வெள்ளி, 26 ஜூன், 2020

ஜே அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன் முதல்வர் எடப்பாடியின் குற்றச்சாட்டுக்கு பதில்


முதல்வரே உங்க வேலையப் பாருங்க: அன்பழகன் சீட்டில் அமர்ந்த மகன்! மின்னம்பலம் : முதல்வரே உங்க வேலையப் பாருங்க: அன்பழகன் சீட்டில் அமர்ந்த மகன்!
திமுக சென்னை மேற்கு மாசெவும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஜூன் 10 ஆம் தேதி காலமானார்.
அதுமுதல் கொண்டு அதிமுக அமைச்சர்களும், முதல்வரும் கூட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் ஒருங்கிணைவோம் வா திட்டத்தால்தான் ஜெ. அன்பழகன் மரணமடைந்தார் என்று விமர்சித்தனர். இதற்கு திமுக தரப்பில் பதில் தரப்பட்ட நிலையில் முதல் முறையாக ஜெ. அன்பழகனின் குடும்பத்தில் இருந்து முதல்வருக்கு எதிரான குரல் வெடித்துள்ளது.

அன்பழகனின் 16 ஆவது நாள் நிகழ்ச்சி நேற்று அவரது இல்லத்தில் நடந்தது. சமுதாய முறைப்படி 16 ஆம் நாள் வரை அமைதியாக இருந்த அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன் நேற்று இரவு ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
அதில், “வணக்கம். நான் ராஜா அன்பழகன் பேசுறேன். இன்று என் தந்தை மறைந்து 16 ஆம் நாள். இன்று மதியம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கொரோனாவால் திமுக ஒரு எம்.எல்.ஏ.வை பலிகொடுத்துவிட்டது என்று பேசியிருக்கிறார். அடிமட்ட மக்களுக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளை அவர்களின் இல்லம் சென்று வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை கொச்சைப்படுத்துவதோடு, இந்தத் திட்டம் வெற்றிபெற்றுவிட்டது என்ற வயிற்றெரிச்சலால்தான் இப்படிப் பேசிக் கொண்டிருக்கிறார் முதல்வர்.
இன்று காவலர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழக்கிறார்கள். அப்படியென்றால் அதற்கெல்லாம் அரசாங்கம்தானே பொறுப்பு? அரசாங்கத்தின் பொறுப்பில்லாத காரணத்தால்தானே அவர்கள் உயிரிழந்தார்கள். இதை ஒத்துக்குறீங்கள்ல? நீங்க செய்ய வேண்டிய வேலையை நாங்க செஞ்சுக்கிட்டிருக்கோம். எங்க தலைவர் செஞ்சுக்கிட்டிருக்காரு. அதை உங்களுக்குக் பொறுத்துக்க முடியலை. எங்களைப் பாத்துக்கவும், எங்க குடும்பத்தைப் பாத்துக்கவும் எங்க தலைவர் இருக்காரு. தயவு செய்து இந்த மாதிரி பேட்டி கொடுக்குறது, அறிக்கை கொடுக்குறது இதெல்லாம் விட்டுட்டு மக்களை கொரோனாவுலேர்ந்து பாதுக்காக்க என்ன பண்ணனுமோ அதைப் பண்ணுங்க. எங்க தலைவரைப் பத்தி பேசிக்கிட்டிருக்க இது நேரம் கிடையாது. இது சட்டசபை கிடையாது. உங்க வேலைய நீங்க பாருங்க. எங்க வேலைய நாங்க பார்க்குறோம். நன்றி” என்று தெளிவாக அரசியல் ரீதியாக தமிழக முதல்வருக்கு பதில் கொடுத்திருக்கிறார் அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன்.
அதேநேரம் அன்பழகனின் தம்பி ஜெ. கருணாநிதியும் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.அதில், “தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்திருக்கிறது. என் அண்ணன் மறைவு என் குடும்பத்துக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே இழப்பு. இன்னும் அவர் எங்களோடுதான் இருப்பதாகவே நாங்கள் நினைக்கிறோம். எங்கள் குடும்பத்துக்கு மூத்தவராக இருந்து எங்களை வழி நடத்தினார். என் அரசியல் வாழ்க்கைக்கும் அவர்தான் வழிகாட்டி. அவர் எந்த இயக்கத்துக்காக பாடுபட்டாரோ அந்த வழியில் நாங்கள் எங்கள் குடும்பமும் கடைசி வரை செயல்பட்டு அவர் புகழ் பரப்பிக் கொண்டே இருப்போம். கொடிய கொரோனா நோயில் இருந்து காத்துக் கொள்ள தனிமையாக இருங்கள். நம் குடும்பத்தை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பாய் இருங்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார் திநகர் பகுதிச் செயலாளரான ஜெ. கருணாநிதி.
அன்பழகனின் 16 ஆம் நாள் நினைவு நிகழ்ச்சி முடிந்ததும் அவரது மகனும், அவரது தம்பியும் தனித்தனியே வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள். இதன் அடுத்த கட்டமாக இன்று (ஜூன் 26) காலை சென்னை தி.நகர் பஸ் நிலையம் பின் புறம் இருக்கும் சென்னை மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்துக்கு ராஜா அன்பழகன் சென்று, தன் தந்தை அன்பழகனின் இருக்கையில் அமர்ந்திருக்கிறார். அதைப் புகைப்படம் எடுத்து அவரது ஆதரவாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். இதைக் குறிப்பிட்டு, ‘உங்கள் அப்பாவின் கழகப் பணியை தொடர வாழ்த்துகள்’ என்று பலரும் சமூக தளங்களில் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து திநகர் உடன்பிறப்புகளிடம் பேசினோம்.
“ஜெ. அன்பழகன் மாவட்டச் செயலாளராக இருந்தபோது கட்சி அலுவலகத்தை தன் சொந்த இடத்தில்தான் வைத்திருந்தார். இந்த அலுவலகம்தான் சென்னை மேற்கு மாவட்ட திமுகவின் முகவரியாக இருந்திருக்கிறது. இந்த அலுவலகத்துக்கு கலைஞர் வந்திருக்கிறார், தளபதியும் வந்திருக்கிறார்.
இந்த நிலையில், தன் அப்பாவுக்குச் சொந்தமான அலுவலகம் என்ற வகையில் ராஜா அன்பழகன் அந்த அலுவலகத்துக்கு வந்து அப்பாவின் இருக்கையில் அமர்ந்திருக்கிறார். ஆனால் அது கட்சி அலுவலகமும் கூட, அந்த சீட் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளருக்கான சீட். இந்த நிலையில் தற்போது இளைஞரணியில் இருக்கும் ராஜா அன்பழகன் எந்த வகையில் அங்கே சென்று அமர்ந்திருக்கிறார் என்பது விவாதத்துக்குரிய விஷயம்தான். மாவட்டச் செயலாளர் பதவியை தனக்குத் தருமாறு அவர் தலைமைக்கு மறைமுகமாக கோரிக்கை வைக்கிறாரா அல்லது தலைமையின் சிக்னல் கிடைத்த பிறகே வந்து தந்தையின் சீட்டில் அமர்ந்திருக்கிறாரா என்பது கட்சியினர் மத்தியில் பேச்சாக இருக்கிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வீடியோ மூலம் பதில் அளித்துவிட்டு மறுநாள் கட்சியின் மாவட்ட அலுவலகத்துக்கு சென்று மாசெ சீட்டில் ராஜா அன்பழகன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தால் ஏதோ நடப்பதாகவே தோன்றுகிறது” என்கிறார்கள்.
-ஆரா

கருத்துகள் இல்லை: