வெள்ளி, 26 ஜூன், 2020

அமரர் வி பி சிங் : என் வாழ்நாள் முழுவதும் கலைஞருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன்

இந்திய அரசியலில் மிக உயர்ந்த தலைவர்களில் ஒருவர் கருணாநிதி . ஏழைகள் சமுகத்தின் அடிநிலையில் உள்ள மக்களின் குறைகளை கேட்பதற்காக அவருடைய வீட்டு கதவும் காதுகளும் எப்போதும் திறந்தே இருக்கும் . சமுக நீதிக்கான பயணத்தில் எனக்கு உறுதியான கூட்டாளியாக அவர் திகழ்ந்தார். தன்னுடைய ஆட்சியையும் இழக்க தயாராக இருந்தார் . அதற்காக என் வாழ்நாள் முழுக்க அவருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன்! சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிறந்தநாள் (ஜூன் 25)
Govi Lenin : பிரதமர் பொறுப்பை ஏற்ற பிறகு 1990ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னைக்கு வருகிறார் வி.பி.சிங். தமிழகத்தின் முதல்வர் பொறுப்பில், கலைஞர். புதுப்பிக்கப்பட்ட மீனம்பாக்கம் விமான நிலையத்தின் திறப்பு விழா. (கண்ணாடி உடைந்துவிழுந்து கின்னஸ் சாதனை செய்யும் இந்த கட்டடம் அல்ல. அதற்கு முந்தையது).
விழாவில் முதல்வர் பேசும்போது, பன்னாட்டு முனையத்திற்கு அண்ணா பெயரையும், உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயரையும் சூட்ட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறார். பிரதமர் வி.பி.சிங் பேசும்போது, முதல்வரின் கோரிக்கையை ஏற்று, ‘அண்ணா பன்னாட்டு முனையம்’, ‘காமராஜர் உள்நாட்டு முனையம்’ எனப் பெயர் சூட்டப்பட்டுவதாக அந்த மேடையிலேயே அறிவித்ததுடன், “கலைஞர் அவர்களே.. இனி உங்கள் மாநிலத்தின் கோரிக்கைக்காக நீங்கள் டெல்லி வரைக்கும் வரவேண்டியதில்லை. சென்னையிலிருந்தே போன் செய்யுங்கள். நிறைவேற்றுகிறோம்” என்றார்.


தமிழக வேளாண் நிலங்களின் தாகம் தணிக்க, காவிரி நடுவர் மன்றம் அமைக்கவேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியவரும் வி.பி.சிங்தான். இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வந்த இந்திய அமைதி காப்பு படையைத் திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, அதனைத் திரும்பி வரச் செய்தவரும் அவரே. தமிழகத்தில் உள்ள திராவிட இயக்கங்கள்-சமூக நீதி அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, இந்தியா முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27% விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைக்கு கொண்டு வந்தவரும் வி.பி.சிங்கே. நாடாளுமன்றத்தில் பெரியார் பெயரை உச்சரித்த பெருமைமிகு பிரதமர் அவர்.

“மாநிலங்கள் தங்களுக்கான சட்டங்களை இயற்றுவதிலோ அவற்றை செயல்படுத்துவதிலோ எந்த விதத்திலும் மத்திய அரசை சார்ந்திருக்கவோ கட்டுபபட்டிருக்கவோ வேண்டியதில்லை. இதில் மத்திய அரசும் மாநில அரசும் ஒன்றுக்கொன்று இணையான அதிகாரங்கள் கொண்டவை” என அரசியலமைப்புச் சட்டத்தினை சுட்டிக்காட்டி, மத்திய-மாநில உறவுகள் குறித்து டெல்லியில் நடந்த மாநாட்டில் வலியுறுத்தியவர் வி.பி.சிங்.

தமிழ்நாட்டின் குரலாகவே அந்தப் பிரதமரின் குரல் ஒலித்தது. இன்று, நீட் தேர்வில் தொடங்கி, மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வரை அனைத்திலும் மாநிலத்தின் உரிமைகளைப் பறித்து, ஒடுக்கப்பட்டோர் நலன்களை மிதித்து, நிதி ஆதாரங்களை தன் வசமாக்கிக்கொண்டு, கூட்டுறவு வங்கிகளையும் திமிங்கல வாய்க்குள் விழுங்க நினைக்கும் மத்திய ஆட்சியாளர்களிடம் தமிழ்நாடு சிக்கியிருக்கிறது. இந்த நெருக்கடியான காலத்தில், அதிகம் நினைத்துப் பார்க்க வேண்டியவராக இருக்கிறார் வி.பி.சிங்.

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிறந்தநாள் (ஜூன் 25)

Govi Lenin

இன்று மாலை அவர் குறித்த காணொலி கருத்தரங்கம்

திருவள்ளுவர் ஆண்டு 2051 ஆனி 11

கருத்துகள் இல்லை: