
4.கலிய நாயனார்: இவர் பெரிய செல்வந்தர். திருக் கோயிலில் உள்ளேயும் வெளியேயும் இரவும் பகலும் இடைவிடாது திருவிளக்குப் பணியை செய்து வந்தார். இதனால் இவரது செல்வம் விரைவிலேயே கரைந்து போனது. செக்கு ஓட்டி திருவிளக்கு பணியினைத் தொடர்ந்தார். அந்தக் கூலி வேலையும் நாளடைவில் கிடைக்கவில்லை.வீட்டை விற்று திருவிளக்கு பணியினைத் தொடர்ந்தார். அதுவும் தீர்ந்து போனதால் கடைசியில் தன் மனைவியை விற்கத் துணிந்தார்,யாரும் வாங்க முன்வரவில்லை. கடைசியில் தன் உதிரத்தால் எண்ணெய் வார்க்கலாம் என எண்ணி கையில் வாளை எடுத்து தம் கழுத்தை அரியத் தொடங்கினார் இவர்.
5.புகழ்ச் சோழ நாயனார்:
அதிகமானுடன் நடந்த போரில் வெற்றி பெற்ற சோழன் இவர். போர்க்களத்திலிருந்து கொண்டு வரப்பட்ட பகைவர்களின் தலைக் குவியலைப் பார்த்த சோழன் அதில் ஒரு தலையில் சடை இருந்ததைக் கண்டான். அது சிவனடியாராகத்தான் இருக்க வேண்டும், போரில் கொன்றுவிட்டோமே என வருந்தி, இனி என் மகனுக்கு முடிசூட்டுங்கள் எனக் கூறி, சடை உள்ள தலையை பொன் தட்டில் வைத்து தம் தலையில் அதைத் தாங்கி எரியை வலம் வந்து அந்த தீப்பிழம்புக்குள்ளே புகுந்து உயிர் விட்டான். இதே சோழனே எறிபத்த நாயனார் தம் பட்டத்து யானையை வெட்டி நின்றபோது, “ இந்த அபராதத்துக்கு இது போதாதென்றால் என் தலையையும் கொய்தருள வேண்டும்” என்று தம் வாளை உருவி நீட்டியவர்.
6.மூர்த்தி நாயனார்: கோயிலில் சந்தனக் காப்பு செய்யும் பணியினை தினந்தோறும் செய்து வந்தார்.ஒரு நாள் சமணர்களின் சூழ்ச்சியால் எங்கு தேடியும் சந்தனக் கட்டை கிடைக்கவில்லை. சந்தனக் கட்டைதானே கிடைக்காமற் போயிற்று, சந்தனம் அரைக்கும் கை இருக்கிறதே என கல்லில் கையை வைத்து தேய்க்கத் தொடங்கினார். அரைத்த போது முழங்கையிலிருந்து இரத்தம் வழிந்தது,நரம்பும் எலும்பும் வெளிப்பட்டன அப்போதும் தேய்ப்பதை நிறுத்தவில்லை.
7.அரிவாட்டாய நாயனார்: சாப்பாட்டிற்கு இல்லையென்றாலும் கூலியாக கிடைத்த நெல்லை அப்படியே கோயிலில் நிவேதனம் செய்வதற்கு அளித்துவிடுவார்.
ஒரு நாள் கூடையில் செந்நெல் அரிசியும் மாவடு செங்கீரையை சுமந்து கொண்டு கோயிலை நோக்கிச் சென்றார். வழியில் கால் தடுக்கி கீழே விழுந்தார், கூடையில் இருந்த பொருள் யாவும் சிந்தின.சிந்தியவற்றை அங்கேயே சிவன் ஏற்றுக் கொள்ள வேண்டுமென தனது கழுத்தை அரிவாளினால் வெட்டத் துணிந்தார்.  
8.மானக் கஞ்சாற நாயனார்:
மகளின் திருமண நாளன்று முனிவர் ஒருவர் மானக்கஞ்சாறர் இல்லத்திற்கு வருகிறார்.அவரை வரவேற்று தனது மகளை முனிவரை வணங்கும் படி கூற, அவரும் முனிவர் காலில் விழுகிறார்.
திருமணக் கோலத்தில்  இருந்த  மகளின் கூந்தலை பஞ்சவடிக்காக (மயிரினால் அகலமாகச் செய்யப்பட்டு மார்பில் பூணூலாகத் தரிக்கப்படும் வடம்), முனிவர் கேட்கிறார்.முனிவரது  விருப்பப்படி மகளின் கூந்தலை அரிந்து கொடுக்கிறார் மானக்கஞ்சாறர்.
9.சக்தி நாயனார்: சிவனடியார்களை இகழ்ந்து பேசுகிறவர்களின்  நாவினை கிடுக்கியைக் கொண்டு பற்றி இழுத்து வாளால் அரிந்து விடுவார். இதனாலேயே சத்தியார் எனப் பெயர் பெற்றார்.
10.கோட்புலி நாயனார்: இவர் சோழ சேனாபதியாக இருந்தவர். அரசன் வழங்கும் பொன் பொருளைக் கொண்டு நெல் வாஙகி சிவனடியார்களுக்காக திருவமுது படைத்து வந்தார். ஒரு முறை அரசரின் ஆணைக்கு ஏற்ப போர்களம் செல்ல வேண்டி வந்தது. பகைவனோ படை வலிமை உடையவன் எத்தனை காலம் போர் நிகழுமோ எனத் தெரியாது.கோட்புலியாரின் கவலையோ சிவனடியார்களுக்கு அமுது படைப்பது பற்றியே இருந்தது.செந்நெல்லை குதிர் குதிராகச் சேமித்தார்.தம் உறவினர்களை அழைத்து “எம் பெருமானுடைய திருவமுதுக்காக இந்த நெல்லை சேமித்து வைத்துள்ளேன், இதைப் பாதுகாத்து இடையூறு இன்றி வழிபாட்டை நடத்தி வாருங்கள்.இதிலிருந்து தமக்கென்று சிறிதும் எடுக்க க் கூடாது.இது சிவபெருமானின் ஆணை “ என்று சொல்லிவிட்டு போருக்கு பறப்பட்டுப் போனார்.
நாட்கள் கடந்தன, உரிய காலத்தில் மழை பெய்யவில்லை. எங்கும் பஞ்சமும் பட்டினியும் பரவியது. பலர் உணவின்றி மடிந்தனர். கோட்புலியாரின் உறவினரும் பஞ்சத்தால் நலிந்தனர். அப்போது அவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது. “கோட்புலியார் சேமித்து வைத்திருந்த நெல்லை இப்போது பயன்படுத்திக் கொண்டு உயிர் பிழைப்போம், பின்பு அந்நெல்லைக் கொடுத்து விடுவோம்” என்று முடிவு செய்தனர். கூடுகளைப் பிரித்து நெல்லை எடுத்து பயன்படுத்திக் கொண்டார்கள்.
போருக்குச் சென்ற கோட்புலியார் வெற்றியுடன் மன்னன் அளித்த பொருட்களுடன் ஊர் திரும்பினார். பஞ்சம் ஏற்பட்டதையும் தமது உறவினர்கள்  தான் அடியார்களுக்காக சேமித்து வைத்திருந்த நெல்லை பயன்படுத்திக் கொண்டனர் என்பதையும் அறிந்தார். ஊருக்குள் வந்த கோட்புலியாரை சுற்றத்தார் எதிர்கொண்டு அழைத்துச் சென்றார்கள். தம் மாளிகைக்கு வந்த பின் “ நம் சுற்றத்தார் அனைவரையும் அழையுங்கள், அவர்களுக்கு பரிசளிக்க வேண்டும்” என்றார். யாவரும் வந்த பிறகு உங்களுக்கு வானுலகம் வழங்குவதுதான் பரிசு எனக் கூறி ஒவ்வொருவராக வாளைக் கொண்டு வெட்டினார். தந்தை,தந்தை முறையில் உள்ளவர்கள், தாய், உடன் பிறந்தவர்கள்,மனைவி, அவளைச் சார்ந்தவர்கள் என வேறுபாடின்றி களையை களைவது போல வெட்டிச் சாய்த்தார். ஒரு குழந்தையை வெட்டச் சென்றபோது, “ இது குழந்தை சோறு உண்ணும் பருவம் வரவில்லை இந்த ஒரு குழந்தையாவது மிஞ்சட்டும்” என்று ஒருவன் தடுத்தான். கோட்புலியார், “இவன் சோறு உண்ணாவிட்டாலும் இறைவன் நெல்லை உண்டவளுடைய பாலைக் குடித்தவனல்லவா? இவனும் ஒழியத்தான் வேண்டும்” அந்தக் குழந்தையையும் வெட்டினார்.
11.குங்கிலியக் கலய நாயனார்:
கோயிலில் குங்கிலியத் தூபம் இடும் பணியினைச் செய்து வந்தவர் கலயர்.தனது நிலத்தை விற்று அதைக் கொண்டு தினமும் கோயிலில் தூபம் ஏற்றினார்.வீட்டில் குழந்தைகளுக்கு உணவில்லை, அவரது மனைவி தாலியைக் கழற்றி கலயரிடம் கொடுத்து அதை விற்று சாப்பாட்டிற்கு நெல் வாங்கி வரும்படி கூறினாள். நெல் வாங்காமல் தாலியைக் கொண்டு குங்கிலியம் வாங்கி கோயிலுக்கு தூபம் காட்டினார்.
12.ஏனாதி நாத நாயனார்: படைக் கலப் பயிற்சிப் பள்ளியை நடத்தி வந்தவர் ஏனாதி.இவர் இருந்த ஊரில் ஆதிசூரன் என்பவன் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி கற்பித்து வந்தான். பொறாமையினால் ஏனாதிநாதரை போருக்கு அழைத்து சண்டையிடுகிறான்.திருநீறு அணிந்திருப்பவர்களை அடியார்களாக எண்ணி வணங்குகிறவர் ஏனாதி நாதர் என்பதை அறிந்த ஆதிசூரன் திருநீறை அணிந்து சண்டைக்கு வருகிறான்.
சண்டையின் போது ஆதிசூரன் நெற்றியில் திருநீறு அணிந்திருப்பதை கண்ட ஏனாதி நாதர் அவனைக் கொல்லாது விடுகிறார். இறுதியில் ஆதிசூரனின் வாளுக்கு இரையாகிறார்.
13.இடங்கழி நாயனார்: சிவனடியார் ஒருவர் சிவத் தொண்டர்களுக்கு நாள்தோறும் அமுதளித்து வழிபடுவதை மேற்கொண்டிருந்தார்.இத் திருப் பணிக்கு போதிய பொருள் இல்லாததால் அரசருடைய களஞ்சியத்தில் நெல்லைத் திருட முயன்று காவல் காத்து நின்றவர்களால் பிடிபட்டுப் போனார். அரசர் முன் அவரை காவலாளிகள் நிறுத்தினர். ஏன் நீ நெல்லைத் திருடினாய் என்று இடங்கழி அரசர் கேட்டார். சிவனடியார்களுக்கு உணவளிப்பதற்காக திருடினேன் என்று கூறியதைக் கேட்ட அரசர் “ இவரன்றோ ஒரு நாட்டுக்கு களஞ்சியம் போன்றவர்” என்று எண்ணி அவரை விடுவித்ததோடு, அவருக்கு வேண்டிய நெல்லும் பொன்னும் கொடுத்தனுப்பினார்.  
14.இயற்பகை நாயனார்:
இவரை ‘இல்லையே எனாத இயற்பகைக்கு அடியேன்’ என சேக்கிழார் குறிப்பிடுகிறார்.
சிவனடியார் வேடம் பூண்டு,திருநீறு பொன்மேனியில் அணிந்து, சிவன் பெருமான் இயற்பகையாரின் இல்லம் வந்து சேர்கிறார். அவரை அடிபணிந்து நின்று இயற்பகையார், அடியாரின் விருப்பம் கேட்க, “ உம்மிடத்தில் உள்ள ஒரு பொருளை விரும்பி வந்தேன்” என்கிறார். அதற்கு இயற்பகையார் தன்னிடமுள்ள பொருள் எதுவானாலும் உமது உடைமை, உள்ள பொருளையே கேட்கிறீர்கள்,விரும்பிய பொருளைக் கொடுப்பேன் என்கிறார்.தன்னையும் இயற்பகையாரின் மனைவியையும்  ஊர் எல்லை வரை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்படி வேண்டுகிறார் சிவனடியார்.
இயற்பகையார் மகிழ்ந்து மனைவியை வேதியருடன் அனுப்பத் துணிகிறார்.வாளும் கேடயமும் எடுத்துக் கொண்டு,அடியாரையும் மனைவியையும் முன்னே போகச் செய்து,பின்னே அவர்கட்குப் பாதுகாப்பாகச் செல்லலானார்.
இதைக் கண்ட உறவினர்களும் ஊர் மக்களும் இயற்பகையாரின் செயலை எதிர்க்கிறார்கள். அப்படி அழைத்துச் செல்லும்போது தடுத்த உறவினர் ஊர் மக்கள் பலரைக் கொன்று ஊர் எல்லை வரை அழைத்துச் செல்கிறார்.
“நீர் இனிப் போகலாம்” என்று அடியார் சொல்ல,நாயனார் திரும்பிக் கூடப் பாராமல் வீடு திரும்பினார்.
“நீர் சிவனடியார் வேண்டுவனவற்றையெல்லாம் தருகிறீர் என்று கேள்விப்பட்டோம், உம்முடைய மனைவியை வேண்டி வந்தேன்” என்ற சிவனடியாருடன் தன் மனைவியை அனுப்பியவர்.இதைத் தடுத்த சுற்றத்தார்களை போரிட்டு வீழ்த்தி ஊர் எல்லை வரை பத்திரமாக இருவரையும் விட்டு வந்தவர்.
15.நரசிங்க முனையரைய நாயனார்:
திருவாதிரைத் திருநாளில் பெருமானின் அடியார்களுக்கு பொற்காசுகள் கொடுக்கும் பழக்கம் உடையவர் இவர். ஒருமுறை அவர் பொற்காசுகள் கொடுத்த போது, காமத்தின் பால் வயப்பட்டு மயங்கிக் கிடந்து காமக்குறிகள் வெளிப்பட தோன்றிய நிலையில் இருந்த மனிதர் ஒருவர், திருநீறு அணிந்தவராக, பொற்காசுகள் வாங்குவற்கு வந்தார். அவரது நிலையைக் கண்டு மற்றவர் எள்ளி நகையாடி,அருவறுத்து ஒதுங்கினார்கள். ஆனால் நரசிங்க முனையரையர் அவருக்கு இரண்டு மடங்கு பொற்காசுகள் கொடுத்தார். நல்லொழுக்கம் இல்லாதவர், திருநீறு அணிந்திருந்த ஒரே காரணத்தினால் இரண்டு மடங்கு பொன் கொடுத்தார்.
16.கலிக்கம்ப நாயனார்: கலிக்கம்பர் தினமும்,தனது இல்லத்திற்கு வரும் அடியார்களின் திருவடிகளை தூய்மை செய்து, நிதி அளித்து, அவர்களுக்கு அன்னம் அளிக்கும் பழக்கம் கொண்டவர்.பல நாட்களுக்கு முன்னர் அவரிடம் வேலைக்காரராக பணி செய்த ஒருவர் சிவனடியார் வேடத்தில் ஒரு நாள் கலிக்கம்ப நாயனார் இல்லத்திற்கு வந்தார்.அவர் பழைய வேலையாள் என்பதை உணர்ந்த அவரது மனைவியார், தனது கணவர் அவரது பாதங்களை கழுவதற்கு ஏதுவாக நீர் விடுவதற்கு தயங்கினார். மனைவி தயங்கியதை உணர்ந்த கலிக்கம்பர், மனைவியிடம் இருந்த நீர்ச் சொம்பினை தான் வாங்கி அடியாரின் கால்களை கழுவினார்.பின்னர் தயங்கிய மனைவியின் கைகளை வெட்டினார்.
17.அமர்நீதி நாயனார்: சிவனடியாரின் கோவணத்திற்காக மனைவி,மகன், பொன்,வெள்ளி போதாதென தன்னையும் தராசுத் தட்டில் ஏற்றியவர்.
18.இசைஞானியார் நாயனார்:சுந்தர மூர்த்தி நாயனாரின் தாயார் என்ற தகுதிக்காக நாயன்மார் பட்டியலில் சேர்க்கப் பட்டவர்.
19.சடைய நாயனார்: இவர் இசைஞானியாரின் கணவர்,சுந்தரரின் தந்தையார்.
20.சிறப்புலி நாயனார்: ஶ்ரீ பஞ்சாட்சரத்தை செபித்து வேள்விகளைச் செய்து அதன் பயனை சிவனுக்கே அற்பணித்த காரணத்தால் நாயன்மார் பட்டியலில் இடம் பெறுகிறார்.
21.நேச நாயனார்: உடையும் கோவணமும் சிவனடியார்களுக்கு நெய்து கொடுத்தவர்.
22.புகழ்த்துணை நாயனார்: வேதங்களோடு ஆகமங்களையும் கற்ற பிராமணர்.
23.முருக நாயனார்: சிவபெருமானுக்கு பூ மாலைகளை சாத்தும் பணியை மேற்கொண்டவர்.பூ மாலைகளைத் தொடுத்து இறைவனுக்கு சாத்தி திருப்பணி செய்ததால் நாயன்மார் பட்டியலில் இடம்பெற்றார்.
24.நின்ற சீர் நெடுமாற நாயனார்: கூன் பாண்டியன் என்பதே இயற்பெயர், சம்பந்தருடன் அனல் வாதம், புனல் வாத த்தில் தோற்ற சமணர்களை கழுவிலேற்றி தண்டித்த மன்னன் இவன்.இதனாலேயே நாயன்மார் பட்டியலில் இடம் பெற்றான்.
25.குலச்சிறை நாயனார்: பாண்டியனின் தலைமை அமைச்சர் இவர். திருஞான சம்பந்தரை மதுரைக்கு வரவழைத்து ஜைனர்களை அனல்வாதம் புனல்வாதத்தால்  தோற்கடிக்கச் செய்து, அவர்களை கழுவில் ஏற்றிய பெருமை இவரைச் சாரும்.
26.சோமாசி மாற நாயனார்: இவர் சோம யாகங்களை செய்து வந்ததால் சோமயாஜி என்றழைக்கப் பட்டார். சுந்தர மூர்த்தி நாயனாரின் நண்பர் என்பதால் நாயனார் பட்டியலில் இடம் பெறுகிறார்.
27.புகழ்த்துணை நாயனார்: வேதங்களோடு ஆகமங்களையும் கற்றவர், வெறெந்த சிறப்பும் கூறப்படவில்லை.
28.சிறப்புலி நாயனார்: ஶ்ரீ பஞ்சாட்சரத்தை செபித்து வேள்விகளைச் செய்து அதன் பயனை சிவனுக்கே அற்பணித்த காரணத்தால் நாயன்மார் பட்டியலில் இடம் பெறுகிறார்.
29.உருத்திர பசுபதி நாயனார்:கழுத்தளவு தண்ணீரில் நின்று யஜுர் வேத ஶ்ரீ உருத்திர மந்திரத்தை ஓதியவர்.
30.கழறிற்ற றிவார் நாயனார்: இவர் சேர மன்னன் அவ்வளவே,இவரும் ஒரு நாயன்மாராக பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளார்.
ஆதார நூல்கள்:
1.கி.வ.ஜ அவர்கள் எழுதிய “நாயன்மார் கதை” பாகம் 1 முதல் பாகம் 4 வரை,முதற்பதிப்பு 1958
2.ஆறுமுக நாவலர் எழுதிய “பெரியபுராண சூசனம்” 1881 ஆம் ஆண்டு பதிப்பு

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

ஒரு சிறு திருத்தம் - அன்பே சிவம் என்பது உண்மை, உலகில் தோன்றிய அனைத்து மதங்களும் இறுதியில் இதைத்தான் சொல்கின்றன, ஆனால் நீங்கள் சுட்டிக் காட்டுபவை அனைத்துமே இடைச் சொருகல்தான். உழைக்காமல் பிழைக்க வேண்டி ஊரை ஏமாற்ற, அவாள் வகுத்தவை.

நிலம், நிலம் சார்ந்த இனம், வாழ்வியல் கலந்த அவை கண்ட மொழி, அதன் வழி வந்த இலக்கியங்கள் - இதில் குறிப்பாக ஒப்பீட்டளவில் எதை நோக்கினும் நம் திராவிட இனம், மொழி, வாழ்க்கை முறை, இலக்கியம் இவையே உலகளவில் சிறந்தது.

மற்றவைற்றை சுட்டிக் காட்டினால் எட்டிக்காயாய் கசக்கும் என்பது மட்டுமல்ல அனாவசியமாக அவாளை பொங்க வைக்க வேண்டாம், போகட்டும் இலக்கியங்களை எடுத்துக் கொள்வோம். நெறி சார்ந்து வாழ்வியலை சொல்பவை நம் தமிழ் இலக்கியங்கள்,

அவாளோடது சூது, பொய், வஞ்சகம் நிறைந்த புரட்டுக்கதைகள்; உதாரணம், பஞ்சதந்திரம் - அடுத்தவர் அழிந்தாலும் பரவாயில்லை , ஐந்து விதமான உபாயங்க(பாவங்கள்)ளை செய்து நீ பிழைத்துக் கொள் என வழி காட்டுகிறது. இது ஒரு சிறு உதாரணம். சொல்ல மலையளவு உள்ளது. அவர்களின் அடிப்படை கட்டமைப்பே அப்படித்தான், அசிங்கம், ஆபாசம் நிறைந்தவை. காலத்திற்கேற்ப நிகழ்ந்த இழிவான இடைச் சொருகல்கள் இவை. நன்றி.