வியாழன், 16 ஜூலை, 2020

அடுத்த ஆண்டு முதல் 5ஜி சேவை: முகேஷ் அம்பானி

அடுத்த ஆண்டு முதல் 5ஜி சேவை: முகேஷ் அம்பானிமின்னம்பலம் : இந்தியாவில் அடுத்த ஆண்டு முதல் 5ஜி சேவை தொடங்கும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் 43ஆவது வருடாந்திர பொதுக் குழுக் கூட்டம் (ஏஜிஎம்) நேற்று (ஜூலை 15) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஓடிடி தளமான ஜியோ டிவி+ அறிமுகப்படுத்தப்பட்டது. அதை முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, மகன் ஆகாஷ் அம்பானி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
இறுதியாக பங்குதாரர்களுடன் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் உரையாற்றிய நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

“ஜியோ புதிதாக ஒரு முழுமையான 5ஜி தீர்வை உருவாக்கியுள்ளது. இது இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த 5ஜி சேவையைத் தொடங்க உதவும். அடுத்த ஆண்டு முதல் 5ஜி சேவை தொடங்கும். 5ஜி அலைக்கற்றைக் கிடைத்தவுடன் சோதனை அடிப்படையில் ஒரு சில நகரங்களில் சேவை தொடங்கப்படும். மற்ற தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கும், 5ஜி உதவிகளை ஜியோ செய்து தரும். இந்தியாவிலிருந்து 2ஜி சேவையை முற்றிலும் நீக்கி, புதிய தொழில்நுட்பத்தை அனைவருக்கும் வழங்குவோம்” என்று தெரிவித்தார்.
ஏற்கனவே ஃபேஸ்புக் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் ஜியோ பிளாட்ஃபார்ம்களில் முதலீடு செய்துள்ள நிலையில், “7.7 சதவிகிதப் பங்குகளில் கூகுள் நிறுவனம் 33,737 கோடி ரூபாய் முதலீடு செய்யும்” என்ற முக்கிய அறிவிப்பினையும் வெளியிட்டார். மேலும், தொடக்க நிலை ஸ்மார்ட்போன்களை இந்தக் கூட்டணி உருவாக்கும் எனவும், தற்போது இருக்கும் 4ஜி அல்லது 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலையில் ஒரு பங்குதான் அவை இருக்கும் என்றும் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, “ஜியோ நிறுவனத்துடன் இணைந்திருப்பது மிகவும் பெருமை அளிக்கிறது. இணையதளம் என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். ஜியோ உடனான ஒப்பந்தத்தின் மூலம், லட்சக்கணக்கான இந்தியர்கள் ஸ்மார்ட்போன் சேவையைப் பயன்படுத்தப் போகின்றனர்” என்று கூறினார்.
எழில்

கருத்துகள் இல்லை: