வியாழன், 16 ஜூலை, 2020

அடித்து உதைத்த போலீஸ்... பூச்சி மருந்தை குடித்த ஏழை தம்பதி... வீடியோ

nakkeeran : மத்திய பிரதேச மாநிலத்தின் குணா மாவட்ட புறநகர்ப்பகுதியில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாகக்கூறி ஒரு தம்பதியை போலீஸார் அடித்து இழுத்துச்செல்லும் காட்சிகள் இணையத்தில் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் குணா மாவட்ட புறநகர்ப்பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஒரு குடும்பத்தினர் அபகரித்துள்ளதாக அம்மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் அங்கு சென்றபோது, உண்மையான நில ஆக்கிரமிப்பாளரான கப்பு பரிதி என்ற நபர் சம்பவ இடத்திலிருந்து தலைமறைவானார். ஆனால், அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் போலீஸார், அப்பகுதியிலிருந்த ராம்குமார் ஆஹிர்வார் (38), சாவித்ரி தேவி (35) ஆகியோர் கடுமையாக தாக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ஒருபுறமும் போலீஸார் அவர்களைத் தாக்கும்போது, மறுபுறம் அதனைப் பார்த்த அவர்களது குழந்தைகள் கதறி அழுத காட்சி இணையத்தில் பரவியது. இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போலீஸார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அடக்குமுறையைப் பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் கடுமையாக விமர்சித்தனர்.


இந்நிலையில் போலீஸாரால் தாக்கப்பட்ட அந்த குடும்பத்தினர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர், இவர்கள் தற்போது மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாகியுள்ள சூழலில், குணா மாவட்ட ஆட்சியர், ஐஜி, எஸ்பி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரணை  மேற்கொள்ள உயர்மட்ட விசாரணைக்குழு ஒன்றை அமைத்துள்ளார் அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான்.

கருத்துகள் இல்லை: