வெள்ளி, 23 ஏப்ரல், 2021

டெல்லி மருத்துவமனையில் இரண்டு மணி நேரத்துக்கு மட்டுமே ஆக்சிஜன் உள்ளது

minnambalm :மருத்துவமனையில் இரண்டு மணி நேரத்துக்கு மட்டுமே ஆக்சிஜன் உள்ளது. இது தீர்ந்துபோகும் பட்சத்தில் நோயாளிகள் உயிரிழக்கக் கூடும் என டெல்லி சாந்தி முகந்த் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் சாகர், தெரிவித்துள்ளார்.   ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி டெல்லி பாலாஜி மருத்துவமனை சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கை நேற்று(ஏப்ரல் 21) நீதிபதிகள் விபின் சங்வி, ரேகா ஆகியோர் விசாரித்தனர். அப்போது, “டெல்லியில் ஆக்சிஜன் இல்லாமல் கொரோனா நோயாளிகள் பலர் உயிருக்குப் போராடி வருகின்றனர். ஆனால் நீங்கள் (மத்திய அரசு) ஆக்சிஜன் அனுப்பாமல் சுணக்கம் காட்டுகிறீர்கள். பல உயிர்கள் கொத்து கொத்தாக மடிவதை பார்க்க விரும்புகிறீர்களா?

உங்களின் போக்கு மிகவும் அபத்தமானது. நாட்டில் மக்கள் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழக்கும்போது நீங்களோ தொழிற்சாலைகள் குறித்துக் கவலைப்படுகிறீர்கள். மக்களின் உயிர்களைப் பற்றி உங்களுக்குக் கவலையே இல்லையா?


ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தீர்க்க அனைத்து வழிகளையும் ஆராய வேண்டும். அவற்றை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். எந்த இடத்திலும் எக்காரணத்தைக் கொண்டும் சுணக்கம் காட்டவே கூடாது. எப்படியெல்லாம் ஆக்சிஜனை உற்பத்தி செய்யலாம் என்று யோசியுங்கள். ஆக்சிஜனை யாரிடமாவது பிச்சை எடுங்கள். கடன் வாங்குங்கள். கெஞ்சி கேளுங்கள். என்ன ஆனாலும் பாடுபட்டு மக்களின் உயிரைக் காப்பாற்றுங்கள். அதுவே உங்களின் தார்மீக கடமை. அதை ஒருபோதும் தட்டிக் கழிக்காதீர்கள். அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாகத் துரிதப்படுத்துங்கள்” என மத்திய அரசை நீதிபதிகள் கடுமையாக சாடினர்.

இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள சாந்தி முகந்த் மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி சுனில் சாகர் பேசுகையில், ”2 மணிநேரத்திற்கு மட்டுமே ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பதால், முடிந்தவரையில், ஓரளவு குணமடைந்த நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருக்கிற சிலிண்டர்களை ஐசியூ-வில் வைக்க முயற்சி செய்து வருகிறோம். ஆக்சிஜன் தீர்ந்துபோகும் பட்சத்தில் நோயாளிகள் உயிரிழக்கக் கூடும்” என கவலை தெரிவித்தார்.

டெல்லி மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் இருப்பு நிலவரம் குறித்த அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், டெல்லியில் ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் சில மணி நேரங்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் உள்ளது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சப்ளை கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில், அடுத்த சில மணிநேரங்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் இருப்பதாகவும், ஆக்சிஜன் சிலிண்டர்கள் இன்னும் 36 மணிநேரம் கழித்து தான் கிடைக்கும் எனவும் மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அபிமன்யு

கருத்துகள் இல்லை: