வியாழன், 25 ஜூன், 2020

திருக்குறள் முதன் முதலில் ஆங்கிலேயர்களால் தான் பதிப்பிக்கப்பட்டது.

முதலில்வெளிவந்த திருக்குறள்
Vicky Kannan : திருக்குறள் முதல் பதிப்பு!
திருக்குறள் என்பதே ஆங்கிலேயர்களால் தான் பதிப்பிக்கப்பட்டது.
ஆங்கிலேயர்கள் தான் திருக்குறளை படித்து அதன் அருமை பெருமைகளை வெளியுலகிற்கு கொண்டு வந்தனர் எனும் பிம்பம் இக்காலத்தில் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது என்பதை காண முடிகிறது. ஆனால் உண்மை என்ன? திருக்குறள் ஏற்கனவே நேரடியாக சைவ சித்தாந்த சாத்திர நூல்களிலும் , திருமுறைகளிலும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது என்பதை சில நாட்களுக்கு முன்பு விரிவாக ஒரு கட்டுரையில் பதிவிட்டிருந்தோம். (படிக்காதோர் மறுமொழியில் பார்க்க)
ஆங்கிலேயரான மதிப்பிற்குரிய எல்லீஸ் அவர்கள் திருக்குறளினை படித்து, வியந்து அதனை அச்சுக்கு கொண்டு வந்தார் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் செய்தி. ஆனால் அவர் 13 அதிகாரங்களுக்கு மட்டுமே உரையெழுதியிருந்தார். மீதமுள்ளவைகளை திரு இரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் எழுதி அதனை வெளியிட்டது வெகுபிற்காலம்.
திருக்குறளின் மூலப்பதிப்பு எது என தேடினால் கிடைத்தது 1812இல் மாசதினச்சரிதை அச்சுக்கூடத்தால் (இது தான் தமிழகத்தின் முதல் இதழ்) பதிப்பிக்கப்பட்டது தான். பதிப்பித்தவர் யாரென பார்த்தால் தஞ்சை நகர மலையப்ப பிள்ளை குமாரன் ஞானப்பிறகாசர் அவர்கள் தான்.
இதுகுறித்து தினமணியில் வெளியான செய்தியின் சுட்டியினை மறுமொழியில் இணைத்துள்ளேன்.
"திருக்குறளின் மூலப் பதிப்புகளுள் தமிழில் மிகத் தொன்மையான பதிப்பாக இன்று நமக்குக் கிடைப்பது கி.பி. 1812-இல் வெளியான “திருக்குறள் மூலபாடம்” என்னும் தலைப்பில் அமைந்த நூலாகும்.
’இலக்கண இலக்கிய ஆராய்ச்சியுடையவர் கலிகிதப் பிழையற வரலாற்று சுத்த பாடமாக்கப்பட்டது’ என்னும் குறிப்புடனும் ‘தொண்ட மண்டலம் சென்னைப் பட்டினத்தில் தஞ்சை நகரம், மலையப்ப பிள்ளை குமாரன் ஞானப்பிறகாசனால் அச்சிற் பதிக்கப்பட்டது – மாசத் தினசரி அச்சுக்கூடம்.
இ.ஆண்டு சரஅளயவு ( 1812 எனத் தமிழ் எண்ணில் தரப்பட்டுள்ளது ) என்னும் குறிப்புடனும் தலைப்புப்பக்கம் திகழ்கின்றது. இந்நூலுடன் நாலடியார் மூலபாடமும், திருவள்ளுவமாலை மூலபாடமும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளன.
மரவெழுத்தால் அச்சடிக்கப்பட்டுள்ள இப்பதிப்பே திருக்குறள் பதிப்பு வரலாற்றில் முதல் நூலாகத் திகழ்கின்றது. தமிழகத்தில் முதன் முதலாக கி.பி. 1712-இல் தரங்கம்பாடியில் முதல் அச்சுக்கூடம் ஏற்பட்டது. எனவே, அச்சுக்கூடம் ஏற்பட்டுச் சரியாக ஒரு நூற்றாண்டிற்குப் பின்னர் இப்பதிப்பு நமக்குக் கிடைத்துள்ளது. சரியாக 208 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இப்பதிப்பில் காணப்படும் சில அரிய குறிப்புகள் மூலபாட ஆய்வியல் ( TEXUAL CRITICISM ) பற்றிய சிறந்த கருத்துக்களாக அமைகின்றன.
1812-இல் தோன்றிய ‘திருக்குறள் மூலபாடம்’ என்னும் இம்முதல் பதிப்பின் பதிப்புரையில் மேற்கண்ட மூலபாட ஆய்வியல் இலக்கணக் கூறுகளுள் சில விதந்து கூறப்படுவது பெரிதும் எண்ணத் தக்கத்தாகும். ‘வரலாறு’ என்னும் தலைப்பில் அந்நூல் தரும் செய்தி பின்வருமாறு.
‘கற்றுணர்ந்த தமிழாசிரியர்களருமையினியற்றிய இலக்கண இலக்கியங்களாகிய அரிய நூல்களெல்லாம் – இந்நாட்டில் அச்சிற் பதிக்கும் பயிற்சியின்றிக் கையினாலெழுதிக் கொண்டு வருவதில் – எழுத்துக்கள் குறைந்தும் – மிகுந்தும் – மாறியும் சொற்கடிரிந்தும் – பொருள் வேறுபட்டும் பாடத்துக்குப் பாடம் ஒவ்வாது பிழைகள் மிகுதியுமுண்டாகின்றவால் – அவ்வாறு பிழைகளின்றிச் சுத்த பாடமாக நிலைக்கும்படி – அச்சிற் பதித்தலை வழங்குவிப்பதற்கு உத்தேசித்து – நூலாசிரியர்களுள் தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனார் அருளிச் செய்த – அறம் பொருள் இன்பம் என்னும் முப்பாலையும் நுட்பமாக விளங்கவுணர்த்துந் திருக்குறள் மூலபாடமும் – முனிவர்களருளிச் செய்த நீதி நூலாகிய நாலடி மூலபாடமும் இப்போது அச்சிற் பதிக்கப்பட்டன'.
இக்குறிப்பினால் ஏறத்தாழ 208 ஆண்டுகளுக்கு முன் தமிழிலக்கியங்கள் அச்சுப்பெறாதிருந்த நிலையினால் ஏற்படும் குறைகளையும் மூல பாடங்கள் வேறுபடுவதகான காரணங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது.
இந்நூலின் அச்சிற்பதிப்பதற்கு முன் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை அடுத்த பகுதி எடுத்துரைக்கும். “ இவை அச்சிற்பதிக்கு முன்னர் தென்னாட்டில் பரம்பரை ஆதீனங்களிலும் வித்வ செனங்களிடத்திலுமுள்ள சுத்த பாடங்கள் பலவற்றிற்கும் இணங்கப் பிழையற இலக்கண இலக்கிய ஆராய்ச்சியுடையவர்களால் ஆராய்ந்து சுத்த பாடமாக்கப்பட்டது என்னும் குறிப்பு திருக்குறளின் அனைத்துச் சுவடிகளையும் தொகுத்துப் பார்த்த செய்தியை அறிவிக்கும். சுத்த பாடங்களைத் தீர்மானிப்பதற்குத் தனி ஒருவரின் முயற்சி பெரிதும் பயன் தராது; எனவே அறிஞர் குழு கூடி முடிவெடுத்தமையும், அவ்வாறு எடுத்த முடிவையும் பல்வேறு அறிஞர்களுக்கு அன்னுப்பி கருத்துரை பெற்றதையும் முதல் பதிப்பின் வரலாறு நமக்குக் காட்டுகின்றது.
“இஃதுண்மை பெற – திருப்பாசூர் முத்துசாமிப் பிள்ளை, திருநெல்வேலிச் சீமை – அதிகாரி – ம. இராமசாமி நாயக்கர் முன்னிலையி லன்னாட்டி, இருந் தழைப்பித்த சுத்த பாடங்களுட னெழுதி வந்த வரலாறு. இந்தப் பொத்தகத்திலெழுதிய தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயனார் அருளிச் செய்த திருக்குறள் மூலபாடமும் - நாலடியார் மூலபாடமும் திருவள்ளூவ மாலையும்- ஆக – மூன்று சுவடியும் வெகு மூல பாடங்கள் உரை பாடங்களாதற்குக் கருவியாக வேண்டும் – இலக்கண இலகியங்களெல்லாம் வைத்துப் பரிசோதித்துப் பாடந்தீர்மானஞ் செய்து – ஓரெழுத்து – ஓர்சொல் – நூதனமாகக் கூட்டாமற் குறையாமல் அநேக மூல பாடங்களுரைப் பாடங்களுங் கிணங்கனிதாகத் தீர்மானம் பண்ணிய சுத்தப் பாடம் பார்த்தெழுதிச் சரவை ( பிழை )பார்த்த பாடமாகையாலும் – அந்தப்படி தீர்மானம் பண்ணி எழுதின பாடமென்பதும் – இவடங்களவிருக்குந் தமிழாராய்ச்சியுடைய மகாவித்துவ செனங்களாற் பார்க்கும்போது மவர்கள் கருத்திற்றோன்றப்படும் – ஆகையாலும் பாடங்களிலெவ்வளவேனுஞ் சந்தேகப்பட வேண்டுவதனன்று – இப்படிக்கு திருநெல்வேலி அம்பலவாணக் கவிராயர்.”
ஆகவே எல்லீஸ் அவர்கள் திருக்குறளை படித்து வியந்து அதற்கு உரையெழுத துணிந்தார் என்பதும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முயற்சித்தார் என்பதும் மறுக்கவியலாத உண்மை. அவரது கல்லறையே அதற்கு சாட்சி. ஆனால் திருக்குறள் அதற்கு முன்பே பல நூற்றாண்டுகளாக சைவ ஆதினங்களின் மூலம் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை இதன்மூலம் அறியமுடிகிறது.

கருத்துகள் இல்லை: