வெள்ளி, 23 ஏப்ரல், 2021

அர்விந் கெஜ்ரிவால் : டெல்லி ஆக்சிஜன் லாரிகளை.. உ.பி.யும் ஹரியானாவும் பிடித்து வைத்துக் கொள்கின்றன..

 Vigneshkumar - /tamil.oneindia.com :   டெல்லி: உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் அரசு அதிகாரிகளும் போலீசாரும் ஆக்சிஜன் லாரிகளை பிடித்து வைத்துக் கொள்வதாக மத்திய அரசுக்கு டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடிதம் எழுதியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் மிக மிக மோசமான நிலையில் உள்ளது.
கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளதால் அங்குள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
டெல்லியுள்ள சரோஜ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, டிராத் ராம் ஷா மருத்துவமனை, இங்கிலாந்து நர்சிங் ஹோம், ரதி மருத்துவமனை, சாண்டம் மருத்துவமனை,
ஹொலி ஃபேமலி மருத்துவமனை ஆகிய 6 தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அரசு கூறியுள்ளது.
அண்டை மாநிலங்கள் இந்நிலையில், டெல்லிக்கு வர வேண்டிய ஆக்சிஜன் லாரிகளை அண்டை மாநிலங்களில் தடுத்து நிறுத்தப்படுவதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியுள்ளார்.


இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், உத்தரப் பிரதேச மற்றும் ஹரியானா மாநிலங்களிலுள்ள அரசு அதிகாரிகளும் போலீசாரும் ஆக்சிஜன் லாரிகளை பிடித்து வைத்துக்கொள்கிறார்கள், இதனால் டெல்லி மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வந்து சேர்வது தாமதமாகிறது என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவித்துள்ளன. டெல்லியிலுள்ள ஆகாஷ் ஹெல்த்கேரின் டாக்டர் கே.ஏ. ஷா கூறுகையில், எங்கள் மருத்துவமனையில் 233 கொரோனா நோயாளிகள் உள்ளனர். அவர்களில் 75% பேருக்கு ஆக்சிஜன் தேவை உள்ளது. எங்களிடம் 1-1.5 மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே உள்ளது. உடனடியாக எங்களுக்கு ஆக்சிஜன் தேவை. ஆக்சிஜனை ஏற்றுக் கொண்டு வரும் லாரிகளை மற்ற மாநிலங்களே பிடித்து வைத்துக் கொள்கின்றன என அவர் தெரிவித்தார்.

முன்னதாக, தங்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு சில மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே உள்ளதால் தேவையான நடவடிக்கையை உத்தரவிடும்படி மேக்ஸ் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அனைத்து தொழிலதிபர்களும் உதவ தயாராக இருப்பார்கள் என்றும் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜனை உறுதி செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு எனவும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: