வெள்ளி, 23 ஏப்ரல், 2021

ஆக்சிஜனுக்காக ஸ்டேர்லைட்டை கைப்பற்றி ஏன் உற்பத்தி செய்யக்கூடாது? - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

ஆக்சிஜனுக்காக ஏன் ஸ்டேர்லைட்டை கைப்பற்றி உற்பத்தி செய்யக்கூடாது? - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

கலைஞர்செய்திகள் -Janani : கொரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக தினந்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் மருத்துவமனைகளில் போதிய இடம் இல்லாததும், ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்படுவதும் அதனால் மக்கள் கொத்து கொத்தாக மடிவது கடந்த நாட்களாக இந்தியாவின் குரல்களாக உள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதற்கடுத்த படியாக மத்திய அரசும் ஆக்சிஜன் தேவைக்காக ஆலையை திறக்க உத்தரவிடலாம் என்று நேற்று நீதிமன்றத்தில் கூறியிருந்தது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை இன்று தொடங்கியது.


ஏற்கெனவே நீதிபதி ரோகின்டன் நாரிமன் தலைமையிலான அமர்வு இரண்டு முறை ஆலையை திறக்க அனுமதி மறுத்து மேல் முறையீட்டு மனுவை ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் வேறு அமர்வில் இந்த புதிய மனு விசாரிக்கப்பட்டது.
ஆக்சிஜனுக்காக ஏன் ஸ்டேர்லைட்டை கைப்பற்றி உற்பத்தி செய்யக்கூடாது? - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

அப்போது, இன்று காலையே அங்கு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள். எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஆலை திறக்கப்பட்டால் 2018 ஆம் ஆண்டு போன்ற சட்ட ஒழுங்கு பிரச்னைவரும். பொதுமக்கள் ஆலைக்கு எதிரான உள்ளனர். கடந்த முறை துப்பாக்கி சூடுநடைபெற்று 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஆலை திறந்தால் மீண்டும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

அதேபோல தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு கூறியுள்ளது. ஆகவே ஆக்சிஜன் தேவைக்காக ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி தமிழகத்திற்கு தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் மற்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. பொதுமக்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர், அப்படியானால் தமிழக அரசே ஆலையை கையகப்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதற்கு தமிழக அரசு வழக்கறிஞர் தேசியப் பேரிடர் மேலாண்மை சட்டப்படி மத்திய அரசே ஆலையை கைப்பற்றி ஆக்சிஜன் தயாரிக்க முடியும் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, ஆலையைத் திறப்பது குறித்து திங்கட்கிழமைக்குள் (ஏப்.,26) தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்

கருத்துகள் இல்லை: