செவ்வாய், 14 ஜூலை, 2020

வைரமுத்துவும் திராவிட இயக்க எதிர்ப்பாளர்களும்

சாவித்திரி கண்ணன் : பார்ப்பனிய குசும்பு எப்படியெல்லாம் வெளிப்படுகிறது பாருங்கள்!
இந்து தமிழ் திசையில் வைரமுத்து குறித்த புகழ் கட்டுரைகள்
பெண்ணியவாதிகளை கொந்தளிக்க வைத்திருப்பதை புரிந்து கொள்ளமுடிகிறது! அதில் இருக்கும் அறச்சீற்றத்திற்கு தலை வணங்குகிறேன்!
ஆனால்,மாலன் நாராயணனும்,காலச்சுவடு கண்ணனும் செய்யும் குசும்பு இருக்கிறதே! அந்த வைரமுத்து எதிர்ப்பு பதிவுகளுக்குள் நுழைந்து பின்னூட்டம் இட்டும்,அந்தப் பதிவுகளை தங்கள் முகநூல் பக்கங்களில் பகிர்ந்தும், முடிவில் இந்து நிர்வாகத்தையே ’’வைரமுத்து பற்றிய சிறப்பு பகுதி வெளியிட்டது பெரும் பிழை,இதை நேர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ பதிவிடச் செய்து அதை தங்கள் முகநூல் பக்கத்தில் வெளியிட்டும் அலப்பறை செய்வதற்கு என்ன காரணம்?
வைரமுத்துவின் திராவிட இயக்க சார்பு அரசியல் தானே உங்களை கொந்தளிக்கச் செய்கிறது?

மாலனை கடந்த முப்பது ஆண்டுகளாக அறிந்தவன் என்ற முறையில் கேட்கிறேன்.பெண்கள் விஷயத்தில் வைரமுத்து நடந்து கொண்டது குறித்து அறச் சீற்றம் கொள்ள தனக்குத் தகுதி இருக்கிறதா? என மாலன் தன் மனசாட்சியைத் தொட்டுக் கேட்டுக் கொள்ளட்டும்.
வைரமுத்துவின் பாலியல் சீண்டல் தான் உங்கள் கோபத்திற்கு காரணம் என்றால்,அந்தக் கோபம் ஏன் அது போன்ற பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் மற்ற உங்களவாக்களான பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், இசை மேதைகள் போன்றோர் மீது வரவில்லை? நான் பட்டியல் தரட்டுமா? தாங்குவீர்களா? எவ்வளவு விவகாரங்களைக் கமுக்கமாக அமுக்கிவந்திருக்கிறீர்கள்…!
அவ்வளவு ஏன்? ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் சொல்கிறேன்.
சங்கராச்சாரியார்களான ஜெயேந்திர சரஸ்வதியும், விஜயேந்திரரும் தங்கள் துறவுக்கு புறம்பாக பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டது குறித்து உங்களுக்கெல்லாம் ஏன் அறச் சீற்றம் வரவில்லை?
கொலை குற்றத்தில் கைதாகி,சிறை சென்று, ’அரசியல் லாபி’ செய்து வெளிவந்த ஜெயேந்திரரிடம் இந்து தமிழ்திசை உள்ளிட்ட பிராமணப் பத்திரிகைகள் அனைத்துமே பண்டிகைகளின் போது அருளாசி உரைகளை வாங்கி போட்ட போதெல்லாம் நீங்கள் அமைதி காத்தீர்களே… எப்படி?
ஒரு கொலைகுற்றவாளியை, ஊர்,உலகறிந்த காமச் சாமியாரை மீண்டும் புனிதராக எந்த கூச்சமும் இல்லாமல் அங்கீகரிக்கும் ஒரு சமுதாயத்தில் வாய்ப் பொத்தி அமைதிகாத்துக் கொண்டு வைரமுத்து மீது கல்லெறிகிறீர்களே..இது எப்படி ஐயா உங்களால் மட்டும் முடிகிறது.
எந்த ஒரு குற்றம் செய்தவரையும் பிராமணர் என்றால் ஒரு அளவுகோலும், பிராமணர் அல்லாதார் என்றால் ஒரு அளவுகோலும் வைத்துப் பார்க்கும் மனு நீதி தர்மத்தை இன்னும் கூட சூட்சுமமாக செய்கிறீர்களே…? இது நியாயமா?
நீங்கள் பேசும் மனிதநேயம், எழுதும் இலக்கியம்,இயங்கும் தளம் என எல்லாவற்றிலும் பிராமண சமூக நன்மையையே உள்ளீடாகக் கொண்டு இயங்கும் நுட்பமான சாதியவாதிகளாகவும், ஆனால்,வெளித் தோற்றத்திற்கு பொதுமனிதர்களைப் போலவும் நடித்தாலும்,அவ்வப்போது இப்படி வெளிப்படத் தான் செய்கிறீர்கள்!
அடுத்ததாகச் ஜெயமோகன்! இவர் எழுதிய அறம்,இன்றைய காந்தி ஆகிய நூல்களை கொண்டாடியவன் நான்! இவ்வளவு உயர்வான விஷயங்களை பேசவும்,எழுதவும் திறனுள்ள இவர் தன்னை ஒரு அதிகார மையமாக நிலை நிறுத்திக் கொள்ள பார்ப்பனர்களின் நலம் விரும்பியாக சூசகமாக இயங்குகிறார் என்பதே என் வருத்தம்!
இந்து தமிழ் திசையை பிஸ்கட்டிற்கு வாலாட்டும் நாய்கள் என்றும்,பத்திரிகையாளர்கள் ஆசைத் தம்பியையும்,செல்வபுவியரசனையும் மொண்ணைகள் என்றும் பாய்ந்து கடித்து குதறியுள்ளார். நாடறிந்த ஒரு மிகப் பெரிய இலக்கியவாதி பொதுதளத்தில் தன்னை நிதானமிழந்து இப்படி வெளிப்படுத்தும் அளவுக்கு என்ன நடந்துவிட்டது…?
வைரமுத்து எவ்வளவுக்கெவ்வளவு இகழ்வதற்கான காரணங்களை கொண்டுள்ளவரோ, அவ்வளவுக்கு புகழ்பாடவும் தகுதிவாய்ந்த படைப்பாளி தான்! இந்து தமிழ்திசை வைரமுத்துவின் பாலியல் சீண்டல்களை நியாயப்படுத்தி ஒன்றும் எழுதிவிடவில்லை, நீங்கள் கொந்தளிப்பதற்கு? வைரமுத்துவை சற்றே மிகைப்படுத்தி எழுதிவிட்டார்கள். அவ்வளவு தான்!
ஜெயமோகனுக்கு திராவிட இயக்கத்தின் மீதான வன்மம் வைரமுத்துவின் மீதான வன்மமாக மாறிவிட்டது.
நல்ல எழுத்தாளர்களான ஜெயமோகனும், மாலனும், சிறந்த நூல்களைக் பதிப்பித்து கொண்டு வந்திருக்கும் கண்ணனும் திராவிட இயக்க எதிர்ப்பு என்ற ஒற்றை பரிமாணச் சிறையில் உங்களை நீங்களே ஏன் அடைத்துக் கொள்கிறீர்கள்?
வைரமுத்துவும்,திராவிடர் இயக்கமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனித பிம்பங்களல்ல!
பலம்,பலவீனம் இரண்டையும் கொண்டவர்களே! உலகில் யாரும் அல்லது எந்த ஒன்றும் முற்றிலும் வெறுக்கதக்கதல்ல! அப்படி ஒன்றுகூட கிடையாது.
ஒன்றின் பலவீனத்தை மட்டுமே பிரதானப்படுத்தி, பாசிடிவ்வான அம்சத்தை முற்றிலும் புறக்கணிப்பது நியாயமல்ல, போரிடுவதற்கும் ,எதிரியோடு மோதுவதற்கும் கூட ஒரு போர்க்கள தர்மம் என்று ஒன்று உண்டு தானே!
சரி,அதைவிடுங்கள்! குறைந்தபட்ச மானுட தர்மத்தையாவது பின்பற்றுங்கள்!
சாவித்திரி கண்ணன்
பத்திரிகையாளர்

கருத்துகள் இல்லை: