செவ்வாய், 20 ஏப்ரல், 2021

டெஸ்லா மின்சார கார் தீப்பற்றி இருவர் உயிரிழப்பு! பேட்டரி வெடித்து கட்டுக்கடங்காத தீ ..4 மணித்தியாலங்களாக எரிந்த கார்

BBC tamil : அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆளில்லா டிரைவர் ரக டெஸ்லா கார் வேகமாக மரத்தின் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதில் இருந்த இரண்டு பேரும் பலியாகினர். கடந்த சனிக்கிழமை இரவு நடந்த இச்சம்பவத்தின் மேலதிக தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. 2019ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட அந்த டெஸ்லா எஸ் ரக கார், ஸ்பிரிங் நகர சாலையின் வளைவில் மிக வேகமாக சென்றபோது தானியங்கியாக கட்டுப்பாட்டுக்கு வர இயலாமல் மரத்தில் மோதியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த 50 வயதுகளில் இருந்த முன் பக்கத்தில் அமர்ந்தவரும் பின் பக்கத்தில் அமர்ந்திருந்தவரும் பலியானார்கள். நடந்த சம்பவம் தொடர்பாக டெஸ்லா நிறுவனத்திடம் கருத்து கேட்க பிபிசி முயன்றபோதும் அந்நிறுவனம் எந்த பதிலையும் தரவில்லை.

காவல்துறைக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, மரத்தின் மீது கார் மோதியபோது அதில் ஓட்டுநர் இருக்கையில் யாரும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது என்று ஹாரிஸ் கவுன்டி காவலர் மார்க் ஹெர்மன் கூறினார். இந்த வழக்கு தொடர்து விசாரணையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நடந்த விபத்துக்கு காரின் தானியங்கி பைலட் இயக்கியான ஆட்டோபைலட் மோட் செயலிழந்ததுதான் காரணமா என்பது இன்னும் தெளிவற்று உள்ளது.

பிபிசி வர்த்தக செய்தியாளர் தியோ லெக்கெட் என்ன கூறுகிறார்?

டெஸ்லாவின் ஆட்டோபைலட் வசதி, பகுதியளவு சுயாதீனமாக முடிவெடுத்து காரை இயக்கக்கூடியது. ஆனால், அதன் இயக்கம் குறிப்பிட்ட வரம்புக்கு உட்பட்டது. அந்த ரக காரின் மிகவும் நவீனமயமான ரகம், முழுமையாக தானியங்கியாக இயங்கக் கூடிய கார் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படவிருக்கிறது.

ஆனால், உண்மையில் இதுபோன்ற தயாரிப்பை, அதாவது முழுமையான தானியங்கி கார் ரகத்தை நீங்களோ நானோ புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இன்னும் எந்த நிறுவனமும் வழங்கவில்லை.

தானியங்கி என அழைக்கப்படும் கார்களில் சென்றாலும் அதன் பயணத்தின்போது உள்ளே இருப்பவர் எப்போதும் முழு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று டெஸ்லா நிறுவனமே கூறியுள்ளது. மேலும், எப்போதும் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை பெறும் வகையில் அதில் பயணம் செய்பவர் இருக்க வேண்டும் என்று டெஸ்லா வலியுறுத்துகிறது.

இந்த நிலையில், பிரிட்டன் கார் பாதுகாப்பு குழுவான தாட்சம், ஓட்டுநர் உதவி சேவை என்ற டெஸ்லாவின் தானியங்கி கார் இயக்க வரிகள், தவறாக வழிநடத்தக்கூடியவையாக உள்ளன என்றும் அவைதான் இதுபோன்ற அபாயகரமான செயல்பாடுகளில் வாகனத்தில் இருப்பவர்கள் செய்வதற்கு தூண்டுகின்றன என்றும் குற்றம்சாட்டுகிறது.

ஆட்டோபைலட் சேவை உள்ளடக்கியது மற்றும் முற்றிலும் தானியங்கியாக செயல்படக்கூடியது போன்ற வார்த்தைகளை தனது வசதிகளில் இடம்பெறச் செய்வதற்கு ஜெர்மன் நாடு ஏற்கெனவே தடை விதித்துள்ளது.

டெஸ்லா நிறுவனரான ஈலோன் மஸ்க், ஏற்கெனவே தமது நீண்ட நாள் கனவான முழுமையாக தானியங்கியாக செயல்படும் கார்களை இந்த ஆண்டு சந்தையில் அறிமுகப்படுத்துவதாக கூறியிருந்தார். இதேவேளை, கடந்த மாதம் அவரது நிறுவன வாகனங்களின் 27 விபத்துகள் தொடர்பான விசாரணையை அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் தொடங்கியது.

இதற்கிடையே, கடந்த திங்கட்கிழமை மற்றொரு சம்பவத்தில் டெஸ்லா காரை வாங்கிய ஒரு வாடிக்கையாளர், ஷாங்காய் ஆட்டோ கண்காட்சியில் தனது காரின் மேற்புறமாக நின்று கொண்டு, எனது கார் பிரேக் கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகக் கூறி தானியங்கி காரின் சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரது கவனத்தை ஈர்த்தார்.

டெஸ்லாவின் எஸ் ரக கார்களில் சில ஏற்கெனவே தீப்பிடித்த சர்ச்சையில் சிக்கியுள்ளன. 2018ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் தொலைக்காட்சி இயக்குநர் மிஷெல் மோரிஸ், கார் தீ விபத்தில் கருதினார். அதற்கு முன்னதாக 2016இல் அதேபோன்றதொரு சம்பவம் நடந்தது. 2013ஆம் ஆண்டிலும் இதே எஸ் ரக கார்கள் சில தீ விபத்துக்குள்ளானதும் டெஸ்லா தானியங்கி கார் தயாரிப்பு வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.

கருத்துகள் இல்லை: