சனி, 18 ஜூலை, 2020

கறுப்பர் கூட்டத்துக்கு ஆதரவா?: திமுக விளக்கம்!

 மின்னம்பலம் :  முருகனை இழித்துப் பழித்துப் பேசிய கறுப்பர் கூட்டத்துக்கு திமுக சட்ட ரீதியான ஆதரவு அளிக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பெயரில் போலி ட்விட்டர் வெளியிட்டிருக்கிறார்கள் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இன்று (ஜூலை 18) திமுக தலைமையகமான அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி,
“திமுக மீதும் தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் அவதூறான பிரச்சாரங்களை செய்ய திட்டமிட்டு ஒரு கூட்டம் அண்மைக் காலமாக செயல்பட்டு வருகிறது. ஸ்டாலினுக்கு நாளுக்கு நாள் பெருகி வரும் பேராதரவை தாங்கிக் கொள்ளமுடியாத அவ்வயிற்றெரிச்சல் காரர்கள் இப்படிப்பட்ட விஷமத்தனமான பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
அதில் ஸ்டாலின் பெயரில் போலி ட்விட்டர் கணக்கைத் தயாரித்து அதன் மூலமாக, ‘முருகனை இழிவுபடுத்திப் பேசியிருக்கிற கறுப்பர் கூட்டத்துக்கு சட்ட ரீதியாக திமுக ஆதரவு தெரிவிக்கும்’ என்று போலியான பொய்யான பித்தலாட்ட செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள்.

இதேபோல ஏற்கனவே செயல்பட்டவர்கள் மீது சைபர் க்ரைம் பிரிவில் புகார் கொடுத்தேன். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. முருகரை பழித்துப் பேசியது கண்டிக்கத் தக்கது என்பதை திமுக உள்ளிட்ட பல கட்சியினரும் கூறியிருக்கிறார்கள். எங்கள் முதன்மைச் செயலாளர் கே.என். நேரு அறிக்கையே வெளியிட்டார்
தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் இந்துக்களாக இருந்தாலும் சரி இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி, எல்லாரும் திமுகவின் பின்னால் இருப்பதாக மத்திய உளவுப் பிரிவு மூலம் அறிந்து கொண்டு அற்பத் தனமான செயல்களை செய்து வருகிறார்கள்” என்று குறிப்பிட்ட ஆர்.எஸ்.பாரதி மேலும்,
“ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அண்ணாவின் கொள்கையின் அடிப்படையில் 70 ஆண்டு காலமாக திமுக செயல்பட்டு வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன்தான் கும்பகோணம் மகாமகம் நடத்தினோம் என்று சிறியவர்களுக்குத் தெரியாது, ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர் கலைஞர். மயிலாப்பூர் குளத்தை தலைப்பாகை கட்டிக் கொண்டு தூர்வாரியவர் கலைஞர்.
இதெல்லாம் தெரியாத குள்ள நரிக் கூட்டம் தமிழகத்துக்குள் குறுக்கு வழியில் உள்ளே நுழைய பார்க்கிறார்கள். திமுகவில் இருக்கும் ஒன்றரை கோடி உறுப்பினர்களில் ஒரு கோடி பேர் இந்துக்கள். இதையெல்லாம் தெரிந்தும் சிலர் திமுக மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்கள். இந்த போலி ட்விட்டர் பற்றி நாளை மறுநாள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க இருக்கிறோம். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றம் செல்வோம்” என்று கூறினார் ஆர்.எஸ்.பாரதி.
-வேந்தன்

கருத்துகள் இல்லை: