செவ்வாய், 14 ஜூலை, 2020

கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் நிறுத்தம்!

 மின்னம்பலம் : கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்திலிருந்து கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ஒரு குறுஞ்செய்தியை அனைத்து மாவட்ட மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் அனுப்பியுள்ளார். அதில் தமிழகத்தில் உள்ள மாநில தலைமை கூட்டுறவு வங்கி, 23 மத்திய கூட்டுறவு வங்கிகள், 128 நகர கூட்டுறவு வங்கிகள், 4250 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் நகை கடன் வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பொதுமக்கள் வருமானமின்றி தவித்து வரும் சூழலில், அடகு கடைகளை விட குறைந்த வட்டி என்பதால் கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்து பணம் பெற்று அன்றாட செலவுகளை கவனித்து வருகின்றனர். இவ்வாறான ஒரு அறிவிப்பு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சம்மேளனம் இன்று (ஜூலை 14) வெளியிட்ட அறிக்கையில், “ஊரடங்கால் மக்களும் வேலையின்றி, வருமானம் இழந்து உள்ளனர். இந்த நிலையில் வீட்டிலிருக்கும் நகைகளைக் கொண்டு நகைக் கடன் பெற்று தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க பொதுமக்கள் முயன்று வருகின்றனர். இந்த நேரத்தில் எந்த காரணமும் கூறாமல், மீண்டும் நகைக்கடன் எப்போது வழங்கப்படும் என்றும் தெரிவிக்காமல் இருப்பது வாடிக்கையாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் அதிர்ச்சிகரமாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலினால் கிளைகளில் வாடிக்கையாளர்களுக்கு தகுந்த பதிலையோ அல்லது எப்போது வந்து நகைக்கடன் பெற்றுக்கொள்ளலாம் என்ற பதிலையோ கூற முடியாத நிலை ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் வாடிக்கையாளர்களின் கோபத்தை வங்கி ஊழியர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளதோடு,
வாடிக்கையாளர் மற்றும் வங்கியாளர் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் நகைக்கடன் நிறுத்தியதற்கான காரணங்களை விளக்க வேண்டும், நகைக்கடன் எப்போது வழங்கப்படும் என்ற தகவலையும் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்களை நிறுத்தி வைத்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. கொரானா பாதிப்பினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை, எளிய , நடுத்தர மக்கள் அன்றாட வாழ்வை நகர்த்துவதற்கு ஓரளவுக்கு உதவியாக இருந்த நகைக்கடனையும் நிறுத்தி வைப்பது மனசாட்சியற்ற செயலாகும். எனவே, இப்படியோர் உத்தரவு பிறப்பித்திருந்தால், பழனிசாமி அரசு அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
எழில்

கருத்துகள் இல்லை: