திங்கள், 22 ஜூன், 2020

சட்டப் போராட்டம் தொடரும்: கௌசல்யா

சட்டப் போராட்டம் தொடரும்: கௌசல்யாமின்னம்பலம் : உச்ச நீதிமன்றத்தில் தனது சட்டப்போராட்டத்தைத் தொடர்வேன் என கௌசல்யா தெரிவித்துள்ளார்.
சாதி மறுப்புத் திருமணம் செய்ததற்காக உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூன் 22) தீர்ப்பளித்தது. அதில் முதல் குற்றவாளியான கௌசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டார்.
5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டும் தீர்ப்பு வழங்கப்பட்டது. கௌசல்யாவின் தாயார் அன்னலட்சுமி உள்ளிட்ட 3 பேரின் விடுதலைக்கு எதிரான காவல் துறையின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் அறிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஒருசேர அளிப்பதாக தெரிவித்துள்ள கவுசல்யா, “முதலில் இவ்வளவு அவசரமாக இந்தக் கொரோனா காலத்தில் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டுமா... சமூகம் பெரும்பாலும் முடங்கியுள்ள சூழலில் இந்தத் தீர்ப்பை வழங்கியிருப்பது எனக்குள் பல கேள்விகளை எழுப்புகிறது. அதேபோல தமிழக அரசு இந்த வழக்கைப் போதிய முனைப்போடும் அக்கறையோடும் நடத்தியிருக்கலாம்” என்று தனது முகநூல் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து, “திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றதற்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றதற்கும் இந்த இரண்டு காலங்களில் என்னோடு அரசு தரப்பு கொண்டிருந்த தொடர்புக்கும் பெருத்த வேறுபாட்டை உணர்கிறேன். ஆனால் இன்னும் நீதிமன்றத்தின் மீது நான் நம்பிக்கையை இழந்துவிடவில்லை. எனது சட்டப் போராட்டத்தைத் தொடருவேன். உச்சநீதிமன்றத்திற்கு இந்த வழக்கு தமிழக அரசால் எடுத்துச் செல்லப்படும் என நம்புகிறேன்.
அப்படி நடத்தப்படும் போது உரிய சட்டக் கலந்தாய்வு செய்து எனது தரப்பையும் வழக்கில் இணைத்துக் கொள்வேன். ஒருபோதும் சோர்ந்துவிட மாட்டேன். இன்னும் வேகமெடுத்து எனது போராட்டத்தைத் தொடருவேன். மிகக் குறிப்பாக சின்னசாமி அவர்களும் அன்னலட்சுமி அவர்களும் தண்டனை பெற வேண்டும். அதுதான் சங்கருக்குரிய குற்றவியல் நீதியாக இருக்கும். என் சங்கருக்கு உரிய நீதி கிடைக்கும் வரை சட்டப் போராட்டத்தை இன்னும் முனைப்புடன் கவனமெடுத்துத் தொடர்வேன்” என்று கூறியுள்ளார்.
சங்கர் கொலைக்கு நேரடிப் பொறுப்பானவர்கள் முற்காரணமானவர்கள் இப்போது ஆயுள்தண்டனை பெற்றவர்களா அல்லது விடுதலை செய்யப்பட்டிருப்பவர்களா என்று கேள்வி எழுப்பியவர், “எனது பெற்றோர் தண்டனைக்குரியவர்கள் இல்லை என்றால் சங்கர் இன்று என்னோடு இருந்திருப்பான். இந்த வழக்கே தேவைப்பட்டிருக்காதே. சின்னசாமி, அன்னலட்சுமி ஆகியோருக்கு உரிய தண்டனை பெற்றுத் தரும் வரை ஓய்ந்துவிடமாட்டேன்” என்றும் கௌவுசல்யா குறிப்பிட்டுள்ளார்.
எழில்

கருத்துகள் இல்லை: